

‘முருகா' - மூவினைகளையும் தீர்க்கும் முத்தமிழ் நாமம். உடலாக, உயிராக, அதை இயக்கும் சக்தியாகத் திகழ்பவன் முருகன். வாடிய பயிருக்கு வற்றாது நீர் ஊற்று பவன். அமிர்தமாய் உயிர்மூச்சு அருளும் மும்மூர்த்திகளின் வடிவமானவன். உலகத்து உயிர்களை எல்லாம் தனக்குள் ஒன்றிடச் செய்பவன்.
நினைக்கும்போதே உயிர் உருகச் செய்யும் ஆனந்த வடிவினன். நெஞ்சு இனிக்க, வாய் மணக்க, சொல்லச்சொல்ல இனிக்கும் நாமம் ‘முருகா'. அவனைப் பாடிக் களித்திடவே பற்பல ஞானிகள் பூமியில் அவதாரமெடுத்தனர். அவனை மெய்சிலிர்க்கப் பாடி, தன்னைப் பூரணமாக ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து, தான் அனுபவித்த ஆனந்தத் தேனை இசை வடிவாகப் பலர் இயற்றித் தந்திருந்தாலும், அதில் தன்னிகரில்லாமல் ஜொலிப்பது அருணகிரிநாதரின் திருப்புகழ்.முருகனின் முதல் அடி: தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும் திருப்புகழை தினசரி பாராயணம் செய்கிறார்கள் பக்தர்கள். இதில் உள்ள இசைத் தாளங்கள் எந்த ஓர் இசை நூலிலும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றவை. இதில் 1,334 இசைப் பாடல்கள் உள்ளன.
அவற்றில் 1,088 சந்த வேறுபாடுகள் உள்ளன. முருகன் அருளாலேயே அருணகிரிநாதர் இப்படி அற்புதமான பாடல்களை இயற்ற முடிந்தது. தவறான பாதையில் சென்று பல தீய செயல்களைச் செய்த அருணகிரிநாதர், கடைசியில் உலகை வெறுத்து, உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து திருவண்ணாமலை கோபுர உச்சியிலிருந்து குதித்தார்.
அப்போது கார்த்திகேயன் தன் கரங்களால் கனிவுடன் அவரைத் தாங்கிப் பிடித்தான். தன் கருணைப் பாதங்களைக் காட்டி அவரை ஆட்கொண்டான் முருகன். அருணகிரிநாதரிடம் ‘சும்மா இரு சொல் அற’ - என்று மௌன உபதேசத்தை முருகன் அருளினார். நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்கும் அவர் முன் மயில் மீது தோன்றி ‘உலகம் உய்யத் திருப்புகழ் பாடு' என்று கட்டளை இட்டான் கந்தன்.
‘வேதங்களாலும் போற்றுதற்கு அரிய உன் புகழை, படிப்பறிவில்லாத என்னால் எப்படி எழுத முடியும்?' என்று அருணகிரியார் திகைக்க, அவர் நாவில் தன் வேலின் நுனியால் ஓம் என்னும் மந்திரத்தை எழுதினான் முருகன். ‘செந்தமிழ் நாதனான முருகன் ‘முத்தைத் தரு' என்று அடியெடுத்துக் கொடுக்க, கடல் மடை திறந்த வெள்ளம்போல் திருப்புகழ் பொங்கிப் பிரவாகம் எடுத்தது. அதன்பின் வயலூருக்கு வா என்று முருகன் ஆணையிட, அங்கு சென்று ‘கைத்தல நிறைகனி' என்ற பாடலைப் பாடினார்.
தன்னிகரற்ற புகழ்: முருகனின் பெருமையும், பண்பு நலன்களையும், அவனின் அருளைப் பெறும் வழியையும் தன் பாடல்கள் மூலம் காட்டித் தந்தருளினார் அருணகிரியார். அவர் இயற்றிய ‘கந்தர் அலங்காரம்', ‘கந்தர் அநுபூதி', ‘கந்தர் அந்தாதி', ‘திருப்புகழ்' போன்றவை நமக்கு கந்தனின் கருணையைப் பெற்றுத் தருபவை. அன்றாட வாழ்வின் சலனங்களில் அல்லலுற்றுத் தவிக்கும் மக்களின் வேதனைகள், குழப்பங்கள், சலனங்களை நீக்கி, அவர்கள் மன அமைதியுடன், தூய்மையான வாழ்க்கை வாழ வழிகாட்டுவது திருப்புகழ்.
தலங்கள் தோறும் சென்று முருகனைத் தரிசித்து அங்கு திருப்புகழ் பாடி அருளி னார் அருணகிரிநாதர். இந்த உலகம் இறைவ னுடையது. அதில் வாழும் உயிர்கள் அவனின் திருக்கோயில். அவன் இதய வாசனாக, உடலை இயக்கும் உயிராக பக்தர்கள் உள்ளே குடியிருக் கிறான்.
அவன் அருளால் பக்தன் தன்னை உயர்த்திக்கொள்வதோடு, அறியாமையில் சிக்கி வாடும் ஜீவன்களையும் உயர்த்த வேண்டும். அருணகிரிநாதர் இறைவனின் பக்தர்கள் நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்று விரும்பு கிறார். செய்யும் செயல்களை முருகனுக்கே அர்ப்பணித்து, அவன் நினைவுடனேயே காரியங்கள் செய்ய வேண்டும் என்கிறார்.
மலை ஆறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின் நிலையான மாதவம் செய்குவேனோ இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே என்கிறார் அருணகிரியார். ஒவ்வொரு தலத்துக்கும் சென்று, அவனின் வீரத்தையும் புகழையும் தன் பாடல்கள் மூலம் விளக்குகிறார்.
24 திருப்புகழ் வைப்புத் தலங்கள்: முருகனின் திருவடி பட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலை திருப்புகழ். திருப் புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் அவன் அருள் நம்மைக் காக்கும் என்பது சத்திய வாக்கு. திருப்புகழ் தலங்கள் மொத்தம் 209 என்றும் 215 என்றும் சிலர் குறிக்கிறார்கள். 24 திருப்புகழ் வைப்புத் தலங்கள். சில தலங்களில் இரண்டு, மூன்று பாடல்களைக்கூடப் பாடியுள்ளார்.
முத்தமிழ் நாயகனாம் முருகனின் புகழ் பாடும் திருப் புகழைக் கற்றவர்கள் ஞானம், தெளிவு, நன்னடத்தை, எளிமை, பொறுமை, ஆகியவற்றுடன் அவனுக்கே தங்களை அடிமையாக்கிக்கொள்வார்கள். அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கும் நேராது. திருப்புகழைப் பாடுபவர்கள் ‘ஞானம் பெறலாம், நலம் பெறலாம் எந்நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம், மோனாவீடேறலாம் யானைக்கிளையான் திருப்புகழைக் கூறினாற்காமே இக்கூறு' என்கிறது நூற்பயன். முருகனின் புகழைப் பற்றிக் கூறிக்கொண்டே இருக்கலாம். முடிவில்லாத அமுதக் கடல் அது. அருணகிரிநாதர் முருகனைப் பாடிய தலங்களை அடுத்துவரும் வாரங்களில் தரிசிக்கலாம் வாருங்கள்.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ. பிரபா; gaprabha1963@gmail.com