

முற்காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா இவர்களோடு அனைத்துத் தேவர்களும் சிவபெருமானை வழிபடச் சிறந்த இடம் ஒன்றைத் தேடினார்கள். அப்போது வானில் இருந்து ஒரு குரல், ‘பிரம்மன் கையில் உள்ள தண்டத்தைக் கங்கை நதியில் விடுங்கள். அந்தத் தண்டம் எங்கே சென்று நிற்கிறதோ அதுவே சிறந்த இடம்” என அசரீரியாக ஒலித்தது.
அதன்படி பிரம்மன் தன் கையில் இருந்த தண்டத்தைக் கங்கையில் விட, அது அப்படியே மிதந்து கடலில் சென்று தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தை அடைந்து அங்கிருந்து ஆற்றின் வழியே எதிர்த்து மேற்குத் திசை நோக்கிச் சென்று திருப்புடைமருதூரில் நிலைபெற்றது.
அந்த இடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், சரஸ்வதி, மகாலட்சுமி, தேவாதி தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்தப் பிரம்ம தண்டத்தையும் சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து வணங்கி சிவபெருமானின் அருளைப் பெற்றுத் தேவலோகம் திரும்பினார்கள்.
ஒரு முறை இந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகி, மண்ணில் வாழச் செய்தது. இதனால், இந்திரன் துயர் கொண்டான். அவனது உடல் கறுத்து மயங்கி வஜ்ராயுதம் கையை விட்டு நழுவ மனம் திகைத்தான். பின்னர், பித்தன் போலத் திரிந்து மலை, காடு, சோலை, நகரம் என அலைந்து திரிந்து இறுதியில் தாமிரபரணி கரைக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷம் மாயமாக நீங்கியது. உடனே மருதமரமாக ஒரு பக்கம் நின்றுகொண்டு சிவபெருமானை வேண்டி தவம் செய்தான்.
இந்நிலையில் தேவர்கள் எல்லாரும் கயிலைக்குச் சென்று நந்திநாதனைப் பணிந்து போற்றி ஈசனிடம், “ஐயனே விருத்திராசுரனைக் கொன்றதால், இந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் தொடர்ந்தது. அவன் அஞ்சி தற்போது தாமிரபரணி கரையில் மருதமரமாக நிற்கிறான். நாங்கள் இந்திரன் இல்லாமல் தவிக்கிறோம். நாயகனே அருள் கூர்ந்து இந்திரனின் துயரத்தை நீக்கி அருள்க” என்றனர்.
அதற்கு சிவபெருமான் தேவர்களை நோக்கி, “இந்திரனை உங்களது உலகுக்கு அனுப்புவோம். நீங்கள் செல்லுங்கள்” என்று அனுப்பிவிட்டு கணங்கள் சூழ எருது மீது ஏறி பொருநைக் கரைக்கு வந்து மருதமரமாக நின்ற இந்திரன் ஊடே அழகிய லிங்கமாகக் காட்சி தந்தார்.
மேலான கதி அடைய: தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர். இந்திரனாகிய மருதமரத்தின் ஊடே எழுந்த சுந்தரலிங்கத்தை இந்திரன் தினமும் தாமிரபரணியில் நீராடி பலவித அபிஷேகங்கள் செய்து புஷ்பத்தால் பூஜித்து வந்தான். இவ்விதமாக வேத விதிப்படி பூஜித்துவந்த இந்திரனுக்கு ஒருநாளில் சிவபெருமான் சூரிய ஒளிபோல் தோன்றினார்.
இந்திரனும் கண்கள் குளிர சர்வேஸ்வரனைக் கண்டு ஆடிப்பாடி போற்றித் துதித்து ஆனந்தக் கண்ணீர் பெருக நின்றான். இதைக் கண்ட சிவபெருமான் இந்திரனை நோக்கி, “உன் பாவம் எல்லாம் இனி தொலைந்தது. உன் பிரம்மஹத்தியைத் தீர்த்தோம். நீ முன் போல விண் சென்று அரசு செய்க” என்றதோடு, “இன்னும் உனக்கு வேண்டும் வரங்கள் கேள்!” என்றார்.
அப்போது இந்திரன் சிவபெருமானைப் பணிந்து போற்றி, “ஐயனே! இங்கு தீர்த்தம் மகிழ்ந்தாடியவர்களுக்கு உன் பொன்னடி தந்தருள வேண்டும். உனக்கு பூஜை செய்வோர், விழா செய்வோர், உனது அடியார்களுக்கு அன்பு செய்வோர், மருதுக்கு நீர் வார்ப்போர் ஆகியோரின் பாதகங்கள் எல்லாம் அகன்று மேலான கதியை அடைய வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். சிவபெருமானும், “அவ்வாறே ஆகுக!” என்று கூறி ஆசி வழங்கினார்.
இந்திரன் மருதமரமாக நிற்க அதன் ஊடே சிவபெருமான் லிங்கமாகத் தோன்றி அருள் செய்தமையால் இத்தலத்துக்குத் திருப்புடைமருதூர் என்று பெயர் வந்தது. இங்குள்ள தீர்த்த கட்டங்களில் தைப்பூச நாளில் நீராடுவோர், மருதூர் வாழும் நாறும்பூநாதனைப் போற்றுவோர் தீவினை அகன்று இன்பம் மிகுந்த மோட்ச வீட்டைப் பெறுவர். எனவே, திருப்பங்கள் வேண்டுவோர் திருப்புடைமருதூர் ஈசனை வணங்கி வாழ்வில் இன்பம் பெறலாம்.
பெருங்கருணை நாயகி கோமதி: தாரகா சக்தி பீடமாக உள்ள இத்தலத்தின் இறைவி அருளே வடிவானவள். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. இங்குள்ள நடராஜர் சிலை ஓம் வடிவ திருவாசியுடன் அமைந்துள்ளது. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.
இக்கோயிலின் கோபுரம் ஐந்து நிலைகளையும், 11 கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தின் தளங்களில் மியூரல் - டெம்பரா வகை சுவரோவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் தொடர்பான ஓவியங்களும் சீன நாட்டு வணிகர்களின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன.
ராஜகோபுர திருப்பணி: சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு கோமதி அம்பாள் சமேத ஸ்ரீநாறும்பூநாத சுவாமி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள திருப்புடைமருதூரில் உள்ளது. இந்தக் கோயிலில் பிப்ரவரி 18 அன்று இவ்வருடத்தின் முதல் மகா பிரதோஷ வழிபாட்டோடு, ராஜகோபுர திருப்பணி நடைபெறுவதற்கு வேண்டுதல் விழா நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் 28 கி.மீ. தொலைவில் வீரவநல்லூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் திருப்புடைமருதூர் ஆலயம் உள்ளது. காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
- மீனாக்ஷி ரவிசேகர்; rsaikaartik@gmail.com