வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 16: சொர்க்கத்தின் திறவுகோல்

வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 16: சொர்க்கத்தின் திறவுகோல்
Updated on
2 min read

வள்ளலாரின் உரைநடை நூல்களில் ஒன்றான ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’, ஏழு அத்தியாயங்களாக எழுத நினைத்து மூன்றாவது அத்தியாயத்துடன் நின்று போன முற்றுப்பெறாத நூல். வினா-விடை வடிவில் அமைந்தது.

கடவுளை அடையும் வழி எதுவென வினவி, உயிர்களின் மீது இரக்கம்கொள்வது ஒன்றே வழியென்று பதிலுரைக்கிறது இந்நூல். ஏறக்குறைய 60 பக்கங்கள் கொண்ட இந்நூல், அருட்பாவின் வடித்தெடுத்த சாரம். படிகமென மிளிரும் மணித்திரள். அருட்பா பதிப்புகளில், அதன் ஒரு பகுதியாக இந்நூலும் சேர்த்து பதிப்பிக்கப்பட்டுவந்துள்ளது.

ஏன் இரக்கம் காட்ட வேண்டும்? - உயிர்களின் மீது ஏன் இரக்கம் காட்ட வேண்டும் என்று மற்றொரு கேள்வியையும் இந்நூல் எழுப்புகிறது. அதற்கான பதில், உயிர்கள் யாவும் இயற்கையால் படைக்கப்பட்டவை. அதனால், ஒன்றுக்கொன்று சகோதரத்துவம் கொண்டவை. உடன்பிறந்தார் துன்பப்படுகையில், வருத்தப் படுவதுதானே ஒவ்வொரு சக உயிரின் இயல்பாக இருக்கமுடியும்?

ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் பரம், அபரம் என்று இரு வகை உண்டு. பசி நீக்கலும் கொலை நீக்கலும் பர ஜீவகாருண்யம். தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம் ஆகியவற்றால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்வது அபர ஜீவகாருண்யம். தண்ணீர் கொடுக்க யாரும் முன்வராவிட்டாலும் ஏரி, குளங்கள் இருக்கின்றன.

பிணியால் வாடும் இவ்வுடலைச் சில நாட்களுக்கேனும் உயிரோடு வைத்திருக்க முடியும். எனவே, பசி நீக்கலே சிறந்தது. பசியை நீக்கும் தயை கொண்டவன் பிற உயிர்களைத் துன்பங்களிலிருந்து காக்கவும் செய்வான். பசி நீக்கலும் கொலை நீக்கலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாய் தோன்றினாலும் அடிப்படையில் அவை இரண்டும் ஒன்றுதான்.

பசி கண்டு துடிப்பவன் கொலைகாரனாக வாய்ப்பில்லை. கொலைக்கு அஞ்சுபவன் பசியைப் பார்த்து பரிதவிப்பான். பசியின் அவத்தைகளைப் பட்டியலிடுகிற ‘ஜீவ காருண்ய ஒழுக்கம்’, பசி நீக்கலைப் புண்ணியம் என்று போற்றுவதோடு அந்நற்காரியத்தில் ஈடுபடுவோரை இறைவனுக்கு இணையாகவும் வைத்துச் சிறப்பிக்கிறது.

குடும்பத்தாரைப் பசியில் தவிக்க விட்டு ஊராருக்கு உணவிட்டு புண்ணியம் தேடிக்கொண்டுவிட முடியாது. அதேபோல, குடும்பத்தாரை மட்டும் காப்பாற்றி, அயலாரைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும் புண்ணியம் ஆகாது. எனவே, இரு திறத்தாரையும் பசியின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதற்கு, குடும்பச் செலவுகளைக் கூடியமட்டும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றொரு உபதேசத்தையும் வழங்கியுள்ளார் வள்ளலார்.

தம் குடும்பத்தாரின் பசியையே போக்க இயலாதவர்களும் இருக்கிறார்களே? அவர்கள், தங்களால் இயலாவிட்டாலும் குறைந்த பட்சம் தங்களுக்குத் தெரிந்தவர்களைக் கொண்டேனும் தேவைப்படுவோர்க்கு உதவிகள் செய்திட இயலும். எனவே, வள்ளலாரின் உபதேசம் யாவர்க்குமானது. அங்கே விதிவிலக்குகள் என்று எவருமில்லை. ஜீவகாருண்யத்தைத் தவிர்த்த இறைவழிபாட்டாளர்கள் இறைவனைச் சேரவே முடியாது என்பது அவரது திட்டவட்டமான முடிபு.

துயரங்களிலிருந்து காக்கும் கவசம்: வாய்ப்பு உள்ளோர் மனிதர்களின் பசியைப் போக்குங்கள், வசதி படைத்தோர் விலங்குகளின் பசியையும் போக்குங்கள் என்கிறார் வள்ளலார். இல்ல விழாக்கள் அனைத்தும் அன்னதானத்துடன் அமைவதே சிறப்பு. சமயச் சடங்குகள் பெரிதும் தானங்களை நோக்கியதே.

வள்ளலார் பரிந்துரைக்கும் தானமோ ஊர், பேர், யார் என எதுவும் கேட்காது எல்லோர்க்கும் அளிக்கும் தானம். பசி நீக்கலே கடவுளின் விளக்கம், அதுவே கடவுள் இன்பமும்கூட. அதுவே எதிர்ப்படும் துயரங்களிலிருந்து காக்கும் கவசம் என்று உயிர் இரக்கக் கொள்கையின் பெருமை களை இந்நூல் முழுவதும் பேசியுள்ளார் வள்ளலார்.

இதே நூலில், மறுபிறவிக் கோட்பாட்டின் மீதும் சொர்க்கம் - நரகத்தின் மீதும் வள்ளலாருக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கையும் வெளிப்படுகிறது. எத்தனை புண்ணியங்களைத் தேடிக்கொண்டாலும், கையில் ஜீவகாருண்யம் என்னும் திறவுகோல் இல்லாவிட்டால், சொர்க்கத்தின் வாசலில் காத்திருந்து திரும்பத்தான் வேண்டும் என்கிறார் வள்ளலார். அந்தத் தங்கச்சாவி கிடைத்தால், விண்ணில் சொர்க்கம் கிடைத்துவிடும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் வாழும் இந்தப் பூமியே சொர்க்கமாகிவிடும்.

(ஜோதி ஒளிர்ந்தது)

பிப்ரவரி 5 - தைப்பூசம்

- செல்வ புவியரசன்; selvapuviyarasan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in