

பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம் என்பது ஸ்ரீ வியாச பகவான் என்று அழைக்கப்படும் பாதராயண மகரிஷி அருளிச் செய்த பிரஹ்ம சூத்திரத்துக்கான உரையாகும். ‘பிரஹ்மம்’ என்பதற்கு ஒப்புயர்வற்ற பொருள் அல்லது மற்றை அனைத்தையும் வளர்க்கின்ற பொருள் என்பது அர்த்தமாகக் கொள்ளப்படுகிறது. மேலும் தானாகவே தன்னை வெளிப்படுத்துதலும் ‘பிரஹ்மம்’ என்பதாக உணரலாம்.
ராமானுஜர் தனது ஸ்ரீபாஷ்யத்தில் ‘இயல்பாகவே தோஷங்கள் ஏதும் அற்றவனும், அளவிட முடியாத உயர்ந்த எண்ணற்ற இனிமையான மங்களகரமான குணங்களை உடைய புருஷோத்தமனே (ஸ்ரீமன் நாராயணன்) ‘பிரஹ்மம்’ என்ற பதத்தால் அறியப்படுகிறான்’ என்கிறார்.
இப்படிப்பட்ட பிரஹ்மம் குறித்து உபநிஷத்து களால் மட்டுமே அறிய இயலும். ஆனால் உபநிஷத்துகள் கடல் போன்று விரிந்து கிடப்பதால் அவற்றைக் கடைந்து அமிர்தம் போல பாதராயணர், பிரஹ்மசூத்திரமாக வெளிப்படுத்தினார். இவற்றை நாம் உணர்வதற்கு உரைகள் தேவைப்படுகின்றன.
பிரஹ்மசூத்திரத்துக்கு ஆதிசங்கர பகவத் பாதர், பகவத் ராமானுஜர், மத்வாச்சார்யர், பாஸ்கரர், நிம்பர்கர், வல்லபர் போன்றோர் உரை எழுதியுள்ளனர். சங்கரபாஷ்யம், மத்வ பாஷ்யம் என்று அவரவர் பெயரால் உரைகள் அழைக்கப்படும்போது, ராமானுஜர் எழுதிய உரை ‘ஸ்ரீபாஷ்யம்’ என்று அழைக்கப்படுகிறது.
பிரஹ்மசூத்திரம் 4 அத்தியாயங்களைக் கொண்டது. அவை ஸமந்வய அத்யாயம், அவிரோத அத்யாயம், ஸாதந அத்யாயம், பல அத்யாயம் ஆகும். ஒவ்வொரு அத்யாயமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாதமும் ஒரு மூல கருத்தை ஆராய்கிறது. ஒவ்வொரு பாதமும் பல அதிகரணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிகரணம் என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து ஏற்படும் சர்ச்சையை விளக்கி பின்னர் அது தீருமாறு ஒரு தீர்ப்பையும் அளிப்பதாகும்.
பாஷ்யம் உரைநடை வடிவில் உள்ளதாகும். ஒவ்வொரு அதிகரணம் தொடங்கப்படும்போதும், அதில் ஆராயப்படும் விஷயம் கூறப்படுகிறது. சூத்திரம், பொருள், விஷயம், சந்தேகம், பூர்வபக்ஷம், சித்தாந்தம் என்ற வகையில் ஒவ்வொரு சூத்திரத்துக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீபாஷ்யத்துக்கு (பிரஹ்மசூத்திரத்துக்கான பேருரை) எளிய நடையில் உரை எழுதியுள்ளார் அஹோபிலதாஸன் க.தரன். முதலில் வேதவியாசர் அருளிய பிரஹ்மசூத்திரத்தின் மூல மந்திரம் உள்ளது. பிறகு சூத்திரத்தில் உள்ள சொற்களுடைய மொழிபெயர்ப்பு, எளிய பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது.
விஷயம் என்ற தலைப்பில் சூத்திரத்தில் எந்த உபநிஷத் பகுதி ஆராயப்படுகிறது என்பதும், அதன் மையக் கருத்தும் விளக்கப்படுகிறது. பூர்வபக்ஷம் என்ற தலைப்பில் எதிர்வாதம் அல்லது மாற்றுக் கருத்து ஆராயப்படுகிறது. ஒவ்வொரு அதிகரணத்தில் ஆராயப்படும் விஷயத்துக்கு மாற்றுக் கருத்து, உரைப்பவர்களின் வாதங்கள் கூறப்படுகின்றன. மேலோட்டமாக அறிந்ததன் விளைவால் எழும் வாதமும் அதைத் தொடர்ந்து எழும் ஆட்சேபமும் (எதிர்வாதம் / மாற்றுக் கருத்து) எளிய நடையில் விளக்கப்படுகின்றன.
நிறைவாக ஒவ்வொரு அதிகரணத்தின் நிறைவிலும் பூர்வபக்ஷிகளின் வாதம் மறுக்கப் பட்டு, உண்மையான கருத்து நிரூபணம் செய்யப்படுகிறது. கடினமான கருத்துகளுக்கு ஆங்காங்கே எளிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஸ்ரீபாஷ்யத்தை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.