

தென்காசியில்தான் பீரப்பா பிறந்தார். நெல்லையில் மலர்ந்த வாடாத முல்லை மலர் பீரப்பா, தனது தமிழ் ஞான நறுமணத்தைக் குமரியின் தக்கலையில் வெளிப்படுத்தினார்.
மனித குலம் மாண்படைய பல்லாயிரம் ஞானப் பாடல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளார் பீரப்பா. அதில் ஞானப்புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப்பூட்டு, ஞானமணி மாலை, ஞானக் குறம், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, திருமெய்ஞான சரநூல், ஞான நடனம், ஞான முச்சுடர் பதிகங்கள் போன்ற பல பாடல்கள் பிரசித்தி பெற்ற பாடல்களாகும்.
ஞானப்புகழ்ச்சியின் 1ஆவது பாடலில் பீரப்பா இறைவனின் தூயநிலை குறித்து, இப்படிப் பாடுகிறார். அணுவையும் கடந்த நிலையில் அப்பாலுக்கு அப்பால் மிக நுட்பமாக எங்கும் ஏகமாய் நிறைந்து நின்று ஆட்சிசெய்கின்ற இறைவனே என்கிறார்.
விண்ணிலிருந்தும் மண்ணிலிருந்தும் தான் நாடியதை நாடியபடி உண்டாக்க அணுக்களை அணுஅணுவாக நகர்த்திக் கடத்தி தன்னுடையப் படைப்புகளை உலகில் தோன்றச் செய்கின்றான். ஏக இறைவனுக்கு வேறொறு ஒப்பும் உவமையும் கூற முடியாது என்பதை பீரப்பா,
“ஆறாறுக் கப்பா லணுவணுவாய் வந்துலகில்
வேறாரு மொப்பில்லா மேலோனே வீறான
புகழ்ச்சிது ஆவடியேன் புகலுதற்கு நீ மனதுல்
மகிழ்ச்சி தருவாயே மகிழ்ந்து - என்று பாடுகிறார்.
அதாவது ஒப்பு உவமை நோக்க முடியாத மேலான இறைவனே உனது புகழை, துஆ என்ற வேண்டுதலை நான் முறையாக அழகுறப் பாடுவதற்கு எனது மனம் மகிழும்படியாக ஞான உதிப்புகளை மகிழ்வுடனே நீ தந்திட வேண்டும் என பீரப்பா இதில் மெய்யன்புடனே இறைவனிடம் இரந்து கேட்பது நமது இதயங்களை மயில் இறகுகளால் மெல்ல வருடுவதைப் போன்று இனிமையைத் தருவதாக உள்ளது.
அடுத்து ஞான ரத்தினக் குறவஞ்சியின் 23ஆவது பாடலில், தன்னை யறியுந் தலமேது சொல்லடி சிங்கி ? -அது/ கண்ணிடையான நடுநிலை அல்லவோ சிங்கா! - எனக் கண்களின் நடு மையத்தில் உள்ள கண்மணியில் (eye ball -பாவையில்) ஞான ரகசியங்கள் புதைந்து இருப்பதை பீரப்பா இதில் நமக்குச் சொல்லித் தருகிறார்.
கண்மணியில் உள்ள இந்த நுட்பமான சிறிய புள்ளியைக் கொண்டே மனிதன் பிரம்மாண்டமான இந்த உலகைப் பார்க்கின்றான். இந்தப் பார்வையின் ஆற்றலை மனிதன் உள்முகப்படுத்தி பழகும்போதுதான் அவனது அகப் பார்வை செயல்படத் தொடங்குகிறது.
புறப்பார்வைக்கு தடங்கல் (மறைப்பு) உண்டு. ஆனால் அகப்பார்வை என்பது தடுப்பையும் ஊடுருவிப் பார்க்கும் தன்மை கொண்டது. அகப் பார்வையுடைய வர்கள் மட்டுமே தன்னை அறியும் வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்பதை பீரப்பாவின் இப்பாடல்களின் வாயிலாக நாம் அறிய முடிகிறது
திருமெய்ஞான சரநூலில் சுவாசத்தின் ரகசியங்கள் குறித்து பீரப்பா 30 பாடல்களைப் பாடியுள்ளார். அதில் 29வது பாடலில், “வேழத்தை (யானையை) தும்பியிலே (துதிக்கையில்) கட்டொண்ணாது (கட்ட முடியாது) என்கிறார்கள்.
சுவாசத்தை வலுக்கட்டாயமாகக் கும்பகம் செய்து (உள்ளடக்கி) வைப்பது கூடாது அது ஆபத்தானது. எப்படி யானையைத் தும்பிக்கையில் கட்டிப்போட முடியாதோ அப்படி சுவாசத்தை உடம்பில் வலுக்கட்டாயமாக உள்ளடக்கக் கூடாது. அது நிலைக்காது. அவ்வாறு மூச்சடக்கும் கும்பகப் பயிற்சியானது ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
எனவே, நாம் சாகாமல் இருக்க நம்மை நோக்கி வீசுகின்ற சுவாசக் காற்றை அமைதியுடன் கவனித்துப் பழக வேண்டும். சுவாசமானது இயல்பாகவே எவ்வித முயற்சியுமின்றி தானாகவே கும்பக நிலைக்கு வந்துவிடும் என்பதை பீரப்பா தனது சரநூலில் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
ஞானத்தின் மிக உயர்ந்த நிலை: குறிப்பாக சுவாசம் என்பது வெட்ட வெளியைச் சார்ந்தது. அதனை உணர முடியுமே தவிர, தொட்டுப் பார்க்க முடியாது. வெட்டவெளியானது இல்லாதது போலத் தோன்றினாலும் அதில்தான் உயிருக்கும் உடலுக்குமான அநேக ரகசியங்கள் அமைதியாக மூழ்கி இருக்கின்றன.
பிராணன் என்னும் உயிர் சக்தியை எவர் இயல்பாக ஓர் எழுத்து ஓசை நயத்துடன் விடாமல் பழகி தன் உடம்பினுள் அந்தச் சக்தியை நிலைபெறச் செய்கிறார்களோ அவர்களே சாகாவரம் பெற்ற சான்றோராக ஆகமுடியும் என்பதை பீரப்பாவின் இப்பாடல்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
- மு.முகம்மது சலாகுதீன்; ervaimohdsalahudeen@gmail.com