

இந்தியப் பெருநாட்டின் குடியரசு நாளில், நல்லோர் மனங்களில் எல்லாம் ஒருமைப்பாடு என்கிற ஒற்றை மந்திரமே ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் அந்தக் கருத்து உள்ளுறைந்து நிற்கும்போதிலும், திருத்தம் ஒன்றுக்குப் பிறகுதான் அச்சொல் அரசமைப்பின் முகப்பில் இடம்பெற்றது.
இந்தியத் தேசத்தின் ஒருமைப்பாட்டை விரும்பும் காந்தியர்களின் குரலாகச் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூல் அமைந்துள்ளது. கட்டுரை வகைமையும் இலக்கியமாகும் என்று சாகித்ய அகாடமி எண்ணியிருந்த நாட்கள் அவை.
எனவே, அந்நூலுக்கு அகாடமி பரிசும் கிடைத்தது. வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்று பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின. வள்ளலாரை அவரது வாழ்க்கையை, வாக்குகளை, அற்புதங் களைச் சுருக்கமாக அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்கும் ம.பொ.சி.யின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். சிலம்புச் செல்வருக்கு ‘அருட்பாச் செல்வர்' என்னும் பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்தார் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்.
வள்ளலாரின் ஒருமைப்பாடு எத்தகையது? அது இந்தியாவுக்குள் மட்டும் தனது எல்லையைச் சுருக்கிக் கொண்டுவிடவில்லை. ‘மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்று உலக மானிடரையெல்லாம் தழுவிக் கொண்டது. ‘யாவரும் கேளிர்’ என்பதுதானே தமிழர் மரபு. வள்ளலார் அதற்கும் ஒரு படி மேலே சென்று உலகுயிர்களையெல்லாம் தன் உயிரிரக்கக் கொள்கையால் தழுவிக்கொண்டார். எனவே, தேசம், மானுடம் என்பதோடு உயிர்கள் அனைத்துக்குமான முத்திறக் கொள்கையாக வள்ளலாரின் ஒருமைப்பாடு அமைந்துள்ளது.
பத்தில் ஐந்து
வள்ளலாரின் இந்த உலகுயிர்கள் ஒருமைப்பாடு கோட்பாட்டை ம.பொ.சி. விளக்கியுள்ளவிதம் கவனத்தில் கொள்ளத்தக்க ஒன்று. வள்ளலார், தனது அறுதியான கொள்கைகள் குறித்து எந்தக் கொள்கை விளக்கத்தையும் வெளியிடவில்லை. அவருடைய பாடல்களிலிருந்தும் உரைநடை நூல்களிலிருந்தும் அவருடைய சீடர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்தும் வெளிப்படுகிற கருத்துகளைத் திரட்டி வள்ளலாரின் கொள்கைப் பட்டியலை உருவாக்கியிருக்கிறார் ம.பொ.சி. ஓரிறை, உருவமில்லாக் கடவுள் எனத் தொடரும் அந்தப் பத்துக் கொள்கைகளில் சரிபாதி ஒருமைப்பாடு குறித்துப் பேசுவன.
(1) சாதி - சமய - வருண பேதங்களை அறவே விடுத்து, மொழி வழிப்பட்ட இனங்கள் - நாடுகளிடையே ஒற்றுமை கண்டு, ஆன்மநேய ஒருமைப்பாட்டை உருவாக்கல்.
(2) உலகம் முழுவதையும் ஒன்று படுத்தும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டினுக்கேயன்றி, இந்திய நாட்டில், மொழிவழி இனங்களிடையே சகோதர உணர்வை வளர்த்து, அவற்றிடையே உணர்வுபூர்வமான ஒருமைப்பாடு காணல்.
(3) உடைமையாளர் - வறுமையாளர் (பணக்காரர் - ஏழை) என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வைத் தொலைத்து, எல்லாரும் வயிராற உண்டு, உடம்பார உடுத்து வாழும் சமதர்ம சமுதாயத்தைப் படைத்தல்.
(4) ஆண் - பெண் என்கிற பால் வேற்றுமையின்றி மக்கள் எல்லாருக்குமே கல்வி அளித்தல். குறிப்பாக, ஞான மார்க்கக் கல்வியைப் பெண்களுக்கும் அளித்தல்.
(5) கருணையிலாத் துன்மார்க்கர் அரசியல் நடத்துவதை உலகெங்கணு மிருந்து ஒழித்து, அருள்நெறி வழிப்பட்ட சுத்த சன்மார்க்கர் ஆட்சி தோன்றச் செய்தல்.
அரசமைப்பின் தத்துவம்
இந்திய அரசமைப்பு அரசியல் உரிமைகளை மட்டும் பாதுகாக்க வில்லை; இதுவரையிலும் இந்தியத் துணைக்கண்டத்தில் பன்னெடுங்கால மாகப் பின்பற்றப்பட்டுவரும் விழுமியங் களையும் பேசுகிறது. அத்தகைய விழுமியங்களில் ஒருமைப்பாடு என்பதும் பாலினச் சமத்துவம் என்பதும் சாதி, சமயப் பாகுபாடுகளைத் தவிர்த்தல் என்பதும் பொருளாதார விடுதலை என்பதும் நல்லாட்சி என்பதும் அருட்பாவிலும் ராமலிங்க அடிகளாரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரரான ம.பொ.சி.யின் பார்வையில், அருட்பாவுக்கு ஓர் அரசியல் விளக்கம் கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அவரது நூலுக்கு, இன்றைய அரசியல் சூழல் புதுப் புது அர்த்தங்களையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அரசியல் தளத்தில் ஒலிக்கும் ‘ஒருமைப்பாடு’ என்னும் லட்சிய முழக்கம், ஆன்மிகத் தளத்தில் உன்னத மந்திரமாகவும் நிலைபெறட்டும்.
(ஜோதி ஒளிரும்)
- செல்வ புவியரசன்; selvapuviyarasan@gmail.com