ஆன்மிக நூலகம்: ரசிகர்களுக்கு ஓர் இசைக்கொடை!

ஆன்மிக நூலகம்: ரசிகர்களுக்கு ஓர் இசைக்கொடை!
Updated on
1 min read

கர்னாடக இசையில் பொதிந்திருக்கும் கலா அம்சங்களைப் புரிந்துகொண்டு ரசிப்பதற்காக பிஆர்சி ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. எளிமையான தமிழில் கர்னாடக இசையில் சுடர்விடும் நயங்களையும் நுணுக்கங்களையும் விரிவாக அலசுகிறது இந்நூல்.

கர்னாடக இசையைக் கற்றுக்கொடுப்பதற்கு நிறைய புத்தகங்கள் பலரால் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், கர்னாடக இசைக் கச்சேரியை ரசிப்பதற்கு ஒரு ரசிகனை எப்படித் தயார்படுத்தலாம் என்பதை ஆதி முதல் அந்தம் வரை மிகவும் விரிவாகக் கற்றுத் தருவதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை அர்த்தம் சிதையாமல் தமிழாக்கம் செய்வது சவாலான பணி. அதைத் திறம்படச் செய்துள்ளார் ஆர்.நாராயணன்.

பஜனை பத்ததியின் தொடர்ச்சியாகத் தற்போது புழக்கத்திலிருக்கும் கச்சேரி பாடும் முறையை வடிவமைத்துத் தந்தவர் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார். ஆனால், அவருக்கும் முன்பாக இருந்தவர்கள் எப்படியெல்லாம் பாடினார்கள், ஒவ்வொரு சாகித்யகர்த்தாக்களிடமும் ஒளிந்திருக்கும் திறமைகள், கச்சேரிகளில் பிரதானமாகப் பாடப்படும் உருப்படிகள் என்னென்ன, அவற்றைப் பாடும் முறை, வரலாற்றின் அடிப்படையில் கச்சேரிக்கான மேடைகளின் அமைப்புகள் எப்படியெல்லாம் மாறியிருக்கின்றன என்பதுபோன்ற ஏராளமான தகவல்கள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன.

கச்சேரியில் ஸ்ருதி சேர்க்கும் பூர்வாங்கமான நடைமுறையில் தொடங்கி, ஆலாபனை, நிரவல் ஸ்வரம், கமகங்களில் வெளிப்படும் நுட்பம், கற்பனா ஸ்வரங்கள் பாடுவது, பல்லவியை அணுகும் முறை, காலப்பிரமாணங்கள், ராகம், தானம் பாடும் முறை, தனி ஆவர்த்தனம், மனோதர்மம் போன்றவற்றைப் பற்றிய விரிவான விளக்கம் இந்தப் புத்தகத்தில் சீராகப் பதிவாகியுள்ளது.

இந்த நூலில் இன்னொரு சிறப்பாக தியாக ராஜரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 110 கிருதிகளில் அவர் கையாண்டிருக்கும் இசை சார்ந்த சிறப்பம்சங்களை விளக்கியிருக்கும் விதம் ரசிகர்களுக்கான இசைக் கொடை என்றே சொல்லலாம்.

ராக சுதா

(கர்நாடக இசையை புரிந்துகொள்வது)

மூலம்: பிஆர்சி அய்யங்கார், தமிழாக்கம்: ஆர். நாராயணன்

விலை: ரூபாய் 350. நூல் கிடைக்குமிடம்:T-7, C செக்டார், AWHO காலனி, சிக் சாலை, செகந்திராபாத் - 500 009. செல்: 9490433306, (சென்னையில் பெறுவதற்கு: என்.வத்ஸன் 9094024546.)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in