

குடும்பத்தின் மூத்த தலைமுறையினர், பெற்றோர், குரு அனைவரின் ஆசியும் ஒருவருக்கு ஒருங்கே கிடைப்பது அரிது. அப்படியொரு அரிதான வாய்ப்பு குமாரி சேத்தனாவுக்கு அவரின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் கிடைத்தது. குமாரி சேத்தனா அவரின் ஐந்து வயதிலிருந்து பரதநாட்டியப் பயிற்சியை `கலைஞானமணி' ரஸியாவிடம் எடுத்துவந்ததன் பயனை அவரின் பரதநாட்டிய அரங்கேற்றத்தின் மூலமாக அறுவடை செய்தார் என்றே சொல்லலாம். சேத்தனாவுக்கு நடனத்தைத் தவிர ஓவியமும் போட்டோகிராபியும் பிடித்தமான விஷயங்களாம்.
திரிவேணி கலா கேந்திராவின் சார்பாக அண்மையில் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடந்த சேத்தனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு இயக்குநர் பாரதிராஜா, நடிகரும் பரதநாட்டியக் கலைஞருமான சுகன்யா ரமேஷ், பரதநாட்டியக் கலைஞர் சண்முகசுந்தரம், இயக்குநர் பார்த்திபன், நடிகர் சிவா, தயாரிப்பாளர் கே.ஆர். ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அன்றைய நடன நிகழ்ச்சிக்கு குரு ரஸியாவின் நட்டுவாங்கம், டாக்டர் கே.ராஜமாணிக்கம் பாட்டு, புதுவை எம். பிரசன்னாவின் மிருதங்கம், டி.ஸ்ரீனிவாசனின் வயலின், அப்துல் ரெஹானின் குழலிசை ஆகியவை பக்கபலமாக அமைந்தன. சம்பிரதாயமாக விநாயகர் துதிப்பாடலுக்குப் பின், டாக்டர் கே. ராஜமாணிக்கத்தின் ஆபேரி ராக புஷ்பாஞ்சலியிலேயே சேத்தனாவின் சம்பிரதாயத்தோடு அமைந்த அடவுகள், நல்லதொரு நிகழ்ச்சிக்கு நம்மைத் தயார்ப்படுத்தின.
தஞ்சை நால்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட பரதநாட்டியத்தின் அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் அன்றைய நிகழ்ச்சியில் சேத்தனா மாறாத புன்னகையுடனும் வற்றாத அபிநய முத்திரைகளுடனும் ஆடியது மகிழ்ச்சியைத் தந்தது. தன்னுடைய மாணவருக்கு ஏற்ற உருப்படிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த நடன ஆசிரியர் ரஸியாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பெரும்பாலான குழந்தைகள் அரங்கேற்றத்தின் போது நன்றாக நடனம் ஆடுவார்கள். ஆனால் சம்பிரதாயங்களை சரியாகச் செய்யமாட்டார்கள். பெரிய மேடையின் ஏதாவது ஒரு மூலையில் ஆடிக் கொண்டிருப்பார்கள். அல்லது, மேடையின் நடுவிலேயே இருப்பார்கள். இதுபோன்ற எதுவும் சேத்தனாவின் நடனத்தில் இல்லை. சேத்தனா மிகவும் நன்றாக மேடையின் நீள அகலத்தை முழுமையாகப் பயன்படுத்தி ஆடினார். அபிநயங்களில் லாகவமும் தாளக்கணக்குகளில் அவரின் கால் அசைவுகளும், சமநிலையும் துரிதமான காலப்பிரமாணங்களில் சமயோசிதமும் அபாரமாக அவரின் நாட்டியத்தில் வெளிப்பட்டன.
இந்த அரங்கேற்றத்தையும் தாண்டி, கலை உலகத்துக்கு இன்னொரு நல்ல கலைஞர் கிடைப்பார் என்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புகழ் பெற்ற கலைஞர்கள் மனந் திறந்து பாராட்டினர். நடனக் கலைஞரான சுகன்யா, சேத்தனாவின் (அரைமண்டி போடுவது) துள்ளியமான நாட்டிய சம்பிரதாயங்களை வியந்து பாராட்டியது, வளரும் கலைஞரான சேத்தனாவுக்குக் கிடைத்த பேறு.
பாபநாசம் சிவனின் நாட்டைக்குறிஞ்சி வர்ணத்தைவிட, நீலாம்பரி ராகத்தில் அமைந்த ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யரின் `எப்படித்தான் என்னுள்ளம் புகுந்து என்னை அடிமைகொண்டீரோ சுவாமி' என்னும் பதத்துக்கு அற்புதமாக ஆடிய சேத்தனா, ரசிகர்களின் உள்ளத்தில் புகுந்துவிட்டார் என்பதுதான் உண்மை!