சண்டையை உங்களால் தவிர்க்க முடியும்!

சண்டையை உங்களால் தவிர்க்க முடியும்!
Updated on
1 min read

வாசற்படி, சண்டை இரண்டும் இல்லாத வீடே கிடையாது என்கிற வாசகம் உண்மைதான்! மனிதர்கள் நினைத்தால் சண்டை யைத் தவிர்க்க முடியும். அதாவது, குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் அல்லது நண்பர்கள் என யாராக இருந்தாலும் கோபமாக இருக்கும்போது வார்த்தைகளைக் கவனமாக உபயோகித்தால் சண்டை வருவதைத் தவிர்க்க முடியும்.

வாய் தவறி வார்த்தைகளைச் சொல்லிவிடும்போது ஊசியால் குத்துவதைவிட அதிகமாக அவை அடுத்தவர் மனத்தைத் தைத்துவிடுகின்றன. வாய்தவறிச் சொல்லும் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போதும் அது சண்டையாக மாறிவிடக்கூடும்.

வார்த்தைகளைக் கொட்டியவர் நீங்களாக இருந்தால், அதை ஏந்திக்கொண்டவர் கோபப்படுகிறார். மற்றவர்கள் கொட்டிய சூடான வார்த்தைகளை நீங்கள் ஏந்திக்கொள்ளும்போது சண்டைக்காரர் ஆகிவிடுகிறீர்கள். அப்படியானால், குடும்பத்தில், பொதுவெளியில் நமது உறவை எப்படித்தான் காப்பாற்றிக்கொள்வது?

‘குடும்பத்திலும் நண்பர்களிடமும் சண்டையே வராமல் சமாதானமாக இருக்க முடியாதா?’ என்பதுதான் போட்டியும் பொறாமையும் நிறைந்த இன்றைய உலகில் சவாலான ஒன்றாக இருக்கிறது. சண்டைக்குக் காரணகர்த்தாவாக இல்லாமல் இருப்பது எப்படி என்பதை புனித விவிலியம் கற்றுக்கொடுக்கிறது.

கணவன் - மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் - பணியாளர்கள், பொது இடங்களில் உரசல் ஏற்படும்போது எதிர்கொள்ளும் சக மனிதர் என யாராகவும் இருக்கட்டும்; சண்டைக்கு இரண்டு தரப்பு உண்டு. இந்த இரண்டு தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசிக்கொண்டிருந்தால் அது சண்டையாக மாறும். அதுவே, அந்த இருவரில் யாராவது ஒருவர் அமைதியாக இருந்தாலே போதும். எல்லாம் சரியாகிவிடும். மாறாக, கோபத்தில் குரலை உயர்த்திக் கத்தினால், குடும்ப உறுப்பினர்களே உங்களை மதிக்க மாட்டார்கள். அப்படியிருக்கும்போது நண்பர்களோ, அலுவலகத்திலோ, பொது இடத்திலோ உங்களை மதிப்பது இருக்கட்டும், உங்களை அருவெறுக்கும் விதமாகப் பார்ப்பார்கள். நீங்கள் எவ்வளவு சிறந்த மனிதராக, திறமையாளராக இருந்தாலும் அந்தத் தகுதி அனைத்தும் உங்களது கத்தலால் காணாமல் போய்விடும். அதனால், குடும்பத்திலோ வெளியிலோ யார் உங்கள் கோபத்தைக் கிளறினாலும் பதிலுக்குப் பதில் பேசாதீர்கள். யார் பேசி ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; சண்டையைத் தவிர்த்து மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்.

அதைத்தான் நீதிமொழிகள் புத்தகம் அத்தியாயம் 26இல் 20ஆவது வசனம்: “நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துபோகும். இது போலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துபோகும்” என்று உலக உண்மையை எடுத்துக்காட்டுகிறது. சண்டையைத் தவிர்க்க விவிலியம் சொல்லித்தரும் இன்னும் சில வழிகாட்டுதல்களை அடுத்தடுத்த பகுதிகளில் தெரிந்துகொள்ளலாம்.

தொகுப்பு: ஜெயந்தன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in