

வள்ளலாரின் கருத்துகளை மேலும் துலக்கமாகப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள், அவரது பாடல்களைத் தாண்டி உரைநடையையும் வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் பேராசிரியர் வீ. அரசு. வள்ளலாரின் உரைநடை நூல்களில், ‘சீவகாருண்ய ஒழுக்கம்’, அவரது அடிப்படைக் கொள்கையான உயிரிரக்கம் பற்றிப் பேசுவது. மற்றொன்று, பள்ளி மாணவர்கள் வாசிப்பதற்காக அவர் எழுதித் தந்த ‘மநு முறை கண்ட வாசகம்’. இந்நூலுக்கான கதை, பெரிய புராணத்திலிருந்து எடுத்தாளப்பட்டது என்றாலும், அதுவும்கூட அவரது உயிரிரக்கக் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததுதான்.
உரைநடை நூலின் ஒரு பகுதியாக இடம்பெற்ற மநு நீதிச் சோழனின் தன்னிலைப் புலம்பல் கூற்று, தமிழில் தனிப்பெரும் கவிதையாகவும் அமைந்துவிட்டது. ‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ’ என்று தொடங்கும் அந்தப் புலம்பல், மழையூர் சதாசிவத்தின் குரலில் கதறியழ வைத்துவிடுகிறது.
இந்தெந்தக் குற்றங்களை யெல்லாம் நான் செய்திருக்கக்கூடுமோ, அதனால் இந்நிலைக்கு ஆட்பட்டு நிற்கிறேனோ என்பதுதான் இந்தப் புலம்பல். அதே நேரத்தில், இந்தப் புலம்பலின் வழியாக, தனிமனித ஒழுக்கத்திலிருந்து அரசியல் ஒழுக்கம்வரையில் ஒரு சிறப்புப் பாடத்தையே எடுத்துவிட்டிருக்கிறார் வள்ளலார். புலம்பியழுவது மன்னன் என்பதால் அது பொருத்தமாகவும் அமைந்துவிடுகிறது.
மன்னன் எதற்கு வலியப்போய் வழக்கிட வேண்டும்? தண்டிப்பதற்கு அதிகாரம் படைத்தவன் அல்லவா அவன்? எனவே, இந்தப் பிறவியில் இல்லையென்றாலும் முற்பிறவியில் அப்படி யொரு பிழையைச் செய்தேனோ என்று ஒரு முன்குறிப்பும் இந்தப் புலம்பலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும், பிறவிக் கொள்கையை நம்பாதோர்க்கும்கூட இப்புலம்பல் ஓர் ஒழுக்கப் போதனையைப் புகட்ட முற்படுகிறது.
அரசியல் பாடம்
நட்பில், காதலில், காமத்தில் தனிமனிதன் ஒருவன் கைவிடக் கூடாத கண்ணியத்தை மநு நீதிச் சோழனின் புலம்பலாக அமைந்துள்ள இந்த உரைநடைக் கவிதை உபதேசிக்கிறது. அவ்வப்போதைய அகவைகளில், சாகசங்களாகத் தெரிந்தவை யாவும் பின்னர் பிழையாய், குற்றமாய், பாவமாய் நினைவுகளில் உறுத்து வந்து ஊட்டுகின்றன.
‘குடிவரி உயர்த்திக்
கொள்ளை கொண்டேனோ
ஏழைகள் வயிறு
எரியச் செய்தேனோ’
என்று சோழன் பாடுவதாக அமைந்த வரிகளை, அவன் தன் முற்பிறவியை நினைந்து சொல்லியதாகக் கொள்ள முடியாது. முற்பிறவியிலும் அவன் அரசனாகவே இருந்திருப்பானா என்ன? குடிவரியை உயர்த்துவதைக் ‘கொள்ளை’ என்று வள்ளலார் குறிப்பிடுவதே இன்று சிந்தனைக்குரியது. ஆன்மிகவாதியே ஆனாலும், அவரிடத்தில் இயங்கிய அழுத்தமான, ஆழமான அரசியல் நிலைப்பாடுகளை உணர்ந்துகொள்ள இந்த வரிகள் உதவுகின்றன. ஏழைகள் வயிறு எரியக் கூடாது என்பதே ஆட்சியாளர்களுக்கு வள்ளலார் போதிக்கும் பாடம்.
‘வேலையிட்டுக்
கூலி குறைத்தேனோ
பசித்தோர் முகத்தைப்
பாராதிருந்தேனோ’
இது அன்றைய செல்வந்தர்களுக்கு அவர் உணர்த்த விழைந்த செய்தி. இன்றைய முதலாளிகளுக்கும் பொருந்தும்.
‘கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ’ என்பது வணிகருக்கான செய்தி.
சூழலியல் பார்வை
உயிரிரக்கக் கொள்கையைப் பேசும் இந்த உரைநடைக் கவிதை இன்று பரவலாகப் பேசப்படும் சூழலியல் பாதுகாப்பு சார்ந்தும் நெருக்கமானது.
குடிக்கின்ற நீருள்ள
குளத்தைத் தூர்த்தேனோ
வெய்யிலுக்கு ஒதுங்கும்
விருட்சத்தை அழித்தேனோ
பாவங்களின் வகையும் தொகையும் ஒரு முடிவுக்கு வருவதில்லை. கடைசியில், இன்னும் என்ன பாவம் செய்தேனோ என்றுதான் இந்தப் புலம்பல் ஒரு முடிவுக்கு வருகிறது. இன்று இதைக் கவிதையாகப் படிப்பவர் மனத்திலும், பாடலாகக் கேட்பவர் மனத்திலும் மிகவும் அந்தரங்கமானதொரு விசாரணை நடந்து முடிகிறது. குற்றத்திலிருந்து விடு விக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்.
(ஜோதி ஒளிரும்)