

ஆன்மிக நெறிகளையும் பக்தி எனும் அனுபவத்தைப் படிப்பவரின் உள்ளத்தில் தோன்றச் செய்து, மனத்தின் உள்ளொளியை விசாலப்படுத்தும் அருட்பணியைச் செய்வதில் புத்தகங்களுக்கு மாற்றாக எதுவும் இல்லை. அத்தகைய ஆன்மிக வெளிச்சத்தை அருளிய சில புத்தகங்களைப் பற்றிய
குலம் காக்கும் தெய்வங்கள்
இதழாளர் அய்கோ;
தனு பதிப்பகம், 16, காந்தி நகர்,
ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி - 627007.
நாட்டார் தெய்வங்கள் குறித்த விரிவான அறிமுகத்தை வழங்கும் புத்தகம். வழிபடும் தெய்வங்களுக்குப் பின்னணியில் விரியும் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஓர் உண்மை நிகழ்வின் தரிசனம் நமக்குக் கிடைக்கும்.
சித்தர்கள் வாழ்வும் வாக்கும்
பாவலர் ம.கணபதி
மணிவாசகர் பதிப்பகம்,
தொடர்புக்கு: 044-25361039.
சித்தர்களின் புண்ணிய பூமி இது. சித்தர்கள் குறித்த பல உண்மைகளை அவர்களின் பாடல்களில் விரியும் தத்துவங்களை மிகவும் நெருக்கமாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது இந்நூல். எட்டு வகையான யோகங்கள் மூலம் பெரும் சித்திகளைப் பெற்ற சித்தர்களின் படைப்புகளின் வழி அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் நூல்.
கிறித்துவம் தமிழுக்குத் தந்த அருட்கொடை
முனைவர் ப. பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம், தொடர்புக்கு: 9444191256.
வேதநாயகம் சாஸ்திரியார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, ஆபிரகாம் பண்டிதர், சேவியர் தனிநாயகம், ஜி.யூ.போப், கிறித்துவ பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள், கவிஞர் கண்ணதாசன் படைத்த இயேசு காவியம் உள்ளிட்ட படைப்புகளின் வழியாகவும் படைப்பாளிகளின் வழியாகவும் கிறித்துவ சமயம் தமிழுக்கு வழங்கிய இலக்கியச் செழுமையான கொடையைப் பற்றிய மிகவும் அரிதான பதிவு இந்நூல்.
மரபு வழி பரதப் பேராசான்கள்
பி.எம். சுந்தரம்
மெய்யப்பன் பதிப்பகம்,
தொடர்புக்கு: 9380530884.
சதிர் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட நடனக் கலையே தற்போது வழக்கில் இருக்கும் பரத நாட்டியத்துக்கு ஆதாரம் எனச் சொல்லப்படுகிறது. இந்த நடனக் கலையை தலைமுறை தலைமுறையாக எண்ணற்ற நடன மணிகளுக்குக் கற்றுக்கொடுத்த நாட்டிய ஆசான்களைப் பற்றிய ஆவணமாகத் திகழ்கிறது இந்நூல். பாரம்பரியமான இசை, நாட்டிய ஆசான்களின் வழிவந்த நூலாசிரியர் பி.எம்.சுந்தரம் ஒரு இசை அறிஞர். அவரின் பண்பட்ட ஆராய்ச்சிகளின் வழியாகப் பிரபலமான நாட்டிய ஆசான்களின் வரலாறு இந்நூலில் ஆவணமாகியிருக்கிறது.
புனிதரைப் போற்று
முனைவர் எம். அல்போன்ஸ்
நெய்தல் வெளி; தொடர்புக்கு: 93675 10043.
சாமானியராகப் பிறந்தாலும் தான் தழுவிய சமயத்தின்பால் கொண்ட அர்ப்பணிப்பான கொள்கையால் தேவசகாயத்தை கடந்த ஆண்டு மே 15 அன்று வாடிகன் நகரில் அமைந்துள்ள தூய பீட்டர் சதுக்கத்தில் அமைந்துள்ள, கத்தோலிக்கத் திருச்சபை திருமறையின் புனிதராக அறிவித்தது. அவரின் வாழ்வைக் கவிதை வடிவில் நம் கருத்துக்கு விருந்தாக்குகிறது இந்நூல்.
பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்
லலிதாராம்
மலர் புக்ஸ், தொடர்புக்கு: 93828 53646.
கர்னாடக இசை மேதைகள் பலரின் இசையைக் கேட்கும் வாய்ப்பு இன்றைய தொழில்நுட்ப உலகில் வேண்டுமானால் எளிதில் நிறைவேறக்கூடிய ஒன்றாக இருக்கும். ஆனால் அவர்களின் வாழ்வில் நடந்த அரிய விஷயங்களைப் பற்றியும், இசைக் கலைஞர்களுக்கும் அவர்களுக்கு இசைக் கருவிகளை உருவாக்கித் தந்த கைவினைஞர்களுக்கும் இருந்த ஆத்மார்த்தமான நட்பு, ஆயிரமாயிரம் மைல்களைக் கடந்து ஆண்டுக்கு ஒருமுறை டிசம்பர் இசை விழாக்களில் பங்கெடுக்கும் ரசிகர்..
இப்படி இசை சார்ந்த பல நுட்பமான விவரங்களுடன் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நூலாசிரியரின் இசை ரசனையும் தமிழில் அவருக்கு இருக்கும் ஆளுமையும் கட்டுரைகளில் கைகுலுக்கிக் கொள்கின்றன.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் (உரை)–2 பாகங்கள்
ஈ.சுந்தரமாணிக்க யோகீஸ்வரர்,
சங்கர் பதிப்பகம்,
தொடர்புக்கு: 044- 26502086, 9444191256
பன்னிரு திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறை யாகும். மாணிக்கவாசகர் எழுதி, தில்லையில் இறைவனிடம் வைக்க, இறைவனே கையெழுத்திட்டதாகக் கூறுவர். ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது மூதுரை.
பக்திச் சுவையையும் மனதை உருக்கும் தன்மையையும் கொண்டதாக திருவாசகப் பாடல்கள் அமைந்துள்ளன. இதன்மூலம் சன்மார்க்கத்தின் உண்மைகள் உணரப்படு கின்றன.
திருமந்திரத்தை அடியொற்றி திருவாசகத்துக்கு (சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை) இரண்டு பாகங்களாக மெய்ஞான உரை தந்துள்ளார் ஆசிரியர் ஈ.சுந்தரமாணிக்க யோகீஸ்வரர். பிறந்ததில் இருந்து இளம் வயது வரை ஏற்படும் இடுக்கண்களையும், அவற்றைக் கடந்து ஆஸ்திக எண்ணத்தை உணர்ந்து ஆச்சாரியரைக் கண்டு அவரால் உபதேசிக்கப்பட்டது முதல் சிவ நடனம் கண்டு, இரவு பகல் அற்ற திரியாதீத நிலையை அடைவது வரை, திருவாசகத்தில் காட்டியிருக்கும் பெருமைகள், திருமந்திரத்தில் இருந்து தகுந்த மேற்கோள்களுடன் ஒப்புமைப்படுத்தி கூறப்பட்டுள்ளன.
நெற்றிக் கண் திறப்பு, முத்தேக சித்திக்கான பயிற்சி விளக்கங்கள் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உரையில் உண்மையான ஞான நுட்பங்கள் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் விளக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், ஞான அனுபவத்துக்கு பொருந்துவதாகவும் அமைந்துள்ளது.
முஹம்மது: பேரன்பும் பெருங்கோபமும்
பைம்பொழில் மீரான்,
ஹார்ஸ்சென்ஸ் மீடியா நெட்வொர்க், writter.afzal1@gmail.com
நபிகள் நாயகம் குறித்த விரிவான ஆய்வு நூல்கள் தமிழில் அரிதாகவே எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்நூலைப் பைம்பொழில் மீரான் எழுதியிருக்கிறார். இஸ்லாமியர் அல்லாதோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு. நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் முயற்சிகள் தொடரும் சூழலில், அவரின் வரலாற்றை ஆறே தலைப்புகளில் அடக்கி அளித்த விதம் ஆசிரியரின் எழுத்தாளுமையையும், சீரிய திட்டமிடலையும் வெளிப்படுத்துகின்றன.
இந்நூலில் நபிகளாரின் பேரன்பை மட்டுமல்லாமல், அவர் பெருங்கோபம் கொண்ட தருணங்களின் பின்னணியையும் மீரான் அழகாகத் தொகுத்து அளித்திருக்கிறார். இந்நூல் நெடுக ஆங்காங்கே நபிகள் நாயகத்தின் தலைசிறந்த பொன்மொழிகள் தனியே தரப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, இந்நூல் அவரை ஆன்மிக கண்ணோட்டத்தில் அணுகவில்லை; வரலாற்று கண்ணோட்டத்தில் அணுகுகிறது. இதன் காரணமாக இந்நூல் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.
தமிழக முஸ்லிம்களின்
வரலாறும் பண்பாடும்
முனைவர் அ. பசீர் அகமது,
வளர்பிறை பதிப்பகம், +91 9894064783
தமிழ்நாட்டில் இஸ்லாம் அறிமுகமான நாள் முதல் இன்றைய நாள் வரையிலான தமிழக முஸ்லிம்களின் முழுமையான வரலாற்றையும் பண்பாட்டையும் ஆதாரங்களின் அடிப்படையில் உள்ளடக்கி இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலில் நிரம்பியிருக்கும் அரிய தகவல்கள் வாசிப்பதற்கு அலாதியான அனுபவத்தை அளிப்பதுடன், தமிழக முஸ்லிம்களின் சமூக அடையாளத்தையும் பிரதிபலிக்கின்றன.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்களின் பங்கேற்பு, தமிழகத்தில் உருது மொழியின் பரவல், தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் இயக்கங்கள் தோன்றியதற்கான காரணிகள், பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்டவற்றை இந்நூலின் ஆசிரியர் அ.பசீர் அகமது தனது ஆய்வின் மூலம் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார்.
முக்கியமாக, பண்பாட்டுச் சூழலில் நிகழ்ந்த சில மாற்றங்களை இந்நூலில் விவரிக்கும் நூலாசிரியர், அதை சுயவிருப்பு, வெறுப்புக்கு அப்பால், எவ்வித சார்புமற்று, உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார். வருங்காலத்தில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக எவ்வாறு நடந்துகொண்டால் சிறப்பைப் பெற முடியும் என்பது குறித்து இந்நூலில் ஆசிரியர் அளிக்கும் யோசனைகள் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ஒன்றாகத் திகழ்கின்றன.
- தொகுப்பு: யுகன், கே.சுந்தரராமன், நிஷா