

வள்ளலாரோடு ஈழத்து ஆறுமுக நாவலர்க்கும் இது 200ஆவது பிறந்த ஆண்டு. வள்ளலாரின் வரலாற்றில், எதிர்மறை நாயகராகவே நினைவுகூரப்படுபவர் நாவலர். சைவத் தமிழ்வழி நிற்கும் நாவலர் அன்பர்கள், வள்ளலாரின் மீது அன்று வைத்த வாதங்களை இன்றைக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை. துணியவில்லை என்றும் சொல்லலாம்.
வணிகர்கள் அவ்வப்போது கணக்குப் பதிவேடுகளை இருப்பாய்வு செய்து, இடைவெளி களை ஈடுசெய்வது போல, வரலாற்றுக்கும் ஒரு தேவை உண்டு. வள்ளலாரையும் நாவலரையும் எதிரெதிர் பக்கங்களில் நிறுத்தி இன்று கணக் கெழுதினால், இரண்டு பக்கங்களிலுமே வரவு தான் வைக்க வேண்டும். தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்கள், உரைநடை வளர்ச்சிக்கு வளம் சேர்த்தவர்கள் என்று இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள்.
அருட்பா X மருட்பா வரலாற்றை மிக விரிவாக ஆய்வுசெய்துவருபவர் ப.சரவணன். அருட்பா மருட்பா கண்டனத் திரட்டுகளைத் தேடித் தொகுத்து பெருந்தொகுப்பாகப் பதிப்பித்தவர். அருட்பாவுக்கென்று தனி அகராதி கண்டவர். அடிகளார்க்கும் நாவலர்க்கும் இடையே ஏற்பட்டது தனிமனித முரண்பாடு அன்று; மடங்களின் தலையீடு, சாதியக் காழ்ப்பு, குழுவாதம், தனிமனித ஆளுமை முனைப்பு போன்றவை இப்போரினை வளர்த்துவிட்டன என்பது ஆய்வாளர் ப.சரவணனின் பார்வை.
அது ஒரு கண்டனக் காலம்
19 ஆம் நூற்றாண்டு, புலவர்களுக்கு இடையே வாதப் பிரதிவாதங்கள் பல்கிப் பெருகியிருந்த கண்டனக் காலம். எந்த ஒரு நூல் வெளிவந்தாலும் உடனடியாகக் கண்டனம் தெரிவிப்பது அந்தக் காலத்து வழக்கம் என்கிறார் ப.சரவணன். எனவே, அருட்பாவுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்ததில் வியப்பொன்றும் இல்லை.
அருட்பாவுக்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியிருக்கிநின்றன. மறுப்புக் குழுவினர் எழுதி வெளியிட்ட கண்டன நூல்களும் 30-க்கும் மேல் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு தரப்பிலும் இடம்பெற்றிருந்த தமிழறிஞர்கள், சைவ அன்பர்களின் எண்ணிக்கையும் இதே எண்ணிக்கையில் உள்ளது.
தேவார, திருவாசகங்களை அருட்பா என்று அழைக்கும் மரபே தமிழில் இருந்ததில்லை என்கிறார் கா.சுப்பிரமணியனார். எனில், சைவத் திருமுறைகள் பன்னிரண்டு என்று வழங்கிவரும் நிலையில், திருமுறைகள் என்கிற சொல்லின் பயன்பாடே மரபார்ந்த சைவர்களைக் கோபம்கொள்ளச் செய்திருக்கலாம்.
சீடர் இட்ட பெயர்
வள்ளலார் தாம் இயற்றிய பாடல்களுக்கு திருவருட்பா என்று பெயரிட்டுக்கொள்ளவு மில்லை. அவை வெளிவருவதிலும் முதலில் ஆர்வம் காட்டவில்லை. பாடல்களைத் தொகுத்துப் பதிப்பித்த தொழுவூர் வேலாயுதனார் இட்ட பெயர் அது. இயற்பெயரோடு சுவாமிகள் என்று இணைத்து அழைப்பதற்கு ஒப்புதல் அளிக்காததால் அவருக்கு அருட்பிரகாச வள்ளலார் என்று சிறப்புப் பெயரிட்டவரும் தொழுவூரார்தான்.
அருட்பா மருட்பா சொற்போர் நடந்துகொண்டிருந்த காலத்தில், அருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் மட்டுமே அச்சில் வெளியாகியிருந்தன. அண்மையில் பாடிய அதிதீவிரக் கருத்துகளைப் பின்னர் பதிப்பித்துக்கொள்ளலாம் என்று வள்ளலார் நினைத்திருந்தார். இளமைக் காலத்தில் அவர் பாடிய முருகன் பாசுரங்களும் கைக்குக் கிடைக்காத பாடல்களும் ஐந்தாம் திருமுறைகளாகப் பின்னர் தொகுக்கப்பட்டன. வள்ளலார் மீது பெரும் பற்று வைத்திருந்த தொழுவூர் வேலாயுதனாரும் ஆறாம் திருமுறையை விரைந்து வெளியிட விரும்பாத தீவிர சைவராகவே இருந்துள்ளார்.
அருட்பா அல்ல, மருட்பா என்று கூறி மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் நடந்ததாகக் கூறப்படும் வழக்குக்கு எந்த ஆதாரமும் இல்லை. அது மானநஷ்ட வழக்காகவே நடந்து முடிந்திருக்க வேண்டும் என்பது ப.சரவணனின் ஆய்வு முடிவு.
ஓர் ஒப்பீடு
வள்ளலார், நாவலர் இருவருமே சிறிது காலம் தில்லையை மையமாகக்கொண்டு இயங்கிய வர்கள். வெவ்வேறு சூழல்களில் இருவருமே அங்கே எதிர்ப்புகளையும் சந்தித்தவர்கள். அவர்கள் இருவருக்கும் இடையிலான வேறு சில ஒப்புமைகளும்கூட இன்று நினைத்துப் பார்க்கத்தக்கவை.
அழிபசி தீர்க்கும் பணியில் வள்ளலார் தம்மைக் கரைத்துக்கொண்டார் எனில், நாவலரும் சிறிது காலம் கஞ்சித் தொட்டித் தருமங்களைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், யார் எதற்கு முதன்மை கொடுத்தார்கள் என்பதுதான் அவர்களது இடத்தை வரலாற்றில் தீர்மானிக்கிறது. அடிகளார்க்கும் அவரது பாடல்களுக்கும் தொழுவூரார் சூட்டிய பெயர்கள் சரியானவையே என்று காலம் தன் தீர்ப்பை எழுதி உறுதிசெய்துவிட்டது.
(ஜோதி ஒளிரும்)
- செல்வ புவியரசன், selvapuviyarasan@gmail.com