

திருவாலங்காடு கோயிலில் ஆருத்ரா தரிசன விழா (இன்று 5-1-2023) விமரிசையாக நடைபெற உள்ளது.
நடராஜபெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபையாகத் திகழ்கிறது திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ் வரர் கோயில். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இக்கோயிலில் ஆருத்ரா விழா விமரிசையாக நடக்கும்.
நடராஜப் பெருமானின் ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இத்தலத்தில், சுவாமி திருமேனியில் விளாம்பழம் சார்த்தப்பட்டு அதன் மீது மாதுளை முத்துக்கள் (சிவப்பு வண்ணத்தில் உள்ளது) சார்த்தப்படும். அதைப் பார்க்கும்போது நடராஜப் பெருமான் மீது ரத்தினக் கற்கள் பதித்துள்ளதுபோல் இருக்கும்.
ரத்தினசபாபதி பெருமானுக்கு இரவு 9 மணியளவில் அபிஷேகம் ஆரம்பித்து விடியற்காலை 4 மணி வரை அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
ஆருத்ரா வைபவத்தில் நடராஜர் மும்முறை தன்வலம் வருவதே அனுக்கிரக தரிசனம் எனப்படும். அந்தத் தருணத்தில் வானத்தில் கழுகு (கருடப் பறவை) மேலே வட்டமிடும் என்பது ஐதீகம்.
பிறகு ராஜகோபுரப் பிராகாரத்தை வலம் வந்து ஆருத்ரா மண்டபத்தின் அருகே தனது ரத்தினசபையைப் பார்த்தவாறு நிற்பார். தீபாராதனையை ஏற்றுக் கொண்டு பிறகு ஆலமரப் பிராகார வலம் வந்து மீண்டும் ஆருத்ரா மண்டபத்திற்கு வந்து எதிரே உள்ள (திருக்கண்ணாடிக்கு முன்பாக உள்ள) நந்தி தேவரைப் பார்த்தவாறு ரத்தின சபைக்குச் செல்வார். அங்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.
ஐந்தொழில் முதல்வன்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை நடராஜப் பெருமான் புரிவதின் தாத்பர்யத்தை இந்த ஆருத்ரா தரிசனம் கொண்டுள்ளது. நடராஜப்பெருமான் ஆருத்ரா மண்டபத்தில் எழுந்தருள்வது படைத்தலைக் குறிக்கும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரிய பலனை அளிப்பது நம்மைக் காத்தலைக் குறிக்கும்.
நடராஜர், கோபுர தரிசனம் முடிந்து திருக்கண் சார்த்த விநாயகர் ஆலயம் சென்று தீபாராதனை ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி அழித்தலைக் குறிக்கும். அதாவது பக்தர்களின் பாவங்களை, துன்பங்களை அழிக்கிறார். ஆருத்ரா தினத்தன்று ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் பாவங்களை இறைவன் பஸ்மமாக்குகிறார். பஸ்ம மாக்கிய பொருளே மையாகிறது. அவற்றையே திருச்சாந்து பிரசாதமாக (மை) தருகிறார்கள்.
இறைவனின் திருவருளை நாடிவரும் பக்தர்களின் பாவங்களை `வெள்ளை சாத்துபடி' என்னும் வைபவத்தின் மூலம் நீக்கி அவர் களை வெள்ளை மனத் துடன் திகழ வைக்கிறார். இதுவே மறைத்தல்.
திருவீதி உலா முடிந்து முஞ்சி கேஸ்வர தரிசனம் ஆகும்போது அனுக்கிரகம் தருவதே அருளல் ஆகும். அனுக்கிரக தரிசனத்தின் போது பக்தர்கள் வேண்டுவன அளித்து அருள்பாலிக்கிறார்.
- பா.பிரபு, prabhu.b@thehindu.co.in