காக்களூர் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி
வியாசர் இந்தப் பூவுலகில் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் சிலைகளில் இதுவும் ஒன்று. அவர் நிறுவிய ஆஞ்சநேயர் சிலைகள் அனைத்தும் வடக்கு திசை நோக்கித் திரும்பியிருப்பது சிறப்பு.
வாலின் நுனியில் மணி: இந்தத் திருத்தலத்தின் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் ஒன்பது அடி உயரத்தில் வடக்கு நோக்கி இருக்கிறார். வீர ஆஞ்சநேயரின் வலது கை அபய முத்திரையைக் காட்டியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது. அவரின் இடது கையை சௌகந்திகா மலர் அலங்கரிக்கிறது. இரு கைகளிலும் கங்கணம் அணிந்துள்ளார். ஸ்ரீ ஆஞ்ச நேயரின் நீண்ட வால் அவரது தலைக்கு மேல் உயர்ந்துள்ளது. அவரது வாலில் ஒரு சிறிய மணி உள்ளது.
ஆஞ்சநேயரின் தாமரைப் பாதங்கள் பக்தரின் உதவிக்காக வருவதற்குத் தயாராகக் காணப்படுகின்றன. இறைவனின் ஒளிரும் கண்கள், பக்தர்களுக்குத் தேவையான ஆறுதலைத் தருகின்றன. ஆஞ்சநேயர் கோயிலின் ஒருபுறம் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் ‘ஆதி’ (ஆரம்பம் – விநாயகர்) மற்றும் ‘அந்தம்’ (முடிவு - ஆஞ்சநேயரை) தரிசனம் செய்யலாம்.
ஸ்தல புராணம்: ராமாயணக் காலத்தில் லட்சுமணன் யுத்தத்தில் மூர்ச்சையற்று விழுந்தபோது, ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வந்தபோது, ராவணனால் ஏவப்பட்ட காலநேமி என்கிற அசுரனை வதம் செய்து கோபத்துடன் இருந்த ஆஞ்சநேயரை பக்தர்கள் சௌகந்திகா மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து சாந்தப்படுத்திய இடமாக இது கருதப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற இந்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி நாளை (டிச.23) நடைபெற உள்ளது. - பா.பிரபு, prabhu.b@thehindu.co.in
| காக்களூர் ஆஞ்சநேயர் கோயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. புட்லூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. |
