

திரு.வி.கல்யாணசுந்தரனாரின் ‘இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்’, வள்ளலாரைப் பற்றிய அறிமுக நூல்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெறுவது. 1929இல் வடலூரில் தைப்பூச தினத்தன்று திரு.வி.க. ஆற்றிய சொற்பொழிவு, பின்பு ‘நவசக்தி’ ஏட்டில் கட்டுரைத் தொடராக வெளிவந்து அப்போதே நூல்வடிவையும் பெற்றது.
‘தயையுடையார் எல்லாரும்… அருளுடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே’ என்று பேசும் வள்ளலாரின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியிருக்கும் திரு.வி.க., அருள்நெறி என்றே அதைக் குறித்துள்ளார். அவரது பாடல்களை அருள்மொழி என்றும் போற்றியுள்ளார். அருள்மொழியே என்றாலும் அதைப் புரிந்துகொள்வது எல்லார்க்கும் சாத்தியமாகிவிடுவதில்லை. திரு.வி.க. போன்ற சமய ஞானம் கொண்டவர்களின் வழிகாட்டலோடு வள்ளலாரைப் புரிந்து கொள்வது இன்னும் கொஞ்சம் எளிதாகிறது.
அழிந்துவிட நினைத்தேனோ: யோகாந்தம், கலாந்தம் என ஷடாந்தம் ஆறனுக்கும் தனித்தனியாக விளக்கம் கூறியுள்ள திரு.வி.க., கலையின் இருட்பக்கம் விளங்குவது மயக்க அறிவு, ஒளிப்பக்கம் விளங்குவது `மெய்யறிவு' என்கிறார். மயக்க அறிவே பலசமயப் போருக்கும், கண்மூடி வழக்க ஒழுக்கங்களுக்கும், பிற கேடுகளுக்கும் காரணமாக நிற்கிறது என்று கூறும் திரு.வி.க., அதற்கு வள்ளலாரின் இப்பாடலை மேற்கோளும் காட்டுகிறார்:
‘கூறுகின்ற சமயமெல்லாம்
மதங்களெலாம் பிடித்துக்
கூவுகின்றார்
பலனொன்றும் கண்டறியார்
வீணே நீறுகின்றார்
மண்ணாகி நாறுகின்றார்
அவர்போல் நீடுலகில் அழிந்துவிட
நினைத்தேனோ
நிலைமேல் ஏறுகின்ற திறம்விழைந்தேன்…’
எனத் தொடரும் இப்பாடலைப் படிக்கையில் ‘பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’, ‘வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்று பாரதியின் பாடல்வரிகள் சிலவும் இடையிடையே கண்சிமிட்டிப் போகின்றன.
சமரசக் கோயில்: சாதி, சமய, நாடு, மொழி முதலான வேற்றுமைகளைக் கடந்து சமரசம் காண வேண்டும் என்று வள்ளலாரின் வழியை வலியுறுத்தும் திரு.வி.க., வள்ளலாரின் சமரசக் கோயிலுக்கான காரணத்தையும் நினைவுபடுத்துகிறார்: ‘இராமலிங்க சுவாமிகள், சாதி மத வேற்றுமைகளைப் பலவுரையால் மறுத்து சமரச ஞானத்தை அறிவுறுத்தி, கோயில்கள் எல்லாம் சாதிக் கோயில்களாக மாறியது கண்டு, எல்லோரும் போந்து வழிபடுவதற்கென இச்சமரசக் கோயிலை (வடலூர் சபை) அமைத்துச் சென்றார். இங்கேயாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியிலிருக்கிறதா? ஈங்கும் சாதிப் பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்ளைக்கு- இந்தக் கொலைக்கு என்செய்வது’ என்று தன் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
‘எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும்
இலங்குசிவம் ஒன்றே
என்னாணை என் மகனே
இரண்டில்லை யாங்கே’
சமய இலக்கியங்களை ஆழ்ந்தகன்று வாசித்த திரு.வி.க.வின் இந்த உரையில், அவரது சமய அறிவை மட்டுமன்றி, சமூகச் சீர்திருத்த எண்ணங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. சீர்திருத்தத்தில் நாத்திகவாதம் கலந்துவிடக் கூடாது என்கிற அவரது பதற்றத்தையும்கூட உணர முடிகிறது. திரு.வி.க.வின் துணையோடு வள்ளலாரின் சமய தத்துவங்களையும் சீர்திருத்தக் கருத்துகளையும் ஒருசேரப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.
திருவாசகத்தை வழிபடு நூலாகக் கொண்டிருந்த வள்ளலார் அந்நூல் குறித்துப் பாடிய ‘வான்கலந்த மாணிக்கவாசக’ என்கிற பாடல் மணிவாசகத்தின் பெருமையைக் காலம்காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. வள்ளலாரின் வாசகம் எத்தன்மையது? அதை திரு.வி.க.வின் வார்த்தைகளிலிருந்து கேட்க வேண்டும்: ‘ஆண்டவன் அருள்திறத்தைத் தேனென இனிக்குந் தீந்தமிழில் எவர்க்கும் விளங்கும் எளிய நடையில் இதுகாறும் எவரே பாடினார்? அப்பாக்களைத் திங்கள் உமிழும் நிலவென்பேனா? இளந்தென்றல் என்பேனா? யாழும் குழலும் அமிழ்தும் குழைந்த ஒன்றென்பேனா? ஏழையேன் என்னென்பேன்? என்னென்பேன்?’
வள்ளலாருக்கு முன்பு அருளாளர்கள் பாடியதையெல்லாம் படிக்காதவரா திரு.வி.க.?ஆனால், அவர் அழுத்தம் கொடுக்கும் அந்த ஒரு வாக்கியமே வள்ளலாரைத் தனித்துக் காட்டுவது: ‘எவர்க்கும் விளங்கும் எளிய நடையில் எவரே பாடினார்?’. சமரசத்தைப் பாடியதோடு, அதைச் சமரசத்துடன் எல்லோர்க்கும் கொண்டுபோய்ச் சேர்க்கவும் செய்தவர் வள்ளலார். (ஜோதி ஒளிரும்) - செல்வ புவியரசன், selvapuviyarasan@gmail.com