

நம்மிடம் இருக்கும் தீய குணத்தை அழித்து நல்ல எண்ணங்களை விதைத்து ஒழுக்கமான வாழ்வுக்கு வழிவகுப்பதே ஐயப்பன் விரதம். மனித வாழ்க்கையை நெறிமுறைகளோடும் மனத் தூய்மையோடும் வாழ வழிகாட்டியாக இருக்கிறது கலியுக தெய்வமாக விளங்கும் ஐயன் ஐயப்பனின் விரத முறை.
ஒரு மண்டலம் விரதத்தின்போது மனிதனின் மனம் பக்குவப்பட்டிருக்கும். விடியற்காலையில் நீராடுதலில் தொடங்கும் ஒழுக்கம், புலால் உண்ணாமல், பொய் பேசாமல் எல்லாரிடத்திலும் அன்புடன் பழகுவதில் மேன்மையடையும் சபரிமலை யாத்திரைப் பயணம்.
ஹரிஹரசுதன் சபரி சென்ற பாதை என்கிற வர்ணனையில் ஜொலிக்கும் இந்தப் பெருவழிப் பாதை, கார்த்திகை முதல் தேதி தொடங்கி தை மாதம் முதல் தேதிவரை மட்டுமே திறந்திருக்கும்.
இப்படியாக நாம் செல்லும் இந்தப் புனித சபரி யாத்திரையில் எரிமேலி, பேரூர் தோடு, காளைக்கெட்டி, அழுதா நதி மற்றும் அழுதா மலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, உடும்பாறைக் கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம், பம்பை நதி என்று பெருவழிப்பாதை சிறுவழிப்பாதையில் சங்கமித்துக் கன்னிமூல கணபதி சந்நிதி, நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம், சபரிகிரிநாதன் சந்நிதி இப்படியாக நிறைவுபெறுகிறது. வார்த்தையால் வர்ணிக்க முடியாத வில்லாளி வீரன் வீர மணிகண்டனின் பெருவழிப் பயணத்தைக் காண்போம்.
எரிமேலி: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தனது இஸ்லாமிய தோழரான வாவருடன் எரிமேலியில் ஐயப்பன் பேட்டைசுவாமியாகக் காட்சியளிக்கிறார். வாவர் - ஐயப்பன் நட்பு பற்றிப் பல புராணக் கதைகள் இருந்தாலும், தங்கள் மக்களுக்காக கொள்ளைக்காரராக இருந்த வாவர், ஐயப்பன் அருளால் மாறி அவரிடம் நட்புகொண்டு எரிமேலியில் குடிகொண்டிருக்கிறார்.
தன்னைக் காணவரும் பக்தர்கள் ஒழுக்கமான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்களா என்று நம்மைச் சோதனை செய்யும் காவல் தெய்வமாக வாவர் விளங்குகிறார். வர்ணம் பூசி ஆடல் பாடலுடன் வாத்திய இசையுடன் பேட்டை துள்ளி வாவர் சுவாமி மசூதியில் கொடுக்கும் விபூதியைப் பூசியபடி நெடும்பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
பேரூர் தோடு: பெருவழிப்பாதையில் சீரான பாதைகொண்ட இரண்டாவது இடம் இது. ஐயப்பனைக் காணவரும் பக்தர்களுக்கு வழித்துணையாகப் பெரிய வடிவில் அங்கு அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.
காளைக்கெட்டி: ஐயப்பன் மகிஷியை வதம் செய்வதைக் காண பரமேஸ்வரன் தன் வாகனமான காளையைக் கட்டிவிட்டுச் சென்றதால், இந்த இடத்துக்கு காளைக்கெட்டி என்னும் பெயர் நிலைத்திருக்கிறது. இங்குள்ள சிவனை வணங்கும் நம்மை வெடிவழிபாடுடன் வனவிலங்குகளிட மிருந்து காக்கிறது காளைக்கெட்டி.
அழுதா நதி மற்றும் அழுதா மலை: களைப்புடன் இருக்கும் பக்தர்கள் உற்சாகமாக யாத்திரையைத் தொடர, அழுதை நீரில் முங்கிக் குளித்து ஒரு கல் எடுத்துத் தொடர, முதல் மலையான அழுதா மலை நம்மை அழைக்கும். தலைக்கனத்தில் நிமிர்பவர்களைவிட, தலை தாழ்த்தி நடப்பவர்களைச் சீக்கிரம் கடக்க வைக்கும் இந்த அழுதா மலை.
கல்லிடும் குன்று: அழுதா நதியில் எடுத்த கல்லை இங்கு இடுவது வழக்கம். மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அவள் உடல் மீது நர்த்தனம் ஆடினார். அவளின் உடல் பெரிதாகிக் கொண்டே போக, ஐயப்பனோடு தேவர்களும் சேர்ந்து அவள் உடலை மண்ணில் குழியிலிட்டுக் கற்களைக் கொண்டு மூடுகின்றனர். இதனாலேயே அந்த இடத்திற்குக் கல்லிடும் குன்று என்னும் பெயர் நிலைத்தது.
இஞ்சிப்பாறை கோட்டை மற்றும் உடும்பாறைக் கோட்டை: கல்லிடும் குன்றைக் கடந்த கால்களுக்கு இந்தச் சரிவான பாதையில் நடப்பது எளிமையாக இருக்கும். உடும்பாறைக் கோட்டை இறக்கம், அழுதா மலையின் நிறைவு.
முக்குழி தாவளம்: இந்த முக்குழி தாவளம் வன விலங்குகள் நடமாட்டத்தின் ஆரம்பம். இரவில் இந்தப் பகுதியில் நடப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கரிவலந்தோடு: நீர் ஊற்றுகளும் ஓடைகளும் இருக்கும் இடமாக கரிவலந்தோடு காணப்படுகிறது. சிறிய நதியில் ஆரம்பமாகும் கரிமலை ஏற்றத்திற்கு அந்தக் கடுங்குளிரிலும் புத்துணர்வு குளியல் போடத் தோன்றும்.
கரிமலை ஏற்றம்: கரியான யானை வலம்வரும் மலை என்பதால்தான் இது கரிமலை என்று அழைக்கப்படுகிறது. ‘கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணைக் கடலும் துணை வருவார்’ என்கிற பாடல் வரிகளுக்குத் தகுந்தாற்போல், கால்களைப் பதம் பார்க்கும் பாதையாகக் கரிமலை இருக்கும்.
கரிமலை இறக்கம்: ஏற்றத்தைவிட இறக்கம் கடினமாக இருக்கும். பெரிய மரங்களின் வேரில், பாறைகளில், பள்ளத்தில் எனக் கால் பதிக்கும் புதுமையான யாத்திரை அனுபவத்தை இங்கே உணரலாம். ஊன்றிக் கவனித்தால் அந்த அனுபவத்தின் சாரமே ஐயப்பனாகத் தோன்றும்.
பெரியானை வட்டம், சிறியானை வட்டம்: கரிமலை இறக்கம் கடந்த சமவெளிப் பாதையே பெரியானை வட்டம். சிரமம் இல்லாத பாதைகளாக இருக்கும். அதைத் தொடர்ந்து சிறியானை வட்டம்.
பம்பை: நம் கண்களுக்குத் தென்படாத பம்பை நம் காதுகளுக்குத் தெரியவரும். பெருவழிப்பாதை முற்றுபெறும் இடமாகப் பம்பையில் கால்கள் தொட, நொந்து போன மனம் நொடிப் பொழுதில் மகிழ்வடையும். ஐயப்பனைக் காண ஐயப்பனே அளித்த ஒரு பேரின்ப ஊற்று இந்தப் பம்பை நதி.
கன்னிமூல கணபதி: கட்டிய இருமுடியில் அல்லது பையில் இருந்து ஒரு தேங்காயை எடுத்து கன்னிமூல கணபதி சந்நிதியில் அதை உடைத்து வருகைப் பதிவை நாம் அளிக்கும் இடம்.
நீலிமலை: நீலிமலை ஏற்றம் ஏறும்போது நம் மனக் கண்கள் தேடும் கானக வாசனை. துவண்ட நம் மனம் அவரின் அருளோடும் உடன்வரும் சக பக்தர்கள் எழுப்பும் சரண கோஷத்திலும் மீண்டும் உற்சாகம் அடையும்.
அப்பாச்சி மேடு: சிறுவழிப்பாதையின் உச்சி எனலாம். அங்கு நின்று பார்த்தால் அகிலமும் தெரிவதுபோல் தோன்றும். கால்கள் தள்ளாடி வந்தடையும் இடமாக இது இருக்கும்.
சபரிபீடம்: “என்னைக் காண என்றைக்குப் புது பக்தன் ஒருவன் வரவில்லையோ அன்று உன்னைக் கரம்பிடிக்கிறேன் அதுவரை காத்திரு” என்பது தத்துவ மூர்த்தி தர்ம சாஸ்தாவின் பொன் மொழி. அந்தச் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டுக் காத்திருக்கும் மஞ்சமாதாவிடம், கன்னிசாமிமார்கள் தங்களின் வருகைப் பதிவை சரங்குத்தி மூலம் பதிவிடும் இடம்.
சந்நிதானம்: பக்திப் பெருக்கில் ஒரு தேங்காய் உடைத்து அருகில் இருக்கும் காவல் தெய்வத்தை வணங்கி, இருமுடியுடன் மட்டுமே ஏற முடியும் பதினெட்டுப் படிகளில் நம் கால்கள் பதியும்போது, பக்தி நம்முள் பரவசமாகும். அருள்பாலிக்கும் ஐயப்பனுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் பதினெட்டுப் படிகளுக்கும் வழங்கப்படுவது இந்த ஆலயத்தின் ஐதீகமாக இருக்கிறது.
யோக நிலையில் வலது கையில் சிவன் அம்சம் கொண்ட சின்முத்திரையுடனும் இடது கையில் பரந்தாமனின் அம்சத்துடனும் காட்சிதரும் மெய்யப்பனை “சுவாமியே சரணம் ஐயப்பா” என்கிற கோஷத்தோடு தரிசிக்கலாம்.
ஐயனைச் சந்தித்த பிறகு நாம் சந்திக்கும் சந்நிதி அருகில் இருக்கும் மாளிகைபுரம். மஞ்சளால் அலங்கரிக்கப்பட்ட கோயிலில் அருள்பாலிக்கும் மஞ்சமாதாவைக் காணக் கண் கோடி வேண்டும்.
பொன்னம்பல வாசனுக்குப் பொன்னாபரணம்; பெட்டிக்குக் காவலாக விண்ணில் கழுகு வட்டமிட்டு வணங்கும் காட்சி தோன்றும். அமைதியைத் தேடி அலையும் மனம் ஐயப்பனை வணங்கிய பிறகு அமைதியுறும். சுவாமியே சரணம் ஐயப்பா! - சுரேஷ். ஜி
suresh.g@hindutamil.co.in