வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 11: நம்பினேன் கைவிடேல் எனையே…

வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 11: நம்பினேன் கைவிடேல் எனையே…
Updated on
2 min read

இறைவனைப் போற்றிப் புகழ்வதால் மட்டும் அருள்நலம் கிடைத்து விடாது. இறைவனையே நம்பியிருக்கிறேன் என்று அடிக்கடி நினைவுபடுத்துவதாலும் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. அருளை வேண்டி நிற்பவன் அதைப் பெறுவதற்காகத் தன்னையும் கொஞ்சம் தகுதிப்படுத்திக்கொள்ள முற்பட வேண்டும்.

‘ஆடக மணிப் பொற்குன்றமே’ என்றும் ‘வட்ட வான்சுடரே’ என்றும் ‘அபயத்திறன்’ பாடிய வள்ளலார், அருள் வேண்டி நிற்போர் பின்பற்றுவதற்கான சில குறிப்புகளையும் அளித்துள்ளார். பக்தர்கள் இயன்றவரைக்கும் கைகொண்டாக வேண்டிய நியமங்கள் என்றும் இவற்றைச் சொல்லலாம்.

இரவும் பகலும் இறைவனையே நினைத்திருக்க முடிவெடுத்த வள்ளலார், புண்படா உடலோடு மட்டும் அதைச் செய்ய விரும்பவில்லை. புரைபடாத மனத்தோடும் பொய்படா ஒழுக்கத்தோடும் பொருந்தியே அதைச் செய்ய விரும்புகிறார். உடலோடு மனமும் ஒருசேரத் தீயவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்பது வள்ளலார் உணர்த்தும் வழிபாட்டுநெறி.

அன்பும் உண்மையும்: என்னைப் பெற்ற தாயே, தந்தையே, குருவே, தனிப்பெரும் தெய்வமே என்று இறையைப் பாடும் வள்ளலார், என் அன்பும் ஊக்கமும் உண்மையும் நீயே என்கிறார். `பிறிதோர் கடவுளை வேண்டாது தவிர்த்தேன்' என்று வள்ளலார் பாடியதற்கு வலிந்து வலிந்து முக்கியத்துவம் கொடுக்கும் உரையாசிரி யர்கள், `இறையருள் வேண்டி நிற்போர் அன்புள்ளம் கொண்டோராய், உண்மை யின் வழி நிற்போராய் நிற்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தும் அடிப்படை இயல்புகளுக்கு ஏனோ அழுத்தம் கொடுக்கவில்லை.

‘வான்பெறு பொருளும்
வாழ்வும் நற்றுணையும்
மக்களும் மனைவியும் உறவும்
நான் பெறும் நண்பும்
யாவும் நீ என்றே
நம்பினேன் கைவிடேல் எனையே’

கட்டிய மனைவியையும் தள்ளிவைத்து நின்றவர்தான். ஆனாலும், இறையருளை வேண்டி நிற்கும் ஒரு தன்னிலைப் பாடலில், உலகோர் அனைவருக்கும் உபதேசிக்கும் படியாக, உறவுகளையும் நட்பையும் இறைநிலையாக வைத்தெண்ணும் மனதைப் பரிந்துரைக்கிறார்.

வேறு வேறு: வணங்குவோர் எல்லாம் அருளாளர் களாகவா இருக்கிறார்கள்? அத்தகை யோரையும் உள்ளடக்கியல்லவா ஓர் ஆன்மிகப் பயணத்தை வழிநடத்த வேண்டும்? அவர்களையும் அல்லவா நல்வழிப்படுத்த வேண்டும்? `பாவியிற் பாவியேன், இரக்கம் ஒன்றில்லேன்' என்கிற பாடல் வரிகளை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

வள்ளலாரின் பதிகங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெவ்வேறு நிலைகளிலிருந்து பாடப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒரே நேர்க்கோட்டிலிருந்து புரிந்துகொள்ள முயன்றால், குழப்பங் களுக்கு வழிவகுத்துவிடும் அபாயமும் இருக்கிறது. ‘எல்லாமும் நீயென்றே நினைக்கிறேன், காத்தருள் எனையே’ என்று பாடும் அதே வள்ளலார், ‘காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்’ என்று சொல்லி அதே வேண்டுகோளை முன்வைக்கிறார். இருவருக்கும் எப்படி இறைவன் ஒரே மாதிரி அருள்புரிவான்? நல்லோர்க்கு அருள் கிடைக்கும். அல்லோர், தமது குற்றங்களை நினைந்து வருந்துவதால், அவற்றிலிருந்து விலகுவதற்கு வழி பிறக்கும்.

‘ஒரு சிறு துரும்பும்
ஏட்டிலே எழுதிக்
கணக்கிட்ட கொடியேன்,
எச்சிலும் உமிழ்ந்திடேன்
நரக நாட்டிலே பெரியேன்’

இப்படிப்பட்டவர்களும்தான் இறையருள் பெறுவதற்கு விழைந்து நிற்கிறார்கள். வள்ளலார் குறிப்புணர்த்தும் இத்தகைய குற்றங்கள் யாவும் விட்டுத்தொலைக்க வேண்டியவை. இந்தச் சுட்டிக்காட்டல்கள் இறையடியார்க்கு மட்டுமல்ல, தம்மையே இறைவடிவாய்ச் சொல்லும் போலிச் சாமியார்களுக்கும்தாம்.

போலிகள்… ஜாக்கிரதை!

‘தும்ம வெம்மடவார்
பகல் வந்தபோது
துறவியின் கடுகடுத்திருந்தேன்
தனித்த இரவிலே
வந்தபோதோடித் தழுவினேன்..’
‘நான் பலரொடுஞ் சார்
தலத்திலே வந்தபோது
அவரைப் பார்த்திலேன்
வார்த்தை பகிர்ந்திலேன்
தவசுப்பாதகப்பூனை போலிருந்தேன்
பேர்த்து நான் தனித்தபோது
போய் வலிந்து பேசினேன்’

போலித் துறவியரை இன்னும் இன்னும் அதிகமாய்க் கடிந்து வள்ளலார் பாடியிருக்கிறார். ‘காசிலே ஆசையில்லாதவன் போல் பட்டமே காட்டிப் பணம்பறித்து உழன்றேன்’ என்றும், ‘விருப்பிலான் போலச் சுவைபெறச் சுவைத்த நாக்குடையேன்’ என்றும் ‘மலைவுறு சமயவலை அகப்பட்டே மயங்கிய மதியினேன்…’ என்றும் அவர்களைத் தோலுரித்துக்காட்டியிருக்கிறார். துறவியான தன்னையும் அவ்வாறு தவறாகப் பொருள் கொண்டுவிடக் கூடும் என்ற அச்சத்தை ஒதுக்கி, தன்னிலைப் பாடல் மரபுக்குள் இருந்தே அதைச் செய்திருக்கிறார் என்பது ஒரு பெருந்துணிச்சல். (ஜோதி ஒளிரும்) - செல்வ புவியரசன், selvapuviyarasan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in