அருட்பிரகாசம் 10: இது தகுமோ? இது முறையோ?

அருட்பிரகாசம் 10: இது தகுமோ? இது முறையோ?
Updated on
2 min read

பசிப்பிணி தீர்த்தலே உலகின் தலையாய அறமாகக் கருதப்படுகிறது. உபரி உணவு உற்பத்தி சாத்தியமாகியுள்ள இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பக் காலகட்டத்தில், பசிப்பிணி தீர்த்தல் என்பது சிலருக்குச் சடங்காகவும்கூடத் தோன்றலாம்.

இன்றும்கூட அரைவயிற்றோடு படுக்கைக்குச் செல்லும், அதுவும்கூட இல்லாமல் வெறும் வயிறோடு உறங்கச்செல்லும் பல்லாயிரக் கணக்கான வறியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும், பட்டினியின் காரணமாக உயிர்விடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந் துள்ளது. ஆனால், வள்ளலார் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டைப் பஞ்சங்களின் நூற்றாண்டு என்றே வரலாறு குறித்து வைத்துள்ளது. வள்ளலார் சொன்ன பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை அந்த சரித்திரப் பின்னணியோடு புரிந்து கொள்ள முயல வேண்டும்.

‘காக்கைகள் கூவக்

கலங்கினேன்..

பருந்தின் கடுங்குரல் கேட்டு

உளங்குலைந்தேன்..

தாக்கிய ஆந்தை

குரல்செயப் பயந்தேன்..

சாக்குரல் பறவையால்

தளர்ந்தேன்..’

என்றொரு பாடல், பிள்ளைப் பெரு விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளது. பஞ்சங்கள் நிலவிய காலத்தின் தீய சகுனங்கள் ஒவ்வொன்றும் அவர் மனத்தை என்னவாய்ப் படுத்தியெடுத் தின என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று.

‘தனிவாழ்க்கையில் பற்றுகளைத் துறந்த வள்ளலார், சமுதாய வாழ்க்கை யைத் துறந்து செல்லவில்லை; ‘தனித்திருந்தே’ பெரும்பொழுதைக் கழித்தபோதிலும் மக்களைவிட்டு ஒதுங்கியிருக்கவில்லை’ என்கிறார் மா.பா.குருசாமி.

ஏற்றத்தாழ்வற்ற லட்சிய சமுதாயம் அமைய வேண்டும் என்கிற கனவு வள்ளலாருக்கு இருந்தது. அவரது, ஆன்மநேய ஒருமைப்பாட்டுத் தத்துவம் அதற்கான ஒரு வழிகாட்டுதலே.

ஏழைபடும் பாடு

ஏழைகள் நிலைகண்டும் அவர்களுக்கு உதவ முன்வராத செல்வந்தர்களை நோக்கி வள்ளலார் விடுத்த செய்தி, அவர்களின் ஆழ்மனத்தில் குற்ற வுணர்வைத் தூண்டி விடும் வகையில் அமைந்திருந்தது.

‘பட்டினி கிடப்பவரைப்

பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சி ஆயினும்

வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர்

கொட்டிபோல் கிளைத்தீர்

எத்துணை கொள்கின்றீர்

பித்துலகீரே’

‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யான் ஒருவன் அன்றோ’ எனத் தொடங்கும் விருத்தம், வள்ளலாரின் பிரபலமான பாடல்களில் ஒன்று. ‘இந்த ஏழைபடும் பாடு, உனக்குத் திருவுளச் சம்மதமோ, இது தகுமோ, இது முறையோ, இது தருமந்தானோ’ என்று அப்பாடல் தொடரும். வள்ளலாரின் இதே வார்த்தைகளை, பின்னர் ஊத்துக்காடு வேங்கடசுப்பையரும் தனது கிருஷ்ணகானத்தில் கையாண்டுள்ளார்.

‘கதறி மனமுருகி நான் அழைக்கவோ, இதர மாதருடன் நீ களிக்கவோ, இது தகுமோ, இது முறையோ, இது தருமந்தானோ’ என்பது வேங்கட சுப்பையரின் பாட்டு. வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபு இப்படித்தான் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தது. அந்த மரபில், வள்ளலாரே ஏழைபடும் பாட்டைச் சொல்லி, இறைவனைச் சினந்தார். ‘ஏழைபடும் பாடு’ என்கிற வள்ளலாரின் வார்த்தைகள், தமிழ் இலக்கியத்தின் தனிச்சிறப்பு வாய்ந்தவை களில் ஒன்றாகி விட்டது. பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் உலகப் புகழ்பெற்ற ‘லெ மிஸரபிள்’ நாவலை கவியோகி சுத்தானந்த பாரதியார், ‘ஏழைபடும் பாடு’ என்கிற தலைப்பிலேயே மொழிபெயர்த்தார்.

‘அருட்சுடர் வள்ளலார்’ என்கிற தலைப்பில் சுத்தானந்த பாரதியார், தனி நூலொன்று எழுதியிருப்பதாகவும் தெரிகிறது. வள்ளலார் குறித்து தமிழறிஞர்கள் எழுதிய நூல்கள் பலவும் இன்று வாசகர்களுக்குக் கிடைக்கப்பெறாத நிலைதான் உள்ளது. வள்ளலாரின் 200ஆவது ஆண்டிலாவது இந்நிலை மாற வேண்டும்.

அருளுக அருளொளியை

வாழையடி வாழை பாடலின் இறுதி வரிகள் இப்படி முடிகின்றன:

‘உலகுயிர்த் துயரம்

பொறுக்கமாட்டேன்

கொடுத்தருள்

நின் அருள் ஒளியைக்

கொடுத்தருள்க’

இறைவனை வேண்டியபோதும் உலகின் துயரத்தைப் பொறுக்க மாட்டேன் என்றவர் வள்ளலார். இல்லையில்லை, அவர் பாடியது பிறவித் துயரத்தைத்தான் என்று வாதாடவும் செய்யலாம். ‘இந்த ஏழை’யென்று தன்னை இறைவனிடம் தாழ்த்திக்கொண்டார் என்றாலும் அதற்கும் பதவுரை மரபு இடமளிக்கும்தான். ஆனாலும், ஏழைபடும் பாடு சகிக்கவொண்ணாதது என்பது பாடலைக் கேட்பவர்கள் அனைவருக்கும் தெரியும்தானே! (ஜோதி ஒளிரும்) - செல்வ புவியரசன், selvapuviyarasan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in