

திருவரங்கத்தில் கொண்டாடப் பெறும் உற்சவங்களில் முதன்மையானது திருவத்யயன உற்சவம். தமிழுக்கு ஏற்றம் தரும் விழா இது. பகல் பத்து, இராப் பத்து என 20 நாட்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களைப் பாடுவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட விழா இது.
அனைத்து வைணவ ஆலயங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டாலும் திருவரங்கத்தில் பழமை மாறாமல் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அப்படிப் பழமையான வைபவங்களில் ஒன்று, இவ்வுற்சவத்திற்கு பெருமாளே கடிதம் அனுப்பி நம்மாழ்வாரை அழைத்து வரச்செய்யும் நிகழ்வு.
காலப்போக்கில் ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் எழுந்தருள்வது நின்றுபோனது. இதன் காரணமாக ரங்கம் கோயிலுக்குள் உள்ள நம்மாழ்வார், பெருமாளின் இக்கடிதத்தினை ஸ்வீகரித்து உற்சவத்தை நடத்தி வைக்கிறார்.
சரியாகக் கார்த்திகை மாதம் பஞ்சராத்திர தீபத்தன்று சொக்கப்பனை கழிந்து, நம்பெருமாள் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் முன்பு சந்தனு மண்டபத்தில் அர்ச்சகர்களின் கைத்தலத்தில் எழுந்தருள்வார். அப்போது நம்பெருமாள் திருவாய்மொழிய கோயில் ஊழியர் கடிதத்தை ஓலையில் எழுதுவார்.
அப்பட்டோலையுடன் பெருமாள் சூடிக்களைந்த கஸ்தூரி திருமண்காப்பு, மாலை, வஸ்திரத்துடன் ஆழ்வார் பாசுரம் பாட ஏதுவாக அவரது தொண்டையில் தடவ தைலக்காப்பு ஆகியவை சகல மரியாதையுடன் ஆழ்வார்திருநகரியில் உள்ள நம்மாழ்வாரை அத்யயன உற்சவத்துக்கு அழைக்கும் கோயில் ஊழியர் வழியாக கொடுத்தனுப்பி நம்மாழ்வார் பல்லக்கில் திருவரங்கம் அழைத்து வரப்பெற்றுக்கொண்டிருந்தார்.
இன்றும் இந்த வைபவம் நடைபெறுகிறது. ஆழ்வார்திருநகரிக்குப் பதில் ஸ்ரீரங்கம் கோயில் நம்மாழ்வார்க்கு பெருமாளின் கஸ்தூரி திருமண்காப்பு, மாலை, வஸ்திரம் சாற்றப்பட்டுத் தொண்டையில் தைலக்காப்பு தடவப்பெற்று கோயில் வாதுல தேசிகர் வழியாகத் திருமுகப்பட்டயம் (கடிதம்) அளிக்கப்படுகிறது. அதை நம்மாழ்வார் தனது சிரசால் ஸ்வீகரித்துக் கொள்ளும் விதமாக தனது தலையில் வைத்துக் கொள்கிறார். அத்யயன உற்சவம் தொடங்கும் வரை அப்பட்டோலை நம்மாழ்வார் சிரசில் இருப்பதைக் காணலாம்.
இந்த வைபவத்தை ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றைக் கூறும் கோயிலொழுகு நூல் இவ்வாறு கூறுகிறது: “கார்த்திகைக்குக் கார்த்திகை, திருக்கார்த்திகைத் திருநாளுக்கு நாம் புறப்பட்டெழுந்தருளி, அழகியமணவாளன் திருமண்டபத்தில் சேரபாண்டியன் சிம்மாசனத்தில், சுந்தர பாண்டியன் திருமுத்துப் பந்தலின்கீழ், ஹரிஹரராயன் திருப்பள்ளிக் கட்டிலின் மேல் வீற்றிருந்து கலியன் பாட்டு கேளாநிற்குகையில், கோவணவர், கொடவர், கொடுவாள் எடுப்பார், பாடுவார், தழையிடுவார் மற்றுமுள்ள நம்மிராமானுசமுடையார்களும் வந்து நம் சடகோபனுக்கு முன்பெற்ற பெறும்பேறு தரவேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, நாம் சாற்றிக் கழித்த சந்தனமும், சூடிக் கொடுத்த சுகந்தமும், உடுத்துக்களைந்த ஒலியனும் நம் தழையிடுவான் கையில் கொடுத்தனுப்பினோம்" என்று அர்ச்சகர் சொல்ல, ஸ்தானீகர் “எழுது” எனக் கணக்குப்பிள்ளைக்கு ஆணையிடுவார்.
உடன் கணக்குப்பிள்ளை “நாயிந்தே நாயிந்தே” என எழுத்தாணி பிடித்தெழுதுவார். பின்னர் அதை “அவ்வருட, மாத, நாள் முதலியவற்றை கூட்டி வாசித்து, பெரியபெருமாள் திருவாய் மலர்ந்தருளுகிறார்” என முடிப்பார். அர்ச்சகர் அந்த ஓலையை அழகியமணவாளன் திருவடியில் வைப்பார். அழகியமணவாளன் திருக்கைத்தலத்தில் புறப்பட்டுக் கர்ப்பகிரஹத்தில் பூபாலராயன் சிம்மாசனத்தில் எழுந்தருளுவார். இத்திருமுகப் பட்டயத்தைக் கோயில் ஸ்தலத்தார் வாதுலதேசிகர் பெற்று, ஆழ்வார் திருநகரி யிலிருக்கும் நம்மாழ்வாருக்கு அனுப்பி வைப்பார். இவ்வாண்டு இவ்வைபவம் இன்று (டிசம்பர் 8) இரவு திருவரங்கத்தில் நடைபெறுகிறது. - பார்த்திபன், parthibann.ks@gmail.com