

மருதமரச் சோலையின் நடுவே தாமிரபரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள திருத்தலம் திருப்புடைமருதூர். தல விருட்சமான மருதமரத்தின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படுவது சிறப்பாகும்.
இந்தக் கோயில் கோபுரத்தின் நிலையின் உட்புறத்தில் கண்ணையும் மனத்தையும் கவரக்கூடிய நாயக்கர் கால ஓவியங்களும் மரச்சிற்பங்களும் உள்ளன. வெளிநாட்டுக் கப்பல்களின் வருகை, குதிரைகள் கப்பல்களின் வாயிலாக வந்து இறங்குதல், பணியாளர்களுடன் உயர் அதிகாரி நிற்கும் காட்சி, கொடி பிடிப்போர், பல்லக்குத் தூக்கிகள், இசைக் கருவிகளுடன் நிற்கும் இசைவாணர்கள் ஆகியோர் குறித்தும் இந்த ஓவியங்களில் காணலாம். தமிழர்களின் ஓவியக் கலை, மரச்சிற்பக் கலை மேன்மைக்கு இக்கோபுரப் படைப்புகள் காலத்தால் அழியாத அற்புதமான எடுத்துக்காட்டுகளாகும்.
கடைத்தலம்: மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டும் பல அம்சங்கள் ஒன்றாகப் பொருந்தி நிற்கும் திருத்தலங்கள் நம் மண்ணில் மூன்று உள்ளன. அவை மல்லி கார்ச்சுனம் (சைலம்), மத்தி யார்ச்சுனம் (திருவிடை மருதூர்), புடரார்ச்சுனம் (திருப்புடை மருதூர்). ஒன்றுக்கொன்று சமமான அம்சங்களைக் கொண்டு விளங்கும் காரணத்தால் முதல்தலம், இடைத்தலம், கடைத்தலம் என்று முறையே அழைக்கப்படுகின்றன.
இக்கோயில் பிரம்மாண்டமாக ஐந்து திருச்சுற்றுக்களுடன் கூடிய பெருங்கோயில் வகையைச் சேர்ந்தது. முற்கால பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சீமாறன் சீவலபன் பொ.ஆ. (கி.பி. 815 - 862) ஆட்சியில் இக்கோயில் கட்டப்பட்டது. முதலாம் உள்சுற்று திருமாளிகை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் உள்சுற்றில் அருள்மிகு நாறும்பூநாதர் சந்நிதியும் அதற்கு வடப்பக்கமாக அருள்மிகு கோமதி அம்பாள் சந்நிதியும் உள்ளன.
செவிசாய்த்த நாதர்: கருவறை மூலவராக இடப்பக்கம் சற்றே சாய்ந்தபடி அருள்மிகு நாறும்பூநாதர் சாந்நித்தியமிக்க தெய்வமாக எழுந்தருளியுள்ளார். இதற்கான தலபுராண வரலாறு நம்மை நெகிழ்ந்து உருகச் செய்யும்.
கருவூர் சித்தர் தலங்கள்தோறும் சென்று இறைவனை தரிசித்து மகிழ்ந்துவருகிறார். ஒருமுறை, அவர் மருத வனத்திற்கும் வந்தார். கரைபுரண்டோடும் தாமிரபரணியின் ஒரு கரையில் கருவூர் சித்தர் நிற்கிறார். எதிர் கரையில் நாறும்பூநாதர் சந்நிதி.
“நாறும்பூநாதா, உன்னைத் தரிசிக்க வந்து இக்கரையில் கிடந்து தவிக்கிறேன். முக்கண் முதல்வனே மனம் இரங்க மாட்டாயா?” என வேண்டினார்.
“அன்பனே! ஆலயத்திற்கு வருவதற்கு ஆற்றுக் குள் இறங்கி நடந்து வா” என்கிறார் இறைவன்.
கருவூர் சித்தர் தாமதிக்காமல் ஆற்றுக்குள் இறங்கினார். இறைவனின் ஆணைக்கிணங்க, தாமிரபரணியும் இரண்டுபக்கமும் மெல்ல விலகி அந்தத் தவசீலனான சிவபக்தனுக்கு வழிவிட்டது.
சற்றுத் தொலைவில் ஆலகாலவிஷம் உண்ட அண்ணல் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில். கண்களில் பெருகிய நீரோடு தன் பெருமானைத் தரிசிக்கும் ஆவலோடு ஓடோடிப் போனார். ஆலயத்தினுள் அவரின் சிந்தையும், செயலும், ஆசையும், லட்சியமும் எல்லாமுமாகி நின்றது இறைவனின் திருக்காட்சியே.
உள்ளம் குளிர நாறும்பூநாதனின் திருமேனி அழகைக் கண்டு மயங்கி ஆனந்தக் கூத்தாடினார். பாடினார். அங்குமிங்கும் ஓடினார். எங்குமாய்ப் பரவி ஒளி வீசி நின்ற பொன்னார் மேனியனின் சொக்கவைக்கும் அழகில் பரவசமடைந்தார்.
அந்தப் பேரின்பம் கிடைத்த வேளையில் அவர் ஒரு விஷயத்தைக் கவனிக்கவும் தவறவில்லை. அதாவது, இறைவன் தனது திருமேனியை இடப்பக்கமாகச் சாய்த்திருப்பது தனது கூப்பிட்ட குரலை கேட்பதற்காகத்தான் என்பதைக் கண்டு உள்ளம் பதைத்தார். இந்தச் சாதாரண அற்பனுக்கு இரங்கி தலைசாய்த்த இறைவனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த நேரம் சித்தரின் மனத்தில் சமயோசிதமாக ஒரு யோசனை தோன்றியது.
“இறைவா, இன்று இந்தக் கடையனுக்காகக் காதுகொடுத்துக் கேட்பதற்குச் சற்றே தலைசாய்த்து இரக்கப்பட்ட இந்த அரிதினும் அரிதான வரத்தை இனி எக்காலத்திலும் இத்தலத்தில் நம்பிக்கையோடு உன்னை நாடி வரும் அடியார்களின் குரலுக்கும் இவ்வண்ணமே செவிசாய்த்து அருள்பாலிக்க வேண்டும் என்பதே இச்சிறியேனின் விண்ணப்பம்” என்று கண்ணீர் பெருக பணிந்து நின்றார். அடியாரின் கோரிக்கையை அகமகிழ்ந்து ஏற்றுக்கொண்ட இறைவனும், “அப்படியே ஆகட்டும்” என்றார்.
ஆக, அந்நாளில் தனது அடியாரின் கூப்பிட்ட குரலுக்குச் செவிசாய்த்து வரம் அளித்த வள்ளல் பெருந்தகையான பரம்பொருள், இன்றளவும் நம்பிக்கையோடு தன்னை நாடிவரும் அடியார்களுக்கு வேண்டிய வரமளித்து ஆதரித்து காத்து நிற்கிறார். இதுவே இத்தலத்தின் சிறப்பம்சமாகக் காலம் காலமாக அடியார்களால் போற்றப்பட்டுவருகிறது.
கோயிலுக்குத் தெற்கே நீராழி மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளம் ஆண்டு முழுவதும் நீர் நிரம்பிய வண்ணம் எழிலாக அமைந்துள்ளது. தெப்பக்குளத்தின் மேற்கே பரந்து விரிந்த வனப்பகுதி உள்ளது. இது பறவைகள் சரணாலயமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒருமுறை இத்திருத்தலம் சென்று தரிசித்து மகிழலாமே! - வெ.கணெசன், vganesanapk2020@gmail.com