

ஆறாம் திருமுறையைப் படித்துக்கொண்டிருக்கிற போது, இறைமறுப்பைப் பாடிய பாவேந்தரின் பாடல் வரிகள் ஏன் நினைவுக்கு வர வேண்டும்? வள்ளலார் ஒன்றும் ‘கொலைவாளினைத் தீட்ட’ச் சொல்லவில்லை. ஆனால், கொடியவர்களின் செயல்கள் அற வேண்டும் என்று கண்ணீர் உகுத்துக் கடவுளை வேண்டினார்.
‘எளியரை வலியார் அடித்தபோது
ஐயோ…
என்மனம் கலங்கிய கலக்கம்
தெளிய நான் உரைக்க
வல்லவன் அல்லேன்
திருவுளம் அறியுமே எந்தாய்’
என்று தம்முள்ளம் கலங்கியதை இறையே நீ அறிவாய்தானே என்று குமுறியவர் வள்ளலார். இவ்வரிகளைப் படிக்கும்போதெல்லாம், ‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?’ என்ற பாவேந்தரின் வரிகளும் கூடவே நினைவுக்கு வருகின்றன.
‘கைவீசி நடக்கவும் நாணிக் கைகளைக் கட்டியபடி நடந்தேன்’ என்றும், அமர்ந்திருக்கும் வேளைகளில் ‘கால்களை ஆட்டவும்கூட மனம் கூசினேன்’ என்றும் பிள்ளைப் பெருவிண்ணப்பம் பாடிய வள்ளலார், இத்தகைய சமூகக் கொடுமைகளைக் கண்டு மனம் வருந்தியதோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதவில்லை. கோபங்கொண்டு கொதித்து எழுந்தார்.
‘நடுநிலை இல்லாக் கூட்டத்தை
கருணை நண்ணிடா அரையரை
நாளும் கெடுநிலை நினைக்கும்
சிற்றதிகாரக் கேடரைப்
பொய்யலால் கிளத்தாப்
படுநிலையவரைப் பார்த்தபோதெல்லாம்
பயந்தனன்’
என்று அத்தீயோர்க் கூட்டத்தைக் கடுஞ் சொற்களால் சாடியுள்ளார்.
நன்மார்க்கர் ஆள வேண்டும்: இரக்கம் இல்லாத ஆட்சியாளர்களை ‘கருணை நண்ணிடா அரையர்’ என்று பாடியிருப்பது எல்லாக் காலத்துக்கும் எல்லா நிலத்துக்கும் பொருந்தும். ஆட்சியாளர்கள் கருணையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்திச் சென்றுள்ளார். ‘கருணையில்லா ஆட்சி கடுகியொழிக’ என்று அறம்பாடிய அவர், ‘அருள் நிறைந்த நன்மார்க்கர் ஆள வேண்டும்’ என்கிற விருப்பத்தையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார்.
அரசியல் களத்தைச் சேர்ந்தவரில்லை வள்ளலார்; ஆழ்ந்த இறைநம்பிக்கை உள்ளவர். அதுவே அவர் பாதை. இறையைத் துதித்து அவர் இயற்றிய பாடல்களில் வெறுத்து ஒதுக்கிய வையும் விரும்பிய மாற்றங்களும், அரசியல் துறைக்கும் என்றென்றும் வழிகாட்டக் கூடியவை. ‘இராமலிங்க அடிகள் நாத்திகர் அல்லர், கடவுள் நம்பிக்கையுள்ள பகுத்தறிவுவாதி’ என்கிற சாமி.சிதம்பரனாரின் வார்த்தைகள் மனம் கொள்ளத்தக்கவை.
ஆட்சியாளர்கள் மட்டுமன்று, குடிகளும் கருணையைக் கைகொள்ள வேண்டும். தயையுடையாரும் அருளுடையாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே என்று கூறிய வள்ளலார், ஆதலினால் அவருடனே கூடித் தெளி வுடைய அருள்நெறியில் களித்து விளையாடிச் செழித்திடுக என்று வாழ்த்தியருளினார்.
கருணையும் சிவமே: ‘தாரணியிடை இத்துன்பமாதிகளால் தனையனேன் தளருதல் அழகோ’ என்று இறைவனிடம் கேட்டார் வள்ளலார். திருவருள் செங்கோல் இன்பத் தனியரசில் இந்நிலை மாறும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
‘கருணையும் சிவமே
பொருள் எனக் காணும்
காட்சியும் பெறுக
மற்றெல்லாம் மருள்நெறி என
நீ எனக்களித்த வண்ணமே
பெற்றிருக்கின்றேன்’
என்பது வள்ளலார் வாக்கு. உயிர் இரக்கமும் சிவமுமே உறுதிப்பொருள் என்னும் அறிவைப் பெறுக என்று உரைவிளக்கங்கள் சொல்லப்பட்டாலும், அன்பே சிவம் என்பதற்கு அடுத்த நிலையாய், கருணையே சிவம் என்பதாகவும் அப்பாடல் வரிகளுக்குப் பொருள் கொள்ள இடமுள்ளது. அதற்கடுத்த பாடலிலேயே, ‘கருணையங் கடவுளே நின்பால் இலங்கிய நேயம் விலங்கியதில்லையே’ என்று கருணையுருவில் காட்சி நல்கும் கடவுளாகச் சிற்றம்பலத்தானை வர்ணிக்கையில், கருணையும் சிவமும் எப்படி தனித்தனிப் பொருட்களாகப் பிரிந்து நிற்க முடியும்?
‘என் அறிவும் நானும்
இவ்வுலக வழக்கிலே
உயிர் இரக்கத்தால் இலகுகின்றனம்
நான் என்செய்வேன்
இரக்கம் என்னுயிர்
என்ன வேறிலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில்
என் உயிரும் நீங்கும்’
இறைவன் கருணைமயமானவன் என்று பாடும் வள்ளலார், அந்தக் கருணையே தம்முயிராக இருக்கிறது என்று தொடர்கிறார். கருணையைக் கைகொண்டால் தமக்குள்ளேயே கடவுளைக் காணலாம். (ஜோதி ஒளிரும்) - செல்வ புவியரசன்
selvapuviyarasan@gmail.com