

வடபுலமும் தென்புலமும் பக்தியில் சங்கமிக்கும் திருத்தலம் காசி. பக்தி என்னும் பாலம் காசி நகரையும் தமிழகத்தையும் பல நூறு ஆண்டுகளாக இணைத்துவருகிறது.
காசி நகரின் ஆன்மிக வரலாற்றில் ‘திராவிட சிசு’ எனப் போற்றப்படும் ஆதிசங்கரரும் ‘திராவிட வேதம்’ எனப் புகழப்படும் ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களின் பக்திநெறி ஆற்றிய பங்கும் மகத்தானவை.
ஆதிசங்கரர் திராவிடத் திருநாட்டில் பிறந்து, பாரதத் துணைக் கண்டம் முழுவதையும் ஆன்மிகத் தளத்தில் ஒன்றாக இணைத்தார். தென்குமரி முதல் திருக்கைலாயம் வரையிலும், துவாரகை தொடங்கி புரி வரையிலும், வடக்கையும் தெற்கையும் கிழக்கையும் மேற்கையும் இறை உணர்வால் ஒருங்கிணைத்தார்.
‘திராவிட வேதம்’ என்னும் ஆழ்வார் பாசுரங்களின் மையக் கருத்தான பக்தி என்னும் சமத்துவ நெறி, ராமானுஜர் வழிவந்த ராமானந்தர் வாயிலாக காசி நகரை அடைந்தது. 14ஆம் நூற்றாண்டில் காசி நகரம், சமூக மறுமலர்ச்சிப் பேரியக்கத்தின் தலைநகராக இருந்தது. மகான் ராமானந்தரின் சீடர்களான கபீர்தாசர், ரவிதாசர் முதலானவர்கள் பக்தியின் வாயிலாக அடித்தள மக்களின் உரிமை மீட்பு இயக்கத்தை காசி நகரில் வளர்த்தனர்.
இருபெரும் இறை நெறிகள்: திராவிடம் தந்த பக்தி இறைவனைச் சரணடைவது, இறைவனின் அடியார்களுக்குள் சாதி உயர்வு தாழ்வை மறுப்பது ஆகிய இருபெரும் கொள்கைகளை மையமாகக் கொண்டது. ராமானந்தர் இந்த உயரிய கருத்தை, ராமானுஜ மார்க்கத்தைச் சார்ந்த ராகவானந்தாச்சார்யாவிடமிருந்து கற்றார். கபீர்தாசர், ரவிதாசர் போன்ற அவரது சீடர்கள் பன்னிருவர், காசி நகரில் தொடங்கி கங்கைச் சமவெளி முழுவதும் இக்கருத்துக்களைப் பரவிடச் செய்தனர்.
பின்னர், துளசிதாசர், பக்த மீரா, குருநானக் ஆகிய மகான்கள் பக்தி மற்றும் சமூக சமத்துவ நெறிகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றனர். வடபுலத்தில் கபீர்தாசரும் ரவிதாசரும் மீராபாயும் வளர்த்த பக்தி என்னும் சமத்துவ நெறியில், ஆழ்வார்கள் நாயன்மார்களின் தமிழ்ப் பாசுரங்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆழ்வார்களில் முதன்மையானவரான நம்மாழ்வார்,
“குலம் தாங்கு சாதிகள், நாலினும் கீழ்இழிந்து, எத்தனை
நலம்தான் இல்லாத சண்டாள சண்டாளர்; ஆகிலும்,
வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணர்க்கு ஆள் என்று
உள்கலந்தார் அடியார்தம் அடியார்எம் அடிகளே”
என சாதிமறுப்புக் கொள்கையை உறுதிபடக் கூறுகிறார். அதற்கும் ஒரு படி மேல் சென்று பெரியாழ்வார்,
“இழிகுலத்தவராயினும், எம்மடியாராகில்
தொழுமினீர், கொடுமின், கொள்மின்”
என ஆணையிடுகின்றார்.
இறைவனின் அடியார்கள் எந்தச் சாதியராயினும் அவர்களைத் தொழவேண்டும், அவர்களிடம் கொடுக்க வேண்டும், கொள்ளுதல் வேண்டும் என்கிற திராவிட வேதத்தின் கொள்கையை காசி நகரில் ரவிதாசரும் கபீர்தாசரும் பரவிடச் செய்தனர். ராஜபுதனத்தின் சித்தூர் ராணியான மீரா, அந்தப்புரத்தின் இருண்ட அறைகளின் கதவுகளைத் தாண்டி செருப்புத் தைக்கும் தொழிலாளியான மகான் ரவிதாசரின் பாதங்களைத் தன் தலையில் ஏற்றபோது, வடபுலத்தில் சாதிய அமைப்புமுறை அதிர்வடைந்தது.
காசி நகரில் வாழ்ந்த ரவிதாசர் கங்கை வெளியைத் தாண்டி பஞ்சாப், ராஜஸ்தான் வரை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக் குரலைப் பக்தியின் வாயிலாக வெளிக்கொணர்ந்தார். ரவிதாசரின் வழிவந்த கோடிக்கணக்கானவர்கள், உலகம் முழுவதும் சமத்துவ வழியிலான சமய நெறியை இன்றும் பின்பற்றிவருகின்றனர். ரவிதாசரின் 40 பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
இறைவனை அடையும் வழி: ராமானந்தரின் புகழ்மிக்க சீடரான கபீர்தாசர், இஸ்லாம் நெசவாளிக் குடும்பத்தால் கண்டெடுத்து வளர்க்கப்பட்டார். அவர் ராமனையும் அல்லாவையும் ஒருசேர வணங்கும் புதிய சமய நல்லிணக்க மரபை காசி நகரில் தொடங்கினார். கபீரின் புகழ்மிக்க ஆன்மிகக் கவிதைகள், சாதி மறுப்பையும் தொண்டையும் சமய நல்லிணக்கத்தையும் பக்தியின் வெளிப்பாடாகக் கொண்டாடுகின்றன. கபீரின் ‘தோகா’ என்னும் இரண்டடிப் பாடல்கள் திருக்குறளைப் போன்று ஆழ்ந்த உண்மைகளைச் சுருக்கமாகத் தெளிவு படுத்துகின்றன.
“சாதியை விட்டாலன்றி இறைவனை அணுக முடியாது” என்பது கபீரின் கொள்கைகளுள் முதன்மையானது. ‘அல்லாவும் ராமரும் ஒன்றே’ என்னும் கபீரின் கருத்து, மதங்களால் பிளவுபட்ட இந்தியாவைப் பக்தியால் இணைக்கும் முதல் குரலாக ஒலித்தது.
கபீரை, நவீன ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர் எனச் சொல்லலாம். பகுத்தறிவு, சமய ஒற்றுமை, சாதி மறுப்பு, சமத்துவம், விடுதலை ஆகிய கோட்பாடுகளைப் பக்தி மரபின் வாயிலாக மக்களிடம் பரவச் செய்தார்.
கபீர், ரவிதாசருக்குப் பின்னர் ராமானந்தரின் வழிவந்த துளசிதாசர், ராம பக்தியை மக்கள் இயக்கமாக, தனது ‘ராமசரித மானஸ்’ என்னும் மகா காவியம் வழியாகப் பரவச் செய்தார். வால்மீகியின் ராமாயணம் வடமொழியில் இருந்ததால், பாமர மக்கள் அதை அறிந்திருக்கவில்லை. துளசிதாசர் அடித்தள மக்களின் பேசுமொழியான ‘அவத்’ மொழியில் மக்களுக்குப் புரியும் வகையில் தந்தபோது, கோடிக்கணக்கான மக்கள் ராமனின் அடியவர்கள் ஆனார்கள். காசி நகரில் விஸ்வநாதரின் ஆலயத்துக்கு இணையான திருத்தலம் துளசிதாசர் வழிபட்ட அனுமன் கோயிலான ‘சங்கடமோட்ச’ ஆலயம். துளசிதாசரின் இல்லம் அருகே ‘துளசி கட்டம்’ என்னும் புகழ்மிக்க படித்துறை காசி நகரில் கங்கை நதியில் அமைந்துள்ளது. துளசிதாசரின் வழியாகவே ராமபக்தி வடபுலத்தில் பெருமளவு பரவியது.
சமயங்களின் சங்கமம்: காசியில் வாழ்ந்த ராமானந்தரும் துளசிதாசரும் ராம பக்தியைப் பெரும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்தனர். வடநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் பெயரின் பின்னால் ‘தாஸ்’ எனப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் பழக்கம் பக்தி இயக்கத்தின் அடையாளமாக இன்றும் நடைமுறையில் உள்ளது.
திராவிட வைணவ மரபில், வைணவ அடியவர்கள் எந்தக் குலத்தவராயிருந்தாலும் தங்களை ‘அடியேன்’, ‘தாசன்’, ‘ராமானுஜதாசன்’ என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்வது இன்றும் பழக்கத்தில் உள்ளது.
தமிழ்ச் சங்கத்தை சமணமும் பௌத்தமும் வைணவமும் சைவமும் மதுரையில் வளர்த்தன. மகான் புத்தர் காசி நகரின் சாரநாத்தில் உலகம் முழுமையும் வாழ பௌத்த சங்கத்தைத் தொடங்கினார். காசி சமணம், பௌத்தம், சைவம், வைணவம், சூபி உள்ளிட்ட பல்வேறு சமய மரபுகளும் சங்கமிக்கும் திருத்தலம் ஆகும். காசி தமிழ்ச் சங்கமம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் காசி நகருக்குத் தென்னகம் தந்த பக்தி நெறியையும் சமூக சமத்துவ அறத்தையும் நினைவில்கொள்வோம்.