

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணர். அவரை கோவிந்தன் எனவும் அழைப்பர். புரியில் கிருஷ்ணரே ஜகந்நாதர். இவற்றின் கலவைதான் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள ஸ்ரீ கோவிந்தாஜி ஆலயம். நகரத்தின் மிகப் பெரிய கோயிலாக இருப்பது இதுதான். ராஜாவின் அரண்மனைக்கு அருகிலேயே இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோவிந்தாஜி கோயில் இங்கு உருவான வரலாற்றைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். பாக்ய சந்திரா தர்த்தா (பொ.ஆ. (கி.பி) 1763-98) சிறந்த கிருஷ்ண பக்தர். இவர் இம்பால் நகரிலிருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ள கெய்னாவில் தங்கியிருந்தபோது, அவரது கனவில் கிருஷ்ணர் தோன்றித் தனக்கும் ராதாவுக்கும் பலாமரத்தில் சிலை செய்து வழிபட வேண்டும் எனக் கூறி மறைந்துவிட்டார்.
இதன்படி பொ.ஆ.1776இல் இவர், கிருஷ்ணன் விருப்பப்படியே பலாமரத்தில் கிருஷ்ணன், ராதா திருவுருக்களைச் செய்து, தன்னுடைய அரண்மனையில் வைத்து வழிபட்டு வந்தார். அந்தக் காலத்தில் இங்கு ராச லீலைகள், நாட்டிய நாடகங் கள் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது. மகாராஜா நாராசிங், 1846இல் இந்தச் சிலைகளை அரண்மனையிலிருந்து எடுத்து அரண்மனைக்கு அடுத்து ஒரு கோயில் எழுப்பி அதில் பிரதிஷ்டை செய்தார்.
1868 இல் நிகழ்ந்த பூமி அதிர்வில் கோயில் கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. 1876இல் புதுப்பிக்கப்பட்டு ஏப்ரல் 26இல் கும்பாபிஷேகம் நடந்தது. 1890களில் பிரிட்டிஷாருடன் மன்னருக்கு யுத்தச் சூழல் வந்தபோது, கோயிலில் இருந்த ராதா - கோவிந்தாஜி சிலைகள் அகற்றப்பட்டு, கோஞ்சிரா என்கிற இடத்தில் வைக்கப்பட்டன. 1908ஆம் ஆண்டு மீண்டும் சிலைகள் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1949ஆம் ஆண்டுவரை கோயில் மன்னர் குடும்பப் பராமரிப்பிலேயே இருந்தது. 1949இல் மணிப்பூர் சமஸ்தானம் ஒருங்கிணைந்த இந்தியாவுடன் இணைந்து மக்களாட்சி ஏற்பட்டபோது, கோயிலும் மாநில அரசின் வசம் வந்தது. பிறகு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இன்றுவரை பராமரிக்கப் பட்டு வருகிறது. மணிப்பூர் முதல்வர்தான் கமிட்டியின் தலைவர்.
கோயிலுக்குள்... மூன்று வாசல்களுடன் கூடிய நடுத்தர அரண் மனை போன்ற பிரம் மாண்ட வாசல்; கிழக்கு பார்த்து உயர்த்தப்பட்ட அமைப்பில் பிரம்மாண்ட கம்பீரம். மேலே தங்க முலாம் பூசப்பட்ட இரு கவிகை, முன்பக்கத்தில் மாடங்கள் உள்ளன. கோபுரத்தின் இரு கவிகைகளுக்கும் 30 கிலோவில் புதிய தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் தெய்வங்கள் இல்லை. இந்த வெள்ளை மாளிகையின் உள்ளே நுழைந்தால் முன் மண்டபம். பக்கவாட்டில் வளைவுடன் கூடிய தூண்களால் பிரிக்கப்பட்ட திறந்த பாதைகள், அருகிலேயே நிகழ்ச்சிகள் நடக்க ஏதுவாகப் பெரிய விஸ்தாரமான பகுதி என இங்கு எல்லாமே பிரம்மாண்டம்தான்.
கர்ப்பகிரகம் நோக்கி நடந்தோம். உள்ளே ஸ்ரீகோவிந்தாஜி - ராதா சிலைகள் வட நாட்டுக்கே உரிய பாணியில் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. அவற்றின் அழகுக்காகப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இது தவிர மூலவருக்கு வடக்குப் பக்கம் ஜகந்நாதர் - சுபத்ரா - பாலபத்ரர் சிலைகள்; தெற்குப் பக்கம் பால பத்ரர் என்கிற பலராமர் - கிருஷ்ணன் சிலைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் ஆனவை. சிலைகள் புரி கோயிலை நினைவுப்படுத்துகின்றன. கோயிலைச் சுற்றிப் பிராகாரம் உண்டு. ஒரு தடவைக்கு இரு தடவை நிதானமாகத் தரிசித்து விட்டு வெளியே வரலாம். கோகுலாஷ்டமி, ரதயாத்திரை, ஹோலிப் பண்டிகை, வசந்த பஞ்சமி, கார்த்திகை பூர்ணிமா ஆகிய திருவிழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பாக்ய சந்திரா தர்த்தாவுக்கு, கனவில் கிருஷ்ணன் வந்த இடத்திற்கு, வருடாவருடம் உற்சவர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ராசலீலா நடத்தப்பட்டுப் பிறகு இருப்பிடம் அழைத்துவரப்படுகிறது. - radha_krishnan36@yahoo.com