

சிவன், பார்வதி திருமண வைபவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் கைலாயத்தில் திரண்ட தால் இமயமலை தாழ்ந்தது. புவியின் சமநிலை காக்க, சிவனின் உத்தரவுக்கு இணங்கி தென்திசை பொதிகை மலை நோக்கி நடந்தார் அகத்தியர். அவரின் வருகையால் புவி சமநிலை அடைந்தது. அப்படி அவர் பொதிகைக்கு வரும் வழியில் நடந்து கடந்த மலையில் ஒன்றுதான் தோரணமலை. இங்கிருக்கும் சுனையில் வீற்றிருந்த முருகப்பெருமானை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர் சித்த புருஷரான தேரையர். இவர் அகத்திய முனிவரின் சீடராக இந்த மலையிலேயே பல சித்துகளையும் அற்புதங்களையும் செய்தவர். மக்கள் பலரின் பிரச்சினைகளைத் தீர்த்த இவரின் ஜீவ சமாதி இந்த மலையிலேயே இருக்கிறது.
முருகா எனும் தாரகம்: தொலைவிலிருந்து பார்ப்பதற்கு ஒரு யானை அமர்ந்திருக்கும் தோற்றத்தைத் தருவதால் இந்த மலை முதலில் வாரண (யானை) மலை என்றே அழைக்கப்பட்டு, பின்னர் மருவி தோரணமலை என்றானது என்றும் சொல்லப்படுகிறது. இந்த மலையில் அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1,193 படிகளைக் கடக்க வேண்டும். அண்மையில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு தகுந்த இடைவெளிகளில் ஐந்து மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதனால் பக்தர்கள் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு படிகளில் நடப்பதற்கு வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. படிக்கட்டு களில் ஏறும்போது பக்தர்கள் எழுப்பும் முருகா...
முருகா என்னும் கோஷமே தோரணமலையில் ஏறும் பக்தர்களின் நாவிலிருந்து தாரகமாக ஒலிக்கிறது.
தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருக்கையில் வேலுடனும் மயில் வாகனத்துடனும் காட்சி தரும் முருகப் பெருமானைக் காணக் கண்கோடி வேண்டும். இங்கிருக்கும் சுனையிலிருந்து சுரக்கும் நீர் தீர்த்தமாகவும் அபிஷேகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சுனைநீரில் நீராடினால் நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் தீர்த்துவைக்கும் தோரணமலை முருகனுக்குப் பக்தர்கள் நன்றிக் காணிக்கைகளையும் செலுத்து கின்றனர்.
| தென்காசியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் கடையம் நகருக்கு முன்னர் மாதாபுரம் செக்போஸ்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த ஆலயம். மலையின் அடிவாரத்தில் உள்ள சந்நிதிகளில் காலை ஐந்தரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். இங்கிருக்கும் சந்நிதிகளில் வல்லப விநாயகர், சரஸ்வதி, கிருஷ்ணர், சிவன், லட்சுமி, சப்த கன்னியர், கன்னிமாரம்மன், பாலமுருகன், வியாழ பகவான், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வானையுடன் முருகன் (உற்சவராக) ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இங்கு தைப்பூசம், தமிழ் வருடப்பிறப்பு, பிரதி தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் திருவிழாக்களும் சிறப்புப் பூசைகளும் நடக்கின்றன. |