

பிள்ளைப் பெருவிண்ணப்பம் பாடிய வள்ளலார் தன்னைக் காத்தருளுமாறு மட்டும் இறையை வேண்டவில்லை; உற்றவரோடு மட்டுமின்றி அயலாரும் பசியாலும் பிணியாலும் மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப் பார்த்தபோதெல்லாம் தன்னுடைய உள்ளம் பயந்து பதைத்ததை உன்னுள்ளம் அறியோதோ என்று இறைவனிடமே வினவுகிறார்.
‘இறைவனே
உலகில் பட்டினியுற்றோர்
பசித்தனர்
களையால் பரிதவிக்கின்றனர்
என்றே
ஒட்டிய பிறரால்
கேட்டபோதெல்லாம்
உளம் பகீர் என
நடுக்குற்றேன்
இட்ட இவ்வுலகில்
பசியெனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவது இயல்பே’
பசியோடு மட்டும் அவரது கவலைகள் முடிந்துவிடவில்லை. அதற்குக் காரணமான வறுமை நிலையைக் குறித்தும் ஆழ்ந்த வருத்தத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘தரைத்தலத்து இயன்ற வாழ்க்கையில்
வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளையோர்
முதலினோர் எனையோர்
நண்பர் என்றவர்
அவர் குறைகள்
உரைத்தபோதெல்லாம்
என்னுள்ளம் உடைந்தது
உன் உளம் அறியோதோ’
உணவில்லாத நிலை பசி என்றால், உணவோடு உடையும் உறைவிடமும் இல்லாத நிலை வறுமை. அதைக் குறித்தும் நீள்கிறது வள்ளலாரின் அக்கறை.
‘உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம்
என வந்து
ஓதிய வறிஞருக்கு
ஏதும் கொடுத்திலேன்
கொடுக்கும் குறிப்பிலேன்’
என்று உதவ முடியாத நிலையைக் குறித்து வருந்திப் பாடியிருக்கிறார் அவர். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிற வள்ளலாரின் வரிகள் அனைவரும் அறிந்தவை. ‘பசியினால் இளைத்தே வீடுதோறும் இரந்தும் பசியறாத அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்’ என்று தொடரும் அந்தப் பாடலின் அடுத்த வரிகள் வறுமையைக் குறித்தவை. ஏனோ அடுத்தடுத்த வரிகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டோம்.
லட்சிய சமுதாயம்: பசியையும் வறுமையையும் குறித்த கவலைகளை மட்டுமே வள்ளலார் பகிர்ந்து கொள்ளவில்லை. அந்நிலை மாற வேண்டும் என்கிற தனது ஆழ்மன வேட்கையையும் அவர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
‘ஒத்தாரும் தாழ்ந்தாரும்
உயர்ந்தாரும் எவரும்
ஒருமையுளர் ஆகி
உலகியல் நடத்த வேண்டும்’
விருப்பமாக மட்டுமின்றி அதையே இலக்காகக் கொண்ட ஓர் இயக்கத்தையும் அவர் முன்னெடுத்தார். வள்ளலார் 1865இல் ஒருங்கிணைத்த சன்மார்க்க சங்கம் அதற்கான தொடக்கமாக அமைந்தது. ‘சமரச வேத’ என்கிற முன்னொட்டுகளைப் பெற்றிருந்த அச்சங்கம் பின்பு அந்தச் சொற்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்கிற புதிய பெயரைச் சூடிக்கொண்டது. இந்திய மெய்யியல் வரலாற்றில், வட இந்தியாவில் கௌதம புத்தர் தொடங்கிய சங்கத்தைப் போலவே தென்னிந்தியாவில் வள்ளலார் தொடங்கிய சங்கமும் சமூக இயக்கமாக விரிவடைந்தது. எனினும், பௌத்த சங்கங்களுக்கு இணையாக சன்மார்க்க சங்கங்கள் உலகு தழுவிய பேரியக்கமாக இன்னும் பரவவில்லை.
ஆண்டவனே என்றாலும்: வள்ளலாரின் பாடல்களைத் திரட்டி வெளியிட்ட சன்மார்க்க சங்கம் மே 23, 1867இல் தருமச் சாலையைத் தொடங்கிவைத்தது. வள்ளலாரின் உயிரிரக்கக் கொள்கையின் ஒரு பகுதியாக, பசி தீர்க்கும் பெரும்பணியை அச்சங்கம் அன்று தொடங்கி இன்று வரையிலும் தொடர்கிறது. பசிப்பிணியின் கொடுமையைக் குறித்தும் அதைக் களைய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசும் முழுமையான நூல், வள்ளலாரின் ‘சீவகாருண்ய விளக்கம்’. ‘பசி என்கிற விஷக் காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரம் கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே சீவகாருண்யம்’ என்பது அவ்விளக்கத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.
எனில், ஏழைகள் அறிவு வெளிச்சத்தைப் பெற வேண்டும் என்றால், அதற்குத் தடையாக இருக்கிற பசியெனும் கொடுமையிலிருந்து அவர்களை மீட்டாக வேண்டும். பசி தீர்ப்பது மட்டும் வள்ளலாரின் நோக்கம் அல்ல; பசியைத் தீர்த்து அவர்களுக்குள் அறிவு விளக்கைச் சுடர்விட்டு எரியச் செய்ய வேண்டும் என்பதுதான். அரசனே தடுத்தாலும் ஆண்டவனே தடுத்தாலும் சீவகாருண்ய ஒழுக்கத்தைக் கைவிடக் கூடாது என்பது வள்ளலாரின் கட்டளை. பசியென்று கேட்டால் உளம் நடுங்குகிறது என இறைவனை நோக்கிப் பாடியவர் அதே வள்ளலார்தான். ஆனால், பசிப்பிணியைத் தீர்ப்பதற்குத் தடையாய் ஆண்டவனே குறுக்கே நின்றாலும் அவனையும் முட்டித்தள்ள அவர் மனம் ஆயத்தமாக நின்றது. (ஜோதி ஒளிரும்) - selvapuviyarasan@gmail.com