

‘பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது! பாடகம் தண்டைக் கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒளியும்
முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும்
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனாற் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே’
- காஞ்சி காமாட்சி அம்மன் விருத்தம் பாடலில் வரும் வர்ணனையின்படி ‘முத்து மூக்குத்தியும்’ என்பதைத் தவிர்த்து மற்ற எல்லா அணிகலன்களையும் இந்த கெஜலட்சுமி அம்மனுக்கு அணிவித்து அழகு பார்த்திருக்கிறார் சிற்பி.
அபய வரத ஹஸ்தம் இன்றி, இரண்டு கரங்களிலும் தாமரை மலரைத் தாங்கியபடி, மார்புக் கச்சை பூண்டு, இடையில் ஒட்டியாணமும் அணிந்தபடி, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் பத்மாசனத்தில் பத்ம பீடத்தில் அமர்த்த கோலத்தில் காட்சியளிக்கிறார் இந்த கெஜலட்சுமி அம்மன். பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் புதல்வன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தின் மகாமண்டபத்தில் நுழைவாயிலின் படிக்கட்டில் தெற்குப் பக்கத்தில், வீணை இல்லா ஞான சரஸ்வதி சிற்பத்தின் எதிரில்தான் அமைந்திருக்கிறது இந்த கெஜலட்சுமி சிற்பம்.
தலையில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கிரீடத்துடன் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். இரு காதுகளின் பின்புறமும் சுருள்சுருளாக விரிந்து, பரந்த கருங்குழல் அணிசெய்கிறது. தேவியின் பின்புறம் மேகக் கூட்டங்களும் சிரசின் மேல்புறத்தில் இருபுறமும் யானைகள் குடங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்யும் காட்சியும் நம் கற்பனையைக் கூட்டுகின்றன. அதற்கும் மேல் இருபுறமும் வெண்சாமரமும் நடுவில் வெண்கொற்றக் குடையும் அணிசெய்வது சிறப்பு. எத்தனை எத்தனை தமிழ்க் கவிகளின் உள்ளங்களில் ஊறி, எத்தனை எத்தனை தமிழ் அறிஞர்களின், கலைஞர்களின் கருத்தில், கலைகளில் திளைத்து உருவாகி சிற்பத்திலே உதித்திருக்க வேண்டும் இந்தச் சிற்ப செல்வங்கள். இவற்றை உருவாக்கிய அந்தப் பெயர் தெரியாத, முகமறியாத சிற்பிகளை சிரம் தாழ்த்தி அடிபணிகிறேன். (நிறைவடைந்தது) - வேதா, vedhaa.art@gmail.com