

தலைமைப் பண்பும் அதையே தகுதியாகக் கொண்டு உருவாகும் தலைமைப் பொறுப்புமே மனித குலத்தை எல்லாக் காலத்திலும் வழிநடத்தி வந்துள்ளது. தலைமையேற்றல் என்பதில் இருபாலரையும் கடவுள் சமமான இடத்தில் வைத்துள்ளதைப் புனித விவிலியம் எடுத்துக்காட்டுகிறது. ஆனால், அதன்படி பெரும்பாலான மக்கள் நடப்பதில்லை.
நன்மைகளை மட்டுமே செய்யும் கடவுளின் தலைமையை ஏற்க மறுத்தபோது, மனிதன் மனுஷியுடன் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். அந்தக் காலந்தொட்டே பெண்களையும் பிள்ளைகளையும் ஏன், சக மனிதர்களையுமேகூட கொடிய முறையில் தன்னலத்துக்காகப் பயன்படுத்தி, கடவுள் தனக்களித்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறான். இவ்வாறு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்களை வானுலகத் தந்தையாகிய கடவுள் வெறுக்கிறார். விவிலியத்தின் இணைவசனப் புத்தக மான ‘மல்கியா’வின் இரண்டாம் அதிகாரம், 13 முதல் 16 வரையிலான வசனத்தைப் படித்துப் பாருங்கள். அதில் ‘கொடுமையில் பிரியமுள்ளவனை என் உள்ளம் வெறுக்கிறது’ என்று கடவுள் சொல்கிறார்.
அதேபோல் சங்கீதப் புத்தகம் 11ஆவது பாடலின் ஐந்தாம் வரியைப் பாருங்கள்: ‘நீதிமானையும் பொல்லாதவனையும் கடவுள் ஆராய்கிறார். வன்முறையை விரும்புகிற எவனையும் அவர் வெறுக்கிறார்’ என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறைக் கவிஞர்களால் எழுதப்பட்டுள்ளது. எனவே மனைவியை அடிப்பவர்கள், அலட்சியமாக நடத்துகிறவர்கள், சக மனிதர்களைத் துன்புறுத்தும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோரின் தலைமைப் பண்புக்கு விரோதமான செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. குடும்பத்திலோ, பணியிடத்திலோ, பொது வாழ்விலோ பெண்ணின் தலைமையை ஏற்பதில் ஆணிடம் மனச்சிக்கல் இன்னும் தொடர்வதன் வழியாகவே இத்தகையை அடக்குமுறைகள் நடக்கின்றன. தலைமைப் பொறுப்பு என்பது நாடு, அதன் நிர்வாக அலகுகள், சங்கங்கள், கல்விக் கூடங்கள், நிறுவனங்கள், குடும்பம் ஆகியவற்றில் ஒழுங்கை நிலை நிறுத்த கடவுள் பயன்படுத்தும் ஓர் அடிப்படையான ஏற்பாடு.
அவ்வகையில், கடவுளைத் தவிர மற்ற அனைவரும் யாருடைய தலைமைக்காவது கீழ்ப்படிய வேண்டியது வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சமாகும். தலைமை ஏற்றிருப்பவர் ஆணா பெண்ணா என்கிற பாலின வேறுபாடு காட்டுவது கடவுளால் வெறுக்கப்படுகிறது. நிலையான மகிழ்ச்சி, சமாதானம் மிகுந்த குடும்ப வாழ்க்கை வாழ விரும்பும் யாரும் குடும்பத் தலைவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது அவசியம். எல்லா சந்தர்ப்பத்திலும் தலைமை வகிப்பவர்களுக்குச் சரியான மரியாதையைக் காட்டும்போது குடும்ப அங்கத்தினர்கள் நன்மை அடைகிறார்கள். அதேபோல், தலைமை ஏற்பவரும் கீழ்ப்படிதலுடன் இருக்க வேண்டும். தன் அதிகாரத்தைக் காட்டக் கூடாது என்பதை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இயேசு, தன் தந்தையாகிய கடவுளிடமிருந்தே அதிகாரத்தைப் பெற்றிருந்தார். தன்னுடைய சீடர்களைவிட அறிவாற்றலும் அனுபவம் மிக்கவராகவும் இருந்தார். அதே நேரம் அவர் அன்புடனும் கனிவுடனும் இரக்கத்துடனும் நடந்துகொண்டார். ஒருபோதும் தனது அதிகாரத்தை ஆணவத்துடன் செலுத்தவில்லை. எப்போதும் தாம் கடவுளுடைய மகனென்று எல்லாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தாழ்மையுள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவுமே இருந்தார். அதற்கு ஆதாரமாக மத்தேயு புத்தகம் அதிகாரம் 11இன் வசனங்கள் 28 முதல் 30 வரையிலான இயேசுவின் வார்த்தைகளைக் கேளுங்கள்: “உழைத்துக் களைத்துப் போனவர்களே.. பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே.. நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்வு கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகத்தடி மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று சொன்னார். உங்களிடம் இயேசுவின் இத்தகைய தலைமைப் பண்பு இருக்கிறதா எனப் பரிசீலித்துப் பாருங்கள்.