

ஆறாம் திருமுறையில், ‘ஆன்ம விசாரத் தழுங்கல்’ என்றொரு பதிகம். சிறுமதி கொண்டவனான தன்னை ஆட்கொண்டு அருளுமாறு வள்ளலாரால் இறைவனை நோக்கிப் பாடப்பட்டது. அதில், ‘சிறுமதியாளன்’ என்று தம்மைக் குறித்து குறைப்பட்டுக்கொள்ளும் வகையிலான குறிப்புகளில் ஒன்று, வட்டிக் கொடுமையையும் உள்ளடக்கியிருக்கிறது.
‘வட்டியே பெருக்கிக் கொட்டியே
ஏழை மனைகவர் கருத்தினேன்…
என்னினும் காத்தருள் எனையே..’
வட்டிக்குப் பணம் கொடுத்து அதற்கீடாய் ஏழைகளின் வீடுகளைக் கவர்ந்துகொள்ளத் துடிக்கும் கொடுமையாளர்க்கு இறைவனின் அருள் கிடைக்கப்பெறாது என்பது வள்ளலார் உணர்த்த விழையும் உட்பொருள்.
வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடிய காலத்தில் பொருளிலார் வட்டி என்னும் கொடுமைக்கு ஆளாகினர் என்பதை இந்த வரிகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்தச் சமூகக் கொடுமையைக் கண்டித்த சீர்திருத்தக் குரல், ஆறாம் திருமுறையில் கேட்கிறது.
சுவைமயக்கம்
‘விருப்பிலேன் போலக்
காட்டினேன் அன்றி
விளைவிலாது
ஊன் எலாம் மறுத்த கருப்பிலே
எனினும்
கஞ்சியாதிகளைக் கருத்துவந்து
உண்ணுதற்கு அமையேன்’
என்கிறது ‘அவா அறுத்தல்’ என்னும் பதிகம். வறட்சிக் காலத்தில் உயர்வகை உணவு வகை களைத் தவிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், ஏழைகளின் உணவான கஞ்சியைக் குடிப்பதற்குத் தயங்கினேன் என்று செல்வந்தர்களின் சோற்று ஆசையைக் கண்டித்துள்ளார் வள்ளலார்.
‘பருப்புக் கறியிலே
பொரித்த கறியிலே
கூட்டுக் கறியிலே
கலந்த பேராசை வெறியிலே
உனையும் மறந்தனன்
வயிறு வீங்கிட
உண்டேன் எந்தாய்’
என்கிறது ‘அவா அறுத்தல்’ பதிகத்தின் மற்றுமொரு பாட்டு. ‘மீதூண் விரும்பேல்' என்கிற ஆத்திச்சூடி உபதேசமன்று இப்பாடல். ஏழைகள் பசித்திருக்க, சுவையுணவு தேடுவதும் அவற்றை மறைத்துவைத்து உண்பதும் இறைவனை அடை வதற்குத் தடைகளாகும் என்கிற சமூக அக்கறை தொனிக்கும் ஆன்மிக வழிகாட்டல். புலனடக்கம் பேசுவதோடு பொதுநலத்தையும் வலியுறுத்துவது.
பகுத்துண்டு பல்லுயிர்…
‘தனித்தனி முக்கனி பிழிந்து…’ என்று தொடங்கி இறையைச் சிறப்பிக்கும் வள்ளலா ரின் பாடல் பிரபலமானது. முக்கனிகளையும் ஒருசேர அவர் குறிப்பிடும் மற்றொரு பாடலும் உண்டு.
‘வாழை தகுபலா
மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும்
கிள்ளி ஓர் சிறிதும்
சூழ்ந்தவர்க்கு
ஈந்திடத் துணியேன்’
முக்கனிகளில் யாதொன்றைச் சாப்பிட நேர்ந்தாலும் அவற்றின் தோலைக்கூட அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மனமில்லாதவன் இறையருளை வேண்டி நிற்கிறேன் என்று வள்ளலாரின் பாடல்கள் தன்னிலையில் பாடப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உயர்குடி மக்கள் மீது அவர் தொடுத்த சாட்டையடிகள் என்பதைத் தனித்துச் சொல்லத் தேவையில்லை. அந்தச் சாட்டையடிகள் தவம்புரிவோர் போல நடிப்போரின் முதுகுகளையும் அவ்வப்போது பதம்பார்க்கின்றன.
‘சுவைமயக்கம் குறித்த இந்தப் பாடல் வரிகள் எல்லாம் தன்னிலையில் அல்லவா பாடப் பட்டிருக்கின்றன?’ என்கிற கேள்வி எழுந்தால், வள்ளலாரின் ‘பிள்ளைச் சிறுவிண்ணப்பத்தை’யும் கருத்தில் கொள்ள வேண்டும்.
‘அறிவிலாச் சிறிய பருவத்திற்றானே
அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
பிறிவிலாது என்னுள் கலந்த நீ அறிதி’
நினைவு தெரிந்த நாளிலிருந்தே உணவில் நாட்டம் கொள்ளாதிருந்தவர் வள்ளலார் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு எடுத்துச்சொல்கிறது. பசியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக உணவுண்ட போதும், வெறுப்புடனேயே உண்டேன் என்கிறது சிறுவிண்ணப்பத்தின் மற்றொரு பாடல். எனவே, தன்னைச் சொல்லிப் பிறர்க்கு உணர்த்தவே அவர் முயன்றிருக்கிறார் என்று கொள்ள வேண்டும்.
பக்குவம் செய்வோன்
அருள் வேண்டும் பக்தனுக்கே உயிரிரக்கம் காட்டாமை குறித்து மனக்கவலை ஏற்படுகையில் ஆட்டுவிக்கும் இறை, அதை எப்படிக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்? இறைவனைக் கருணை மயமானவன் என்றே வள்ளலார் வர்ணிக்கிறார். ஆட்கொள்வோரையும் கருணைமயமாக்க கடமைப்பட்டவன் அவன்.
‘கல்லாய மனத்தையும்
ஓர் கணத்தினிலே கனிவித்துக்
கருணையாலே
பல்லாரும் அதிசயிக்கப்
பக்குவந் தந்து
அருட்பதமும் பாலிக்கின்றோய்…’
என்கிறது ‘தற்சுதந்திரமின்மை’ என்னும் தலைப்பிலான பதிகம்.
பகுத்துண்டு பல்லுயிர் காப்பதை நூலாசிரி யர்கள் கூறியவற்றுள் எல்லாம் தலையாயது என்று வலியுறுத்தினார் வள்ளுவர். ‘கொல்லாமை’ குறித்தும் ‘பசிப்பிணி நீக்கம்’ குறித்தும் நூலோர் கூறியதில் எல்லாம் தலையாயது வள்ளலாரின் அருட்பா. (ஜோதி ஒளிரும்) - செல்வ புவியரசன், selvapuviyarasan@gmail.com