

அன்பே சிவம் என்று திருமூலர் காட்டிய அதே வழிதான். அன்புசெய், இறைவனை அடையலாம் என்று வள்ளலாரும் வழிமொழிகிறார். பரசிவ வணக்கத்தோடு தொடங்குகிறது ஆறாம் திருமுறை. தனிக் குறளும் இரு விருத்தங்களுமாக எழுதப்பட்ட மூன்று பாக்களைக் கொண்டது, ‘பரசிவ வணக்கம்’. அவற்றில் ஒரு பாடல், பரசிவத்தை அன்பு என்கிற கைப்பிடிக்குள் அடங்குகின்ற மலையே என்று துதிக்கிறது.
அன்பு என்கிற குடிலுக்குள் அகப்பட்ட அரசு, அன்பு என்கிற வலைக்குள் அகப்பட்ட பரம்பொருள், அன்பு என்கிற கைக்கிண்ணத்தில் அகப்பட்ட அமுதம், அன்பு என்னும் குடத்தில் அடங்கிய கடல்… இவ்வாறு அப்பாடல் நீள்கிறது. அன்பு எனும் அணுவுக்குள் அமைந்த பேரொளியாக இறையைச் சிறப்பித்து, அன்பே உருவாகிய சிவமே என்று போற்றி நிறைவுறுகிறது.
அன்பெனப்படுவது யாதெனின்: கண்டம் எல்லாம் கடந்து அகண்டமாய், அதுவும் கடந்த வெளியாய், வெளியிலும் கடந்த தனிவெளியாய் நிற்கும் தனிக்கடவுள் என்று திருச்சிற்றம்பலத்தானுக்குத் தெய்வமணி மாலை பாடிய வள்ளலார், அந்தத் தனிவெளியும் அன்பெனும் கைப்பிடிக்குள் அடங்கும் என்கிறார். அன்பென அவர் குறிப்பதை இறைவனின் மீது கொண்ட பற்று என்று சுருக்கிப் பொருள்கொண்டுவிடக் கூடாது.
‘இரங்கில் ஓர் சிறிதும்
இரக்கமுற்று அறியேன்…’
‘வாட்டமே உடையார்
தங்களைக் காணின்
மனம் சிறிதும்
இரக்கமுற்று அறியேன்…
அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு
என்கடவேனே’
என்று பலவாறு அவர் ‘ஆற்றாமை’ பதிகத்தில் குறிப்பால் உணர்த்துவதையும் கொண்டுகூட்டியே பொருள்காண வேண்டும். துன்புற்று வாடுவோரைக் கண்டு சிறிதும் மனம் இரங்காதோர் இறையருளைப் பெறுவது சாத்தியமில்லை என்பதே வள்ளலாரின் முடிவு. அதனினும் குறிப்பாக, கையில் பணமில்லாத ஏழை மக்களுக்கு துன்பங்கள் விளைவிப்போருக் கும் அவர்கள் உணவுக்காக வைத்திருக்கும் ‘சோற்றுப் பணத்தைக்’ கவர்வோருக்கும் திருவருள் வாய்க்கப் பெறுவதில்லை என்று இன்னும் அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
கோபமும் கொதிப்பும்: ‘பிறப்பவம் பொறாது பேதுறல்’ எனும் தலைப்பில் அமைந்த அந்தாதிப் பதிகத்தில், ‘இழிவிலங்கில் இழிந்துநின்றேன், இரக்கம் ஒன்றும் இல்லேன்’ என்கிற அவரது புலம்பலையும் கேட்க முடிகிறது. இரக்கமில்லாத் தன்மையினை இன்னும் இன்னும் கடுமையான வார்த்தைகளால் அவர் சுட்டிக்காட்டுகிறார். தன்னை முன்னிறுத்திப் பாடும் பக்தி மரபில் இந்தப் பாடல்கள் அமைந்திருந்தாலும் முன்னிலை, படர்க்கையையும் உள்ளடக்கியே பாடப்பட்டவை.
‘சாதி மதம் சமயம் எனும்
சங்கடம் விட்டறியேன்
சாத்திரச் சேறாடுகின்ற
சஞ்சலம் விட்டறியேன்…
சோதிமணிப் பொதுவில்
நிருத்தமிடும் ஒருத்தர்
திருக்கருத்தை அறிவேனோ’
என்று ‘முறையீடு’ எனத் தலைப்பிட்ட பதிகத்தில் சமூக அவலங்கள் குறித்து அவரிடத்தில் எழுந்து நின்ற கோபத்தையும் கொதிப்பையும் உணர முடிகிறது.
தடையென எது வந்தபோதும்: அருட்பாவின் ஆறாம் திருமுறையில் பக்தியும் உண்டு, புலனடக்கம் பேசும் யோகமும் உண்டு. சித்தாந்தம் பேசும் ஞானமும் உண்டு. தன்னையடக்கி ஒருமை நிலையோடு இறையைச் சரணடைந்தால் இன்பநிலை பெறலாம் என்பதோடு வள்ளலார் நிறுத்திக்கொண்டுவிடவில்லை. தன்னை அடக்கினால் மட்டும் போதாது, தனது சக மனிதனின் மீது அன்பு செலுத்த வேண்டும். அதற்குத் தடையாக சமயம், சாத்திரங்கள் என எது இருந்தாலும் அவற்றை விட்டொழிக்கச் சிறிதும் தயங்கக் கூடாது என்கிற நிலையை நோக்கி அவர் நகர்கிறார். வள்ளலாருக்கு முந்தைய அருளாளர்களின் பாடல்களில், இந்த மனித ஒருமைப்பாட்டுக் கருத்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எட்டிப் பார்த்தன. ஆறாம் திருமுறையில் அதுவே முதன்மை வகிக்கிறது. இடைப்பட்ட காலத்தில் சாதிய வன்கொடுமைப் போக்கு அதிகரித்ததும் அதற்கு ஒரு காரணம். வள்ளலாரின் காலத்துக்குப் பின்பு வந்த சமூகச் சீர்திருத்தவாதிகள் அவரைப் போற்றிப் புகழ்ந்து தங்களது முன்னோடியாக அவரை ஏற்றுக்கொள்வதற்கும் அப்பாடல்களே ஆதாரம்.
(ஜோதி ஒளிரும்)
- செல்வ புவியரசன்
selvapuviyarasan@gmail.com