

மனிதன் சுயமாக வானத்தில் பறப்பதோ நீரில் நடப்பதோ அற்புதமல்ல. அதைப் பறவைகள்கூட எளிதாகச் செய்துவிடுகின்றன. மனிதன் மண்ணுக்குள் மூச்சடக்கி புதைந்து கிடப்பது என்பது அற்புதமல்ல. அதைப் புழுக்களும் பாம்புகளும்கூட மிக எளிதாகச் செய்துவிடுகின்றன. மனித வாழ்வின் அற்புதம் என்பது மனிதன் மனிதனாகவே வாழ்ந்துகாட்ட வேண்டும் என்பதே. எந்த மனிதன் மற்ற மனிதர்களிடம் அன்புடன் நடந்து, அவர்களின் பிழைகளை மன்னித்து உலகில் உண்மையுடனும் நீதி நேர்மையுடனும் வாழ்கிறானோ அதுவே சிறந்த அற்புதமாகும். அத்தகைய மகத்தான அற்புதங்களையும் வழிகாட்டுதல்களையும் நபிகளாரின் வாழ்வெங்கிலும் காண முடிகிறது.
l தான் உணர்ந்த சத்திய நெறியான ஏகத்துவ இறைக் கொள்கையை மக்களிடம் சென்றடைய வைப்பதில் உறுதியுடன் செயல்பட்ட நபிகளார், அதைச் சாதிக்கச் சகிக்க முடியாத பல துயரங்களை, இழப்புகளை, போர்களை எல்லாம் எதிர்கொண்டு அதில் வெற்றி கண்டார்.
l தொடக்கம் முதல் இறுதிவரை தன் கொள்கையில் உறுதியுடன் நின்ற நபிகளார், மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய உலகியல் வாழ்க்கையின் ஒழுக்க நெறிகளைச் சொன்னதோடு, அதன்படி தானும் வாழ்ந்துகாட்டியது ஓர் அற்புதம்.
l கறுப்பரையும் வெளுத்தவரையும் ஏழை களையும் பணக்காரர்களையும் இஸ்லாம் என்னும் ஒரே குடையின் கீழ் சமத்துவமிக்கவர்களாக ஒன்றிணைத்தது ஓர் அற்புதம்.
l பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்றும், நற்செயல்களின் அடிப்படையில்தான் மனிதனின் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதையும் கூறி அதற்குச் செயல்வடிவம் தந்தது ஓர் அற்புதம்.
l நீதியின் முன் அனைவரும் சமம் என்கிற நிலைப்பாட்டை ஏற்படுத்தியதோடு, “என் மகள் பாத்திமா திருடினாலும் அவளது கையையும் துண்டிக்கத் தயங்க மாட்டேன்” என்று நபிகள் கூறியது ஓர் அற்புதம்.
l நபி, மக்காவை விட்டு மதீனாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற நேரம், தவ்ர் என்கிற குகையில் தன் நண்பர் அபூபக்கருடன் தங்கியிருந்தபோது, குகையின் வாயிலில் புறாக்கள் கூடுகட்டியதும் சிலந்தி தன் வலையைப் பின்னியதும் அதனால் எதிரிகளிடமிருந்து நபிகளாரும் அவரது தோழர்களும் காப்பாற்றப்பட்டதும் ஓர் அற்புதம்.
l நபிகளார் மக்காவை விட்டு மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரா) சென்றபோது, 100 ஒட்டகங்களைப் பெறுவதற்காக சுராக்கா என்பவர் இவர்களைப் பிடிக்க முற்பட்டபோது, அவரது குதிரையின் கால்களை மூன்று முறை பூமி பிடித்துக் கொண்டது. அதனால், சுராக்கா தரையில் வீழ்ந்தார். இது நபிகளாரின் பிரார்த்தனையால் நிகழ்ந்தது என்பது ஓர் அற்புதம். இதன் தொடர்ச்சியாக, சுராக்கா மனம் திருந்தினார். அவருக்கு மன்னிப்பும் அபயமும் வழங்கி நபிகளார் இரக்கத்துடன் நடந்துகொண்டது ஓர் அற்புதம்.
l திருக்குர்ஆன் வேதமே நபிகளாருக்கு இறைவனால் அருளப்பட்ட மாபெரும் அற்புதமாக இருக்கிறது. எக்காலத்துக்கும் பொருத்தமானதாக என்றும் உயிர்ப்புடன் விளங்குகிற திருக்குர்ஆன் என்பது நபிகளாரின் வாயிலாக உலக மக்களுக்குக் கிடைத்த வாழும் அற்புதமாகவே உள்ளது.
- மு.முகம்மது சலாகுதீன்
ervaimohdsalahudeen@ gmail.com