

காரணங்கள் இன்றிக் காரியங்கள் இல்லை என்பார்கள் ஆன்மிகத்தில் தோய்ந்த ஞானிகள். மூன்று ஆழ்வார்களின் வாழ்வில் நடந்த அப்படியானதொரு சம்பவமே இன்றைக்கும் ‘திருக்கோவிலூர் வைபவ’மாக ரங்கம், திருப்பதி, திருக்கோவிலூர் உள்ளிட்ட வைணவக் கோயில்களில் நடத்தப்படுகின்றது. இந்த ஆண்டு இந்த வைபவம் நவம்பர் 1 முதல் 3 வரை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் அருள்பாலிக்கும் தெஹலிச பெருமாளின் சேவடியைத் தினம் தினம் சேவிக்கும் நோக்கத்தோடு மிருகண்ட மகரிஷியின் ஆசிரமம் அமைந்திருந்தது. காஞ்சிபுரத்தில் பிறந்து வைணவ அடியாராகத் தெய்வ கைங்கர்யங்களில் ஈடுபட்டுவந்த பொய்கையாழ்வார் பெருமாளைச் சேவிக்க திருக்கோவிலூருக்கு வருகிறார். வரும் வழியில் பெருமழை பெய்கிறது. அங்கிருக்கும் மிருகண்ட மகரிஷியின் ஆசிரமத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க அனுமதி கேட்கிறார்.
படுக்க, இருக்க, நிற்க: ஆசிரமத்தின் முன்பகுதியில் (நடை அல்லது ரேழி, தெஹலி) அவருக்கு இடம் கிடைக்கிறது. அந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம் என்னும் நிலையில் பொய்கையாழ்வார் ஓய்வெடுக்கிறார். சிறிது நேரத்தில் ஆசிரமத்தின் கதவை யாரோ தட்டுகின்றனர். மகாபலிபுரத்திலிருந்து வந்தவர் தன்னை பூதத்தாழ்வார் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அந்த இடத்தில் இருவர் இருக்கலாம் என்னும் நிலையில், அவருடன் அமர்ந்து பெருமாளின் பெருமைகளைப் பேசத் தொடங்குகிறார் பொய்கையாழ்வார்.
சில நாழிகை கழிந்ததும் மீண்டும் ஆசிரமத்தின் கதவுகள் தட்டும் ஒலி கேட்கிறது. கதவைத் திறக்கிறார் பொய்கையாழ்வார். திருவல்லிக்கேணியிலிருந்து வந்தவர் தன்னை பேயாழ்வார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த இடத்தில் அடைக்கலம் கேட்கிறார். அந்த ஆசிரம நடையில் மூவர் நிற்கலாம் என்னும் நிலையில் அவரை வரவேற்கிறார் பொய்கையாழ்வார். மூவரும் பெருமாளின் அவதாரச் சிறப்புகளைப் பேசிச் சிலாகிக்கின்றனர். அப்போது மூவர் மட்டுமே நிற்க முடியும் அந்த இடத்தில் மேலும் இருவர் நெருக்கி நிற்பதுபோல், ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. மூவருக்கும் மூச்சு முட்டுகிறது. மின்னல் வெட்டியது போன்ற பேரொளியில் மகாலக் ஷ்மி சமேதராக மகா விஷ்ணுவின் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கிறது.
பலனாகக் கிடைத்த பாசுரங்கள்: பொய்கையாழ்வார் அந்த ஆனந்த அனுபவத்தை, ‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக’ என்னும் பாசுரத்தால் பாமாலை சூட்டுகிறார். பூதத்தாழ்வாரோ, ‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக’ என்று தன்னுடைய ஆத்மார்த்தமான அன்பையே மாலையாக்குகிறார். பேயாழ்வார், லக் ஷ்மி நாராயணரின் பரிபூரண தரிசனத்தைக் கண்டு, ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று பாடி ஆனந்தக் கூத்தாடினார். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எத்தனையோ சிரமங்களுக்கும் தவங்களுக்கும் கிடைக்காத பெருமாளின் தரிசனம் அந்த மூன்று அருளாளர்களுக்கும் திருக்கோவிலூரிலிருக்கும் மிருகண்ட மகரிஷியின் ஆசிரமத்தின் நடையில் கிடைக்கிறது.
திருக்கோவிலூரில் அருள்பாலிக்கும் தெஹலிச பெருமாளின் திருவிளையாடலால் நிகழ்ந்த இந்தத் தரிசனத்தின் பலனாகப் பக்தித் தமிழிசைக்கு மூன்று திருவந்தாதிகள் கிடைத்தன. இதை அருளியதால் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதல் ஆழ்வார்கள் என்னும் பெருமையைப் பெற்றனர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் மெய்யாகிய உடலால் வேறுபட்டிருந்தாலும், உள்ளத்தில் பெருமாளைப் பற்றிய சிந்தனையால் ஒன்று பட்டிருந்தனர். பொய்கையாழ்வார் தன்னுடைய பாசுரத்தால் ஞான விளக்கேற்றினார். பூதத்தாழ்வார் தன்னுடைய முதிர்ச்சியடைந்த பக்தியால் அதை அன்பாக்கினார். ஞானத்தையும் அன்பையும் நேரில் தான் தரிசித்ததைப் பாசுரம் ஆக்கினார் பேயாழ்வார். எதற்கும் மீண்டும் ஒருமுறை கட்டுரையின் முதல் வரியைப் படித்துவிடுங்கள்!