

ஐந்தெழுத்தையும் ஐந்தொழிலையும் குறிப்பால் உணர்த்தும் ஆனந்தத் தாண்டவம்; நடமிடும் பொதுவின் முன்னே பொற்சபை; ஐம்பூதங்களில் ஆகாயத்தைக் குறித்து நிற்பது; ஆறு ஆதாரங்களில் இதயமாய் அமைந்தது என தில்லைக்குப் பெருமைகள் பற்பல. நடமிடும் உருவம், வெட்டவெளி அருவம், அருவுருவாய் லிங்கம் என மூன்று நிலை திருக்காட்சி.
திருவாசகத்தை வழிபடுநூலாகக் கொண்டு தனது தேடலைத் தொடங்கிய வள்ளலார், தில்லையை அடைந்தது இயல்பானதே. திருவாசகப் பதிகங்களில் சரிபாதி தில்லையில் பாடியவை. மணிவாசகரின் திருக்கோவையாரும் அம்பலத்தானைப் பாடியதே. தில்லை சிற்சபையிலேயே மணிவாசகர் இறையோடு கலந்து மறைந்தார். அங்கு, தூக்கிய திருவடியின் கீழ், நிரந்தரமாகவும் இடம்பிடித்துக்கொண்டார். அவர் வழி வந்த வள்ளலார், தாம் பாடிய பதிகங்களின் தொடக்கத்திலும் முடிப்பிலும் ‘திருச்சிற்றம்பலம்’ என எழுதும் சைவநெறியைப் பின்பற்றியவர். ஏறத்தாழ 12 ஆண்டுகள் சிதம்பர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர். தம் பெயரின் முன்னே சிதம்பரம் என்று அங்கே பிறவாரா யினும் ஊர்ப் பெயர் குறித்தவர். ‘எல்லாம் செயல்கூடும்…’ என்று தன் மீது ஆணையிட்டு தில்லைநாதனின் பெருமையைப் பாடியவர்.
ஒரு தெய்விக செய்முறை: வள்ளலார் பாடிய தில்லைத் திருப்பதிகங்கள் தமிழ் உள்ளவரை வாழும். ‘தனித் தனி முக்கனி பிழிந்து…’ அவற்றில் ஒன்று. மா, பலா, வாழை, சர்க்கரை, கற்கண்டுப் பொடி, தேன், பால், தேங்காய்ப் பால், பாசிப் பருப்பின் பொடி, நெய் எல்லாமும் கலக்கும்வகை சொல்லி, அதனினும் மேலாக இனித்திடும் அமுதென்று அம்பலத்தரசைத் தன் ‘அருள் மாலை விளக்கத்தால்’ அணிசெய்தவர் வள்ளலார்.
‘இனித்த நறுநெய் அளைந்தே
இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும்
இனித்திடும் தெள்ளமுதே…’
என்று அவர் பாடுகையில், நினைவில் தமிழ் சுரக்கிறது, நாவிலும் நீர் சுரக்கிறது. இயல்பிலேயே நாம் புலனுணர்ச்சிக்கு ஆட்பட்டவர்கள் என்பதால், அருள் மாலை விளக்கத்தின் நூறு பாடல்களில் ‘தனித்தனி முக்கனி பிழிந்து’, ‘கோடையிலே இளைப்பாற்றி’ எனத் தொடங்கும் பாடல்களே நம் கவனத்தை உடனடியாக ஈர்த்துக்கொள்கின்றன. சாதி, சமய வேறுபாடுகளைக் களைந்தவராக இறையைத் தொழும் பாடல்களும் அவற்றுள் உள்ளடக்கம்.
‘சாதி குலம் சமயம்
எலாம் தவிர்த்து
எனை மேல் ஏற்றி
தனித்த திருவமுதளித்த
தனித் தலைமைப் பொருளே!’
என்று தொடங்குகிறது அருள் மாலை விளக்கத்தின் பாடல் ஒன்று. ‘கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டிய பல்சமயக் கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும் கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம் பிள்ளை விளையாட்டு’ என்று சாடுகிறது மற்றொரு பாமாலை. ‘எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே’ என்று ஓங்கிய குரலில் முழங்குகிறார் வள்ளலார்.
தாயும் மறப்பாள்: ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே’ என்கிற ‘அருள் மாலை விளக்கம்’ எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய தமிழிசைப் பாடல்களில் பிரபலமானது. எல்லார்க்கும் பொதுவாகப் பொதுவில் நடமிடும் அரசாகவே சிவத்தைக் கண்டார் வள்ளலார். ‘பெற்ற தாய் தன்னை மக மறந்தாலும்..’ என்கிற ‘நமச்சிவாய சங்கீர்த்தன லகரி’யும் எம்.எஸ். குரலில் பிரபலமான பாடல். ‘பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்..’ என்கிற ஒப்பீட்டில், வள்ளலார் தான் காணும் ஆகாயத்தில் மட்டுமன்றி, வாழும் மண்ணிலும் கால்பதித்து நிற்கிறார். அப்படியான பெருமாட்டிகளும் இருக்கிறார்கள்தானே!
எம்.எஸ். குரலில் ஒலிக்கும் ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’ என்கிற அருட்பா, சித்தர்களின் பரிபாஷையில் அமைந்தது. மயிலென்று வள்ளலார் பாடுவது வாசியோகத்தைத்தான் என்று ‘சுப்ரமணியர் ஞானம்-500’ நூலைச் சான்று காட்டி விளக்கம் அளிக்கிறார் பா.கமலக்கண்ணன். சுழுமுனை சுவாசம் உயர்ந்து ஆடுவதையும் நாதங்கள் கேட்பதையுமே இப்பாடல் உணர்த்துகிறது என்பது பா.கமலக்கண்ணனின் உரைவிளக்கம். சித்தர்களின் பாடல்களுக்கே உரிய ‘ஏமாற்றும் எளிமை’யை வள்ளலாரிலும் பார்க்க முடிகிறது.
சிவநடனத்தைப் பாடும்போதே அருளே என்றும் ஒளியே என்றும் வர்ணிக்கத் தொடங்கி விட்டார் வள்ளலார். அருளே விரைவில் ஒளியுமானது.
(ஜோதி ஒளிரும்)
செல்வ புவியரசன்
selvapuviyarasan@gmail.com