

விதவிதமான கையடக்கக் கருவிகளை டிஜிட்டல் உலகம் இன்றைய சிறார்களிடமும் பதின்ம வயதினரிடமும் கொடுத்திருக்கிறது. அதனுள் புதைந்துவிடும் அவர்கள், பெற்றோரின் முகங்களைக்கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இணையம் வழியே நல்லது, தீயது என இரண்டுமே கிடைக்கின்றன. ஆனால், பெரும்பாலான பெற்றோர், தீயதைத் தடுக்க இயலாமல் பிள்ளைகள் மேல் கோபம் கொண்டு, அவர்களை அடிக்கிறவர்களாகவும் வசை மொழிகளால் காயப்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள். தேவையான தருணங்களில் பிள்ளைகளைக் கண்டிக்க தயக்கம் தேவையில்லைதான். ஆனால், எந்த முறையில் அவர்களைக் கண்டிப்பது என்பதில்தான் பெற்றோர் கோட்டை விடுகின்றனர். கண்டிப்பதற்கு முன் டிஜிட்டல் சாதனங்களில் பிள்ளைகளின் நடவடிக்கை களைக் கண்காணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அவர்களுக்கு வழிகாட்டுங்கள். அதன் பின்னர், அவர்கள் சொல்வதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
புனித விவிலியம் சொல்கிறது: “கூர்மையாகக் காது கொடுத்துக் கேட்கிறவர்களாகவும் யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் பாதகமில்லாமல் முடிவெடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.” என யாக்கோபு புத்தகத்தின் முதல் அதிகாரத்தின் 19ஆம் வசனம் சொல்கிறது. பள்ளி, கல்லூரியில் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும் மனத்தில் இருக்கிற பயம், கவலைகளையும் பிள்ளைகள் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட மாட்டார்கள். சூழல் அமைந்து அவர்கள் சொல்ல முன்வரும்போது காதுகொடுத்துப் பொறுமையாகக் கேட்கத் தவறிவிடாதீர்கள். அப்படிக் கேட்கும்போது சிறிது சிறிதாக எல்லாவற்றையும் கொட்டிவிடுவார்கள்.
மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கொட்டுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் பெற்றோராக நீங்கள் இருக்கிறீர்களா என்பது முக்கியமானது. குடும்பமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் பிள்ளைகள் மனம் திறந்து பேசலாம். அப்படிப் பேசும்போது, உங்களுக்கு இதேபோன்ற சூழ்நிலை உங்கள் இளமைப் பருவத்தில் ஏற்பட்டபோது அவற்றை எப்படிச் சமாளித்தீர்கள், இப்போது சந்திக்கும் பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைக் கூறுங்கள். முக்கியமாகத் தன்னம்பிக்கை, துணிவு, உழைப்பு ஆகியவற்றில் நீங்கள் முன்மாதிரியாக இருப்பதை அவர்களுக்கு சூழல் அமையும்போதெல்லாம் உணர்த்திக்கொண்டே இருங்கள். இது உங்கள் பிள்ளைகளிடம் உங்களை விளம்பரப்படுத்திக்கொள்வது போன்றதல்ல. வலிந்து சில விஷயங்களில் உங்களுடைய நேர்மறையான முன்மாதிரிகளை அவர்களிடம் காட்டும்போது அது அவர்களை வலிமையானவர்களாக மாற்றும் என்பது நிச்சயம்.
இன்றைய பெற்றோர் பிள்ளைகளிடம் இறை பக்தியை வளர்க்க முடியாமல் போய்விடுகிறார்கள். கடவுள் மீது ஆழமான அன்பு நம் இதயத்தில் இருந்தால்தான் நம் பிள்ளைகளின் இதயத்தில் அதை நம்மால் வளர்க்க முடியும். லூக்கா புத்தகம் அதிகாரம் 6 வசனம் 40இல் “நீ இறைவனாகிய வானகத் தந்தையிடம் உன் முழு இதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூறுவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இதயத்தில் இருக்கக்கடவது. நீ அவற்றை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதிப்பாயாக’ எனக் கூறியிருப்பதைப் பாருங்கள். பக்திக் குருத்து உங்கள் இதயத்தில் இருப்பதைப் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவது முக்கியமானது. “நல்ல மனிதன் தன் இதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; இதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என்று இயேசு போதித்ததை லூக்கா தன்னுடைய 6வது அதிகாரத்தின் 45வது வசனம் வழியாக எடுத்துக்காட்டுகிறார்.