

இறை நம்பிக்கையாளர்களின் தாயாரும் நபிகளாரின் மனைவியுமான ஸயீதா ஆயிஷா விடம் முகமது நபி (ஸல்) அவர்களின் குணம் பற்றிக் கேட்கப்பட்டபோது, “நபிகளாரின் குணம் குர்ஆன்” என்று பதிலளித்தார். நபிகளாரின் நேர்த்தியான குணத்தைப் பற்றிய குறிப்புகள் இங்கே:
l வாக்குவாதம், ஆணவம், அற்பமான பேச்சு ஆகியவற்றை முகமது நபி (ஸல்) எப்போதும் தவிர்த்துவிடுவார்.
l தன்னிடம் வருபவர்களை அன்புடன் வரவேற்பார். வெறுப்பை உருவாக்கும் எதையும் சொல்ல மாட்டார். மாறாக அவர்களிடம் மென்மையுடனும் இரக்கத்துடனும் கனிவுடனும் இருப்பார்.
l எங்கே சென்றாலும் அங்கே கிடைக்கும் இடத்தில் அமர்ந்துகொள்வார். தனக்கென்று சிறப்பு இடத்தை அவர் ஒருபோதும் தேர்ந்தெடுக்க மாட்டார்.
l இறைத்தூதர் எல்லாரிடமும் கைகுலுக்குவார். யாரிடம் கைகுலுக் கினாலும் முதலில் கையை விடுவிப்பது அவராக இருக்க மாட்டார்.
l அவர் ஒருபோதும் தீமைக்குத் தீமையைப் பதிலாக அளிக்க மாட்டார். அவர் எப்போதும் மக்களை மன்னிப்பார். உண்மையில், ஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த 23 ஆண்டுகளில், நபிகள் நாயகம் பல சிரமங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்தார். அவர் எப்போதும் தனக்கு அநீதி இழைத்தவர்களை மன்னித்தே உள்ளார்; ஒருபோதும் பழிவாங்க முயன்றதில்லை.
l நபிகள் நாயகம் எப்போதும் குழந்தைகள் மீது பாசமும் கருணையும் காட்டுவார்.
l அவர் ஒருபோதும் எந்தக் குழந்தையையும் திட்டியதில்லை, அவமானப்படுத்தியதும் இல்லை.
l வேண்டுகோளுடன் வந்த எவரையும் நபியவர்கள் திருப்பி அனுப்பியதில்லை.
lஅல்லாஹ்வின் தூதர் மக்களின் சுமைகளைக் குறைக்கவும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் எப்போதும் முயன்றார்.
l நபிகள் நாயகம் கைம்பெண்களையும் ஆதரவற்றோரையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் எப்போதும் கவனித்து அன்புடன் நலம் விசாரித்தார்.
l அவர் ஏழைகளிடம் மரியாதையும் அன்பும் காட்டினார்.
l நபியவர்கள் அண்டை வீட்டாரை நன்றாக நடத்தினார்.
l மக்களின் நற்செயல்களுக்கு அவர் ஊக்கமளித்தார்.
l பரம்பரை, கோத்திரம், நிறம் போன்றவற்றின் அடிப்படையில் நபிகள் நாயகம் யாருக்கும் முன்னுரிமை அளிக்க மாட்டார்; மாறாக, “மக்களே! உங்கள் இறைவன் ஒருவனே, உன் தந்தை ஒருவரே! அரேபியரைவிட அரபியரல்லாதவரும், கறுப்பினத்தவரைவிட வெள்ளைக்காரரும், வெள்ளைக்காரரை விடக் கறுப்பினத்தவரும் மேன்மை இல்லை. இருப்பினும், பக்தியுள்ளவர்கள் மற்றவர்களைவிடச் சிறந்தவர்கள். சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் சபையில் உங்களில் மிகவும் உன்னதமானவர் உங்களில் மிகவும் பக்தியுள்ளவரே” என்றார்.
l நபியவர்கள் தங்கள் விலங்குகளுக்குச் சரியான நேரத்தில் உணவையும் தண்ணீரையும் வழங்க மக்களை ஊக்குவித்தார்.
l அல்லாஹ்வின் தூதர் சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் வளர்க்கப் பாடுபட்டார். அவர் முஸ்லிம்களை ஒற்றுமையாக வைத்திருக்கவும், அவர்களுக்கிடையேயான வெறுப்பை அகற்றவும் முயன்றார்.
l சக மனிதருக்குத் தீங்கு விளைவிப்பது, அவர்களைத் தவறாக நடத்துவதற்கு எதிராக மக்களை எச்சரித்தார்.
l பெண்களுக்கு எந்த அந்தஸ்தும் முக்கியத்துவமும் வழங்கப்படாத, மகள்கள் அவமானமாகக் கருதப்பட்ட அறியாமை காலத்தில், நபிகள் நாயகம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தார். தனது உயர்ந்த நடத்தை, தூய போதனைகள் மூலம் பெண்களின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.