

சிவனடியாரான பூசலார் நாயனாரின் குருபூஜை தினம் இன்று (27.10.2022) அனுஷ்டிக்கப்படுகிறது. பூசலார் நாயனார் சிவபெருமானோடு இரண்டறக் கலந்த நட்சத்திரம் ஐப்பசி அனுஷம். இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் அவரது திருவுருவச் சிலைக்குச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
தொண்டை நாட்டின் திருநின்றவூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் பூசலார். சிவனடியாராகிய இவர் சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு புரிவதையே பிறவிப்பயன் என்று வாழ்ந்துவந்தவர். தான் ஈட்டிய செல்வங்களைக் கொண்டு, அடியார்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவந்தார். இந்த நிலையில், சிவபெருமானுக்கு உலகே வியக்கும் வகையில் ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய மனத்தில் தோன்றியது.
பூசலாருக்குக் கோயில் கட்டுவதற்குப் பொருள் கிடைக்காததால், புறத்தில் தான் எப்படிக் கோயில் எழுப்ப வேண்டும் என்று நினைத்தாரோ, அதே போன்று தம்முடைய மனத்தில் படிப்படியாகக் கோயில் எழுப்பத் தொடங்கினார். இதே வேளையில்தான் பல்லவ மன்னன் ஒருவனும் உலகம் வியக்கும்படி பிரம்மாண்ட கோயிலைக் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தவிருந்தான். பூசலாரும் மனத்தில் எழுப்பிய கோயிலைக் கட்டிமுடித்து பல்லவ மன்னன் குடமுழுக்குக்கு நேரம் குறித்த அதே நேரத்தில் தம் மனத்தில் சிவபெருமானுக்கு எழுப்பிய கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்த உத்தேசித்திருந்தார்.
பொருள் வசதி இல்லாத நிலையிலும் தம் மனத்தே அழகியதோர் ஆலயத்தை ஆகம முறைப்படி எழுப்பிய பூசலார் நாயனாரின் சிவபக்தியின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், பல்லவ மன்னனின் கனவில் தோன்றி, “பூசலார் எழுப்பியிருக்கும் கோயிலில் இன்று நான் குடிபுகப் போவதால், நீ கட்டியிருக்கும் கோயில் குடமுழுக்கை வேறொரு நாளில் வைத்துக்கொள்” என்று அசரீரியாகத் தெரிவித்தார். பல்லவ மன்னன் உறக்கத்திலிருந்து எழுந்து பூசலார் கட்டியிருக்கும் கோயிலைத் தேடிப் புறப்பட்டுச் சென்றான். பூசலார் அகத்தில் கட்டியெழுப்பிய கோயில் குறித்துக் கேள்விப்பட்டதும் வியந்துபோன பல்லவ மன்னன், சிவபெருமானின் கருணையை நினைத்து வியந்தான். சிவபெருமான் குடியிருக்கும் பூசலாரின் பாதம் பணிந்து பரவசமடைந்தான் பல்லவ மன்னன்.
பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக் கோயிலில் சிவபெருமானை ஸ்தாபித்துக் குடமுழுக்கு நடத்தி, முப்பொழுதும் பூசனைகள் செய்து சிவபெருமானைப் போற்றி இறைவனுடன் கலந்தார். அவர் சிவபெருமானோடு ஐக்கியமான குருபூஜை நாள் இன்று. திருநின்றவூர் இருதயாலீசுவரர் ஆலயத்தின் கருவறையில் ஈசனுக்கு அருகிலேயே பூசலார் இருந்து அனைவருக்கும் அருள்புரிந்துகொண்டிருக்கிறார். இதயப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பூசலார் நாயனாரை வணங்கிச் சென்றால், அதிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நமபிக்கையாக இருக்கிறது. பூசலார் நாயனாரின் குருபூஜையை ஒட்டி இருதயாலீசுவரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடு சிவபெருமானுக்கு நடக்கவிருக்கிறது. சிவபெருமானே விரும்பிக் குடியேறிய பூசலார் நாயனாரின் குருபூஜை தினத்தில் அவரை வணங்கி சிவபெருமானின் பேரருளைப் பெறுவோம்.