இறை நம்பிக்கை: தீபங்களின் திருநாள்

இறை நம்பிக்கை: தீபங்களின் திருநாள்
Updated on
3 min read

இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகத் தீபாவளி திகழ்கிறது. தீபாவளித் திருநாளில் தங்க நாணயம், வெள்ளியிலான பொருட்கள் வாங்கினால் குடும்பத்தில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமன்றித் தென் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு நரகாசுர வதம் தொடர்பான புராணக் கதையே முன்னிறுத்தப்படுகிறது.

நற்கதிக்கு அருளும் திருநாள்: பண்டிகைகளின் நோக்கமே இறைவனின் கருணை யைப் பரிபூரணமாகப் பெற வேண்டும், ஆரோக்கியம் வேண்டும், நற்காரியங்களில் மனத்தைக் குவிக்க வேண்டும், நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்பதுதான். இதை வலியுறுத்துவதற்கே தீய செயல்களைச் செய்தவர்களை அசுரர்களாகவும் சில நேரம், தேவர்களும் முனிவர்களும் மன்னர்களும்கூட அத்தகைய செயல்களில் ஈடுபடும்போது அந்தத் தீய குணங்களை அழிப்பதற்காக அவதாரங்கள் நிகழ்த்துவதைப் புராணக் கதை களின்வழி அறிய முடிகிறது. நரகாசுரன் என்னும் அரக்கனின் முடிவும் அவ்வாறே மகாவிஷ்ணுவால் ஏற்படுகிறது. மண்ணுலகில் முனிவர்கள், அரசர்கள் ஆகியோரைத் துன்புறுத்திய நரகாசுரன், தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை.

தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். விஷ்ணுவோ தன்னுடைய கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனுக்கு முடிவு ஏற்படும் என்கிறார். திருமால் வராஹ அவதாரம் எடுக்கும்போது அவருக்கும் பூமாதாவுக்கும் பிறந்தவன் இந்த நரகாசுரன். நரகாசுரன், பிரம்மாவிடம் சாகா வரம் கேட்கிறான். “அதைக் கொடுக்க முடியாது. வேறு வரம் கேள் தருகிறேன்” என்கிறார் பிரம்மன். தன் பிள்ளையை எந்தத் தாயும் எந்தக் காலத்திலும் கொல்ல மாட்டாள் என்பதால், தன் தாயாலேயே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் கேட்டான் நரகாசுரன். அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார் பிரம்மன். காலம் ஓடியது. தான் பெற்ற வரத்தால் தன்னை வெல்வோர் மூவுலகிலும் எவரும் இல்லை என்கிற ஆணவத்தோடு தொடர்கின்றன நரகாசுரனின் தீய செயல்கள். இப்போது கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணனின் மனைவி சத்யபாமா. இவர் பூமாதேவியின் அம்சம்.

தேவர்களைக் காக்க, கிருஷ்ணன் நரகாசுரனுடன் போர்புரிகிறார். போர்க்களத்தில் கிருஷ்ணனுடன் சத்யபாமாவும் இருக்கிறாள். போரில் நரகாசுரனின் பாணங்களால் கிருஷ்ணன் மூர்ச்சையானதுபோல் நடிக்கிறார். வெகுண்டெழும் சத்யபாமா நரகாசுரன் மீது அம்பு மழை பொழிகிறாள். தெய்வாம்சம் பொருந்திய அஸ்திரங்களாலேயே ஒன்றும் செய்ய முடியாத நரகாசுரனை, சத்யபாமாவின் கணைகள் துளைத்துச் சாய்க்கின்றன. அப்போதுதான் அவள் தன்னுடைய அன்னையின் அம்சம் என்பதை நரகாசுரன் உணர்கிறான். இறக்கும் தறுவாயில் அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மக்கள் அனைவரும் தீய குணங்களை விட்டொழித்து நற்குணங்களைப் பெருக்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இறைவனின் அருளைப் பெறவே தீபாவளி கொண்டாடப்படுகிறது.

யம தீபத்தின் பயன்: தீபாவளித் திருநாளில் வீட்டின் எல்லா மூலை களிலும் தீபங்களை ஏற்றிவைப்பவர். இதில் வீட்டின் தெற்கு மூலையில் ஏற்றப்படும் யம தீபத்திற்கென்றே ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. புராணக் காலத்தில் ஹீமா என்கிற அரசனின் மகன் சகலகலாவல்லவனாக இருந்தான். அவனுடைய ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் இளவரசனின் திருமணம் முடிந்த நான்காம் நாள் அவனுக்குத் துர்மரணம் சம்பவிக்கும் என்கின்றனர். ஜோதிடர்களின் இந்தக் கணிப்பை மீறி இளவரசனை ஒரு பெண் திரு மணம் செய்துகொள்கிறாள். திருமணம் முடிந்த நான்காம் நாள் அன்று, வீடு முழுவதும் விளக்கேற்றி அணிகலன்களைக் குவியவைத்து அன்னை பராசக்தியை வேண்டும் இனிய பாடல்களை இரவு முழுவதும் கண்விழித்துப் பாடிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். விதிப்படி நாகத்தின் வடிவில் அங்கே வந்த யமன், கண்ணைக் கூசும் ஒளியாலும் பக்திப் பாடலின் ஒலியாலும் அந்த இடத்தைவிட்டு அகன்று, அன்னையின் கருணையால் அரச குமாரனை வாழவிட்டான் என்கிறது ஒரு கதை. அந்தப் பெண் விரதம் இருந்த அந்த நாள்தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.

ஐந்து நாள் பெருவிழா: தீபாவளிப் பண்டிகையை வட இந்தியாவில் பல பகுதிகளில் ஐந்து நாட்களுக்குக் கொண்டாடுகின்றனர். நரகாசுர சதுர்த்தி, சோட்டா தீவாளி, ரூப் சதுர்தசி, காளி சௌடாஸ், மஹாநிஷா, திவாலி பண்டுகா போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள் தமிழகத்தைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முன்தினம் என்று மட்டுமே அறியப்பட்டாலும் மற்ற இடங்களில் பல சடங்குகள் இந்த நாளில் நடைபெறுகின்றன. தீபாவளியின் இரண்டாவது நாளில் வட இந்தியாவில் ‘ரூப் சதுர்தசி’ என்கிற பெயரில் உபவாசம், தியானம், பக்தி நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கும். குஜராத்தில் ‘காளி சௌடாஸ்’ என்கிற பெயரில் நடக்கும் இந்தப் பண்டிகை நாளில், வீடுகளில் பெரிய பல வண்ணக் கோலம் போடுகின்றனர். காளி தேவி தன்னிலிருந்து தோன்றிய 64 ஆயிரம் யோகினிகளுடன் ‘மஹா நிஷா’ என்கிற அவதாரத்தில் தரிசனம் தருகிறாள். வங்காளத்தில் காளி பூஜை வெகு விமரிசையாக இந்நாளில் நடத்தப்படுகிறது. ‘திவாலி பண்டுகா’ என்று ஆந்திரத்தில் அழைக்கப்படும் இந்த நாளில், வீடுகள் கோயில்கள் ஆகிய எல்லா இடங்களிலும் வணணக் கோலங்கள் போடப்பட்டு மின் விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

மங்கள நாள்: விடிவதற்கு முன் எழுந்து கங்கா ஸ்நானம், இனிப்பு, புத்தாடை, பட்டாசு போன்றவற்றோடு மற்ற இடங்களில் தீபாவளி முடிந்துவிடுவதில்லை. விஷ்ணு பாகவதத்தின்படி மகாவிஷ்ணு லட்சுமி திருமணம் செய்த நாள் மங்களம் எல்லாம் பொங்கும் திருநாளாக, தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் முக்தி அடைந்த நாள் இன்று. அவரைச் சுற்றி இருந்த ஒளிவட்டம் அவருடன் மறைந்துவிட்டதால், பல தீபங்களை ஏற்றி அதை நினைவுகூர்ந்து அவரை வழிபடும் வழக்கம் சமண மக்களிடம் தோன்றியது. சமணர் கோயில்களிலும் வீடுகளிலும் தீப அலங்காரங்கள் இதன் பொருட்டே செய்யப்படுகின்றன.

நல்ல தொடக்கம்: ‘படுவா’ என்கிற பொதுவான பெயரில் குஜராத்தி, சிந்தி, மார்வாரி ஆகிய மக்கள் புத்தாண்டுப் பிறப்பாகத் தீபாவளி தினத்தைக் கொண்டாடுவர். ‘அன்னகூட’ என்னும் பெயரில் அன்னதான நிகழ்வும் அன்று நடைபெறும். புதிய கணக்குத் தொடங்கும் நாளாகவும் தீபாவளி இந்தப் பகுதி மக்களால் கருதப்படுகிறது. நகரின் பல பகுதிகளிலும் ‘கோவர்த்தன பூஜை’ பசுக்களுக்கும் அதன் பாதுகாவலன் கிருஷ்ண பகவானுக்கும் நடக்கும். யாதவர்களின் மீது இந்திரன் கல் மழை பெய்வித்தான். அப்போது எல்லா ஜீவராசிகளையும் காக்க கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தாங்கிக் குடையாக்கிய சம்பவங்கள் நிகழ்த்துக் கலை வடிவில் நடத்தப்படும்.

சகோதரத்துவ நாள்: தீபாவளி நிகழ்வின் இறுதி நாளான ஐந்தாம் நாள் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் நாளாகத் தென்னிந்தியாவைத் தவிர பிற இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பாய் தாஜ், பாய் போட்டா, பாய் பீஜ் என இந்தியாவின் பிற பகுதிகளிலும் பாய் திக்கா (நேபாளம்) எனவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதரர்கள் திருமணம் முடிந்த தங்களின் சகோதரிகளின் வீட்டில் உணவருந்தி பரிசு கொடுத்து மகிழ்வர். - ravikumar.cv@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in