

இளம்வயதில் முருகனைப் பாடிய வள்ளலார், காலப்போக்கில் சிவனை நோக்கி நகர்ந்தார். ஒற்றியூர் காலகட்டம் அவ்வகையில் முக்கியமானது. எளியேன் என்றும் சிறியேன் என்றும் அவர் தன்னை நொந்து இறையருளை இரந்து நின்ற காலம் அது. மணிவாசக மொழியில் ‘நாயேன்’ என்றும் ‘நாயினும் கடைப்பட்டவன்’ என்றும் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நிலையைப் பாடல்தோறும் பார்க்க முடிகிறது.
ஒற்றியூர்ப் பதிகங்கள்: 12 வயதில் தொடங்கிய அவரது மெய்யியல் தேடல் பயணத்தில், 35 வயதில் சென்னையை விட்டு நீங்கும்வரை திருவொற்றியூர் தியாகராசப் பெருமானை, வடிவுடையம்மனை, ஒற்றியூர் முருகனைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது வாழ்வில் ஏறக்குறைய சரிபாதி திருவொற்றியூரைச் சுற்றி அமைந்துள்ளது. எனவே, அவரது பாடல்களில் ஒற்றியூர்ப் பதிகங்கள் மிகுந்திருப்பது இயல்பானது. இளம்வயது வள்ளலார் திருத்தணிகை முருகனை நேரில் சென்று தரிசிக்க இயலாதவராய், ஒற்றியூர் முருகனைக் கண்டு அவனில் தணிகையனைத் தரிசித்தார். கற்பூரம் என்னும் வெண்பளிதம் வாங்கவும் வாய்ப்பற்று பதிகம் பாடிய சிறுவனுக்கு, தணிகை செல்வது எப்படிச் சாத்தியப்பட்டிருக்கும்? பிள்ளை முருகனை நோக்கிய அவரது வேண்டுதல்கள் பின்னர் பெற்றோரை நோக்கியும் நீண்டது. அவர்கள் இருவரையும் தலைவன்-தலைவியாக்கி இயற்றிய அகப்பொருள் பாடல்களில் தமிழ் மரபும் பக்தி மரபும் ஊடாடிக் கலந்துநிற்கின்றன. வடிவுடை அம்மன் மீது அவர் பாடிய மாணிக்கமாலை, சக்தி உபாசகர்களுக்குச் சிறப்பான தோத்திரம்.
வளம்பொழில் ஒற்றி: தேவார மூவரும் பாடிய திருத்தலம், சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலிநாச்சியாரை மணந்த இடம், பட்டினத்தடிகள் மறைந்த ஊர் என்று ஏகப்பட்ட பெருமைகள் கொண்ட திருவொற்றியூர், வள்ளலாரால் மேலும் சிறப்புப் பெற்றது. ‘தரு ஓங்கு சென்னையில்’ என்று கந்தகோட்டத்தை வர்ணித்ததுபோல, திருவொற்றியூரின் வளத்தையும் புகழ்ந்துள்ளார் வள்ளலார். ‘நந்தவனஞ் சூழ் ஒற்றி’, ‘வளம்பொழில் ஒற்றி’ என்கிற வரிகளைப் பார்க்கிறபோது, 200 ஆண்டுகளுக்குள் ஒரு பெருநகரம் தொலைத்துவிட்டு நிற்கும் பசுமைவெளி நெஞ்சில் நிழலாடுகிறது.
திருவொற்றியூர் தியாகராசரைப் பற்றி வள்ளலார் பாடியவற்றில், ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த’ எனத் தொடங்கும் பாடல் பெரும் பிரபல்யத்தைப் பெற்றது. எல்லாரும் ரசிக்கும் கவிதை. தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் இலக்கியச் சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் கண்டபோது, அதற்கு ‘மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று’ என்று தலைப்பிடப்பட்டது.
‘மென்காற்றில் விளைசுகமே, சுகத்தில் உறும் பயனே’ என்று வள்ளலார் அன்று சென்னையிலி ருந்து பாடியிருக்கிறார் என்பது இன்றைக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால், அன்றைய சென்னை அப்படியாகத்தான் இருந்துள்ளது. அடிகள் ஒற்றியூருக்குச் செல்லும்போதெல்லாம் அங்கிருந்த நந்தியோடைக் கரையோரம் அமர்ந்து ஓடும் நீரின் அழகை ரசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்கிறது ஊரன் அடிகள் எழுதிய வள்ளலார் வரலாறு.
தன்னை, இயற்கையை அறிவது: நந்தி வழிபட்ட தலம் என்கிற தல புராணம் ஒற்றியூருக்கு உண்டு. அதன் காரணமாக, நந்திக்கு எனத் தனிக்கோயிலும் இத்தலத்தில் உண்டு. நந்திக் கோயிலையொட்டி ஓடிய ஓடை, ‘நந்தி ஓடை’ என அழைக்கப்பட்டது. ‘தெய்வ நன்னீர்’ என்று வள்ளலார் போற்றிய அந்த ஓடை, சில காலம் சாக்கடைக் கால்வாயாகவும் மக்கள் பணியாற்றி இன்று காணாமலேயே போய்விட்டது.
ஒற்றி எனும் ஊர்க்குறிப்பு இல்லாததால், அனைத்து ஊர் ஆடலரசர்களுக்கும் பொதுப்பாடலாகிவிட்டது வள்ளலாரின் ‘கோடையிலே…’. ஆனால், எங்கு எந்தச் சூழலில் பாடினாரோ, அந்த இயற்கைச்சூழலை இழந்துவிட்டுக் கவிதையால் மட்டுமே அத்தருணத்தை நினைவுகூர்ந்துகொண்டிருக்கிறோம். தன்னை அறியும் மெய்யியல் தேடல் என்பது இயற்கையை அறியும், அனுபவிக்கும் தேடலையும் உள்ளடக்கியதுதான் என்பதை ஏனோ மறந்தே போய்விட்டோம்.
(ஜோதி ஒளிரும்)
selvapuviyarasan@gmail.co