

யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஊர் கங்கை கொண்ட சோழபுரம். கங்காபுரி, கங்கை மாநகர், கங்காபுரம் எனப் பழமையான பெயர்களும் இதற்கு உண்டு. ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் பொ.ஆ.(கி.பி.) 1019இல் கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக ‘கங்கை கொண்ட சோழன்’ என்கிற பட்டத்தைப் பெற்ற தமிழ் மன்னன். தன் வெற்றியின் நினைவாக பொ.ஆ. (கி.பி.)1023இல் ஒரு புதிய நகரை நிர்மாணித்து, அதில் பெரிய ஏரியை வெட்டி கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரை அதில் நிரப்பி, அதற்கு ‘சோழகங்கம் ஏரி’ எனப் பெயரிட்ட ஊர் இது. ராஜேந்திர சோழனால் ‘கங்கை கொண்ட சோழீஸ்வரர்’ என்கிற பெரிய சிவாலயம் நிர்மாணிக்கப்பட்ட ஊர் ‘கங்கை கொண்ட சோழபுரம்’. இவ்வூர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகில் உள்ளது. இது தஞ்சை பெரிய கோயிலைப் போலவே மிகப் பெரிய கோயில் ஆகும். தன் தந்தையின் பெயர்சொல்லும் தஞ்சை பெரிய கோயிலைப் போலவே இக்கோயிலை ராஜேந்திர சோழன் நிர்மாணித்தார். இக்கோயிலின் மகா மண்டபத்தின் வடக்கு வாசல் படிக்கட்டில், சண்டேச அனுக்கிரக மூர்த்தியின் எதிரில்தான் வீணை இல்லாத இந்த ஞான சரஸ்வதி உள்ளார். இக்கோயிலில் உள்ள சிலைகளிலேயே மிகவும் அழகான, நுட்பமான சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட சிற்பம் இந்த ஞான சரஸ்வதி சிற்பம்தான்.
வலது கீழ்க் கரம் ஒரு விரலை உயர்த்திக் காட்டியபடியும் மேல் கரத்தில் ஜப மாலையும் இடது கீழ்க் கரம் சுவடியைத் தாங்கியபடியும், மேல் கரத்தில் அமிர்த கலசத்தையும் வைத்தபடி, பத்ம பீடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்புரியும் அழகை என்ன சொல்லிப் பாராட்ட! பத்ம பீடத்தில் உள்ள ஒவ்வொரு தாமரை இதழும் துல்லியமாக வடிக்கப்பட்டுள்ளன. அம்மனின் தலை அலங்காரம், சிவனுக்கே உரிய ஜடாமகுடம் போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது சிறப்பு. அதில் மிகவும் நுட்பமான வேலைப்பாடுகள் அதிசயிக்க வைக்கின்றன. இவர் சிவனின் தங்கை என்பதால் சிவனைப் போலவே ஜடாமுடி அமைத்துள்ளனர் போலும்! கழுத்திலும் மார்பிலும் உள்ள அணிமணிகள் வெகு சிறப்பு. தோள்களில் உள்ள வங்கிகள் வித்தியாசமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. கைகளில் உள்ள வளையல்களும் கால்களில் தண்டையும் சிலம்பும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மார்பில் முப்புரிநூலும் காணப்படுகிறது. இடையில் காணப்படும் ஒட்டியாணமும் அழகு. பின்னணியில் இருக்கும் பிரபையில், நடராஜர் திருவாசியில் காணப்படும் தீஜுவாலை போன்று இங்கும் காணப்படுகின்றது. இரண்டுபுறமும் நின்ற நிலையில் சிம்மமும் மேலே மகரங்களும் அணிசெய்கின்றன. சிற்பத்தின் ஒவ்வொரு பகுதியையும் கவனத்துடன் வடித்துள்ள சிற்பியின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அழகிய, அமைதியான, சாந்தமான முகமும் மெல்லிய புன்னகையுமாக உலகில் கல்வி ஒன்றே சிறந்தது என்று குறிப்பிட்டுச் சொல்வதுபோல் ஒரு விரலை உயர்த்திக் காட்டியபடி இருப்பது புதுமையாக இருக்கிறது. - vedhaa.art@gmail.com