

வள்ளலாரின் திருத்தணிகைப் பதிகங்கள் பல்வகைப்பட்டவை. அவற்றில், சிற்றின்ப வெறுப்பை வெளிப்படுத்தும் பாடல்களும் உண்டு. ‘மாய வனிதைமார் மாலைப் போக்கி நின் காலைப் பணிவனோ’ என்று அவர் பாடுகையில் பட்டினத்தடிகள், பத்திரகிரியார் ஆகியோரும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறார்கள். ‘ஏத்தாப் பிறவி இழிவு’ என்கிற பதிகத்தில் அவர்களையும் விஞ்சிவிடுகிறார் வள்ளலார். மாறாக, ‘ஆற்றா விரகம்’ என்கிற தலைப்பில் அமைந்த பதிகமோ தணிகை முருகனைக் காதலனாகக் கொண்டு அவனைச் சேரத் துடிக்கிறது. இறைவனின் மீது கொள்ளும் காமம், பேரின்பம் ஆகிவிடுகிறது அல்லவா?
ஆண்-பெண்ணாக இருந்தாலென்ன, இறையாக இருந்தாலென்ன காதல் என்று வந்துவிட்டாலே பாடலில் அதற்கென்று தனிச்சுவையும் வந்துவிடும்தானே.
வந்தென் எதிரில் நில்லாரோ
மகிழ ஒரு சொல் சொல்லாரோ
முந்தம் மதனை வெல்லாரோ
மோகம் தீரப் புல்லாரோ
கந்தன் எனும் பேர் அல்லாரோ
கருணை நெஞ்சம் கல்லாரோ
முருகனின் திருப்பெயர்களில் கந்தன் என்பதும் ஒன்று. ‘கூடுபவன்' என்பதே அதன் பொருள். அப்படியென்றால், பெயருக்கேற்றவாறு அவன் நடந்து கொள்ளத்தானே வேண்டும்?
கூடல் விழைதல்: நாயகன்-நாயகி பாவத்தில், வள்ளலார் திருத்தணிகை முருகனைப் பாடியவற்றில், ‘கூடல் விழைதல்’ பதிகம் சிறப்பானது. முருகனின் மீது காதல் கொண்ட ஒருத்தி, அதைத் தன் தோழியிடம் சொல்வதாக அமைந்தது. ஏற்கெனவே, முருகனுக்கு வள்ளி, தெய்வானை இருக்க இன்னும் ஒருவரா என்று நம்முள் எழும் கேள்விக்கும் வள்ளலாரிடத்தில் சமாதானம் இருக்கிறது.
வேயோடு உறழ்தோள்
பாவையர் முன்
என் வெள்வளை கொண்டார்
வினவாமே
மூங்கிலினும் சிறந்த தோள்களை உடைய வள்ளி, தெய்வானை ஆகிய மகளிர் இருவரைப் பக்கத்தே உடையவருமான முருகப் பெருமான், என்னைக் கேளாமலே முன்னதாக என் சங்கு வளையைக் கொண்டேகினார் என்று இவ்வரிகளுக்கு உரைவிளக்கம் சொல்லப்படுகிறது. வளைகொண்டார் என்பது, காதலால் ஏற்பட்ட உடல்மெலிவால் கைவளை கழன்று வீழ்ந்ததைக் குறிக்கிறது. ஆக, அது ‘ஒருதலை ராகம்’தான்.
பவனிச் செருக்கு: வீதியுலா வரும் முருகனைப் பெண்கள் பலரும் ஒருசேரக் கண்டு காமுற்று நிற்கும் ‘பவனிச் செருக்கி’னையும் வள்ளலார் பாடியிருக்கிறார். நலம் இழந்தேன் என்கிறாள் ஒருத்தி, கைவளை இழந்தேன் என்கிறாள் மற்றொருத்தி, இடையுடையை இழந்தேன் என்கிறாள் மற்றொருத்தி. என் நிலையைக் கண்டு அன்னை வெகுண்டாள் எனச் சொல்கிறாள் இன்னும் ஒருத்தி. ‘வாரார் உமையாள் திருமணவாளர் தம் மகனார்’ என்று மாமியாரை வர்ணிக்கவும் தலைப்படுகிறாள் ஒருத்தி.
எதிர்பாலின ஈர்ப்புகளைக் கடந்து, எல்லாப் பற்றையும் இறையடி சமர்ப்பிக்கக் கோரும் பக்தி இலக்கிய மரபிலேயே வள்ளலாரின் இளம் வயதுப் பாடல்கள் அமைந்துள்ளன. அவர் முருகனைத் தன் வழிபடு கடவுளாகவும் திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் ஏற்றுக்கொண்டவர். திருத்தணிகை முருகனை மட்டுமல்ல, திருவொற்றியூர் ஈசனையும் அவர் பாடியிருக்கிறார். உருவ வழிபாட்டில் தொடங்கிய அவரது அருட்பயணம், இறுதியில் அருவ வழிபாடாய் அருட்ஜோதி வணக்கத்தில் முடிந்தது.
தமிழர்களின் தவப்பயன்: ஞானசம்பந்தரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர், அவரைப் போலவே இளம் வயதிலேயே பக்தி இலக்கியங்களைப் பாடுவதில் சிறந்து விளங்கினார். எனினும், எதிர்க்கருத்தாளர்களைக் கழுவிலேற்றும் முரட்டு அடியாராக அவர் மாறவில்லை. வள்ளலார் தனது வழிபடு நூலாகத் திருவாசகத்தைத் தேர்ந்துகொண்டது தமிழர்களின் தவப்பயன் அன்றி வேறில்லை. அவர் பாடியது முருகனை என்றாலும், ஈசனை என்றாலும், அருட்பெருஞ்ஜோதியை என்றாலும் எல்லாவிடத்தும் நற்றமிழ் நடனமிடுகிறது. அதற்காகவேனும், ஆறாம் திருமுறையைப் போல அவரது முதல் ஐந்து திருமுறைகளும் வாசிக்கப்பட வேண்டும்.
(ஜோதி ஒளிரும்)