தக்கலை பீர் முஹம்மது அப்பா: ஒரு ஞானப்பெட்டகம்

தக்கலை பீர் முஹம்மது அப்பா: ஒரு ஞானப்பெட்டகம்
Updated on
2 min read

சூபி சித்தர் தக்கலை பீர் முஹம்மது அப்பா இந்த உலகுக்குத் தந்த ஞானப் பாடல்கள் யாவும் மனித குலத்துக்கும் தமிழுக்கும் கிடைத்த மாபெரும் பொக்‌கிஷம். சாதி சமயம் கடந்த நிலையில் அனைவராலும் உரிமையோடு ‘அப்பா’ என்று அழைக்கப்படுகின்ற தனித்துவம் பெற்ற ஞானி தக்கலை பீர் முஹம்மது.

பீரப்பா தன் தந்தையுடன் சேர்ந்து தக்கலையில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இருந்தபோதிலும் ஞான மார்க்கத்திலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். ஆழ்ந்த சிந்தனையுடைய பீரப்பா தனிமையை அதிகமாக விரும்பினார். 18,000 தமிழ் ஞானப் பாடல்களைத் தந்தவர் அவர். கேரளத்தின் வனப் பகுதியில் பீரப்பா தவம்புரிந்த குன்றினை ‘பீர்மேடு’ என்றே அழைக்கின்றனர். ‘பீர்மேடு’ கேரளத்தில் ஒரு தாலுகாவாகவே உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் முதல் ஏழை எளிய சாமானியர்கள் வரை அனைவரிடமும் பீரப்பா நல்லிணக்கத்தோடு நடந்துகொண்டார். ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு பாராமல் தன்னை நாடி வருபவர்களின் நோய்களுக்கும் துயரங்களுக்கும் இறைவன் அருளால் பீரப்பா மருந்தாகினார்; தீர்வாகினார்.

ஞானக் கோவையில் ஞானக் குறவஞ்சி: இறைவனைப் பற்றிய உண்மைகளை அறிந்து சித்தம் தெளிந்தவர்களை ‘சித்தர்கள்’ என்கிறோம். பீரப்பாவும் ஒரு மகா சித்தராகவும் ஞான மேதையாகவும் விளங்கினார். சித்தர்களின் பாடல்கள் தொகுப்பான பெரிய ஞானக் கோவையில் பீரப்பாவின் ‘ஞான ரத்தினக் குறவஞ்சி’, ‘திருமெய்ஞான சரநூல்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன. பீரப்பா பாடிய ‘ஞான ரத்தினக் குறவஞ்சி’யின் முதல் 17 பாடல்கள் மனிதக் கருவியல் குறித்துப் பேசுகிறது. சுமார் 400 ஆண்டு களுக்கு முன் விஞ்ஞானம் வளர்ச்சியடையாத அந்தக் காலகட்டத்தில் பீரப்பா கூறும் கருவியல் குறித்த புள்ளி விவரங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. கருவில் சிசுவுக்கு ஆரம்பமாக முளைத்த உறுப்பு எது என்று கேட்ட பீரப்பா, அது மூளை முனையின் இரு கண்ணிகள் (சிறு முடிச்சுகள்) என்கிறார். இது போன்ற பல நுட்பமான கேள்விகளுக்கு பீரப்பா தனது பதிலை ஞான ரத்தினக் குறவஞ்சியில் மிகத் தெளிவாக கூறுகிறார்.

ஞானத்தில் விரியும் வாழும் கலை: ஜீவனின் சாட்சியாக விளங்குவது சுவாசம். அது பற்றிய அநேக ரகசியங் களை பீரப்பா தனது திருமெய்ஞான சரநூலில் பேசுகிறார். இன்னும் மனத்தை ஒடுக்கி சுவாசத்தை எவ்வாறு கையாள வேண்டும், அதை எவ்வாறு மனித உடல் கூட்டில் பூட்ட வேண்டும், சரக்கலையினை அறிந்து சிரஞ்சீவியாக எப்படி வாழ்வது என்பது போன்றவை குறித்து சரநூலின் 30 பாடல்களில் பீரப்பா விரிவாக விவரித்திருக்கிறார். பீரப்பா தனது ஞானப்புகழ்ச்சிப் பாடல்களில் இறைவனின் பேராற்றல், எல்லையற்ற வல்லமை, மேலான புகழ்ச்சி குறித்தும் பாடல்களைப் பாடியுள்ளார். அதில் எவ்வாறு இறைவனிடம் வேண்டுதல் புரிய வேண்டும், அவனிடத்தில் எப்படியெல்லாம் அடைக்கலம் தேட வேண்டும் என்பது குறித்தும் அழகுற எடுத்துரைத்துள்ளார். அதில் முத்து (மண்), பவளம் (தண்ணீர்), பச்சை (காற்று), முதலொளி (நெருப்பு), புவனம் (வானம்), எனப் பஞ்ச பூதங்களை ஞான பரிபாஷையில் அழகுற வர்ணித்துள்ளார் பீரப்பா. மற்றொரு பாடலில் ‘அற்ப ஜலம் அக்னியால் அழியாமல் காவல் செய்து’ என்று மனிதப் பிறப்பின் ரகசியத்தைக் கூறுகிறார்.

நல்லிணக்க விழா: பீரப்பாவின் ஞான குருவின் பெயர் ஹஸ்ரத் ஷாஹி மீரான் கனி தர்வேஷ் காதிரிய்யீ என்பதாகும். இதை பீரப்பா தனது பாடல்களில், ‘மீறாகனி சீசர் (சீடன்) பீர்முஹம்மதுக்கும்’ எனப் பாடுகிறார். பீரப்பாவின் ஞானப்புகழ்ச்சிப் பாடல்கள் ஆண்டுதோறும் தக்கலை தர்ஹாவில் அவர்களின் நினைவு நாளான ரஜப்பிறை 14 ஆம் இரவன்று 686 பாடல்களும் விடியவிடிய பாடி நிறைவுசெய்யப்படுகிறது. இறுதியில் அங்கு கூடியிருக்கும் அன்பர்களுக்கு கனிவர்க்க நேர்ச்சையும் வழங்கப்படுகிறது. பல்வேறு சமுதாயத்தினரும் இந்த ஞானப்பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிப்பது தமிழகத்தின் மத நல்லிணக்கத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

மு.முகம்மது சலாகுதீன்
ervaimohdsalahudeen@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in