

புனித விவிலியத்தில் உள்ள நீதிமொழிகள் புத்தகம், மத வேறுபாடுகளைக் கடந்து அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தைப் பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் எளிய வழிகாட்டுதல்களை அள்ளித் தருகிறது. இந்த நூலை எழுதியவர் பொ.ஆ.மு. (கி.மு.) 1037 முதல் இஸ்ரவேல் தேசத்தின் அரசனாக முடிசூட்டப்பட்ட சாலமோன். அவர் தனது முதுமையில் எழுதிய மூவாயிரத்துக்கும் அதிகமான நீதிமொழிகள் ஒரே புத்தகமாக அவருக்குப் பின்னர் வந்த எசேக்கியரின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
நீதிமொழிகள் புத்தகத்தில் இல்லறம், பிள்ளை வளர்ப்பு, நேர்மையாக வாழ்தல், வணிகம், தவிர்க்க வேண்டிய பண்புகள், நேர் வழியில் பொருளீட்டுதல் என வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் பற்றியும் சாலமோன் எழுதியிருக்கிறார். இவை அனைத்தையுமே, கடவுளின் பிள்ளைகளாக, அவருடைய நிழலை விட்டு விலகாமல் எளிதில் கடைப்பிடிக்கும் வழிகாட்டுதல்களாக எழுதப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தை அனைவருக்குமான ஆன்மிகப் புத்தகமாக மாற்றிவிடுகிறது.
மொத்தம் 33 அதிகாரங்களைக் கொண்ட நீதிமொழிகள் புத்தகத்தில், 1 முதல் 9 வரையிலான அதிகாரங்களில், ஒரு தந்தை தன்னுடைய மகனுக்குச் சொல்லும் அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்துக்கு, இரண்டாம் அதிகாரத்தில் ‘என் மகனே.. யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும், பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும். அதனால், நீ தவறான பாதையிலிருந்து விலகி நடப்பாய்..’ என்று சொல்கிறது ஒரு நீதிமொழி. 10 முதல் 24 வரையிலான அத்தியாயங்கள், வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்பது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
உதாரணத்துக்கு, 11ஆவது அத்தியாயத்தில் ‘தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் வீழ்வான்; நீதிமான்களோ அவர்களது நேர்மைக்காகவே அறியப்பட்டு, துளிரைப்போல் தழைப்பார்கள்’ என்கிற நீதிமொழி நேர்மையின் பக்கம் நிற்பவர்களுக்கு அழிவில்லை என்பதை எடுத்துச்சொல்கிறது. செல்வத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது என்பதையும் சொல்கிறது. 25 முதல் 29 வரையிலான அத்தியாயங்கள் வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய பண்புகளையும் செயல்களையும் எடுத்துக்காட்டுகின்றன. உதாரணத்துக்கு, 26ஆம் அதிகாரத்தில் வரும் ஒரு நீதிமொழியானது: ‘முட்டாளை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைப்பதும், தன் காலையே முடமாக்கிக்கொண்டு தனக்கே கேடு செய்துகொள்வதும் ஒன்றுதான்’ என்கிறது.