அருட்பிரகாசம் 02 | வள்ளலார் 200: பன்னிருதோள்களும் தாமரைத் தாள்களும்

அருட்பிரகாசம் 02 | வள்ளலார் 200: பன்னிருதோள்களும் தாமரைத் தாள்களும்
Updated on
2 min read

சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’யைக் கேட்பது ஆழ்ந்த பேரனுபவம். யூடியூப் தளத்திலும் கேட்கக் கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் செலவழித்தால், நல்ல இசையனுபவமும்கூட. டி.ஆர். பாப்பாவின் இசையமைப்பு, வள்ளலாரின் பாடல்களில் இழையோடும் தாளலயத்தைக் கவனமாகக் கையாண்டிருக்கிறது என்பதோடு அப்பாடல்களில் இடம்பெற்ற ஒவ்வொரு வார்த்தையும் கேட்போரின் மனதைத் தைக்கும்வகையிலும் அமைந்துள்ளது.

எளிமையில் வளமை: கந்தகோட்டத்து முருகன் மீது கந்தர் சரணப்பத்தும் பாடியிருக்கிறார் வள்ளலார். கந்தகோட்டத்து முருகனைப் போலவே திருத்தணிகை முருகன் மீதும் அவர் பாடியிருக்கிறார். அவற்றில் பிரார்த்தனை மாலை தனிச்சிறப்பானது. நேர் பதினாறு, நிரை பதினேழு என்று எழுத்தெண்ணி பாடப்படும் கட்டளைக் கலித்துறை பாவகையைச் சேர்ந்தது. தமிழ்ப் புலமையின் அடையாளம் என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் கட்டளை கலித்துறையை எழுத்தறியாதவர்களும் புரிந்துகொள்ளும்வண்ணம் எளிய தமிழில் கையாண்டிருக்கிறார் என்பது வள்ளலாரின் இலக்கியச் சிறப்பு. மரபுக் கவிதையில் எளிமையைப் புகுத்திய முன்னோடிகளில் வள்ளலார் முதன்மையானவர். பிரார்த்தனை மாலையின் தொடக்கச் செய்யுளான ‘சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்…’ எனத் தொடங்கும் கலித்துறை மிகவும் பிரபலமான ஒன்று. போற்றித் துதிக்கும் ஒரு பூமாலைதான். ஆனால், அந்தக் கலித்துறையின் ஆனந்த அனுபவத்தை அப்படியே நம்முள் ஏற்றிக்கொள்ள வேண்டுமெனில், வள்ளலாரின் இசைத்தூதர் மழையூர் சதாசிவம் குரலில் கேட்டாக வேண்டும். ‘திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிருதோள்களும் தாமரைத் தாள்களும்’ என்று அவர் பாடும்போது கடம்பும் கமலமும் மனதில் வாசம் வீசும்.

மழையூர் சதாசிவம்
மழையூர் சதாசிவம்

கழிவிரக்க மழை: எண்ணப்பத்து, செழுஞ்சுடர் மாலை, குறையிரந்த பத்து, சீவசாட்சி மாலை, ஆற்றாமுறை, இரந்த விண்ணப்பம், கருணை மாலை, மருண்மாலை விண்ணப்பம், பொறுக்காப் பத்து என்று தணிகை மேவிய கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனைக் கொண்டாடிக் கூத்தாடியிருக்கிறார் வள்ளலார். ‘சீவசாட்சிமாலை’யின் முதல் பாடல் ‘பண்ணேறு மொழியடியர் பரவி வாழ்த்தும்…’ என்று தொடங்குகிறது. அதையும் மழையூர் சதாசிவத்தின் குரலிலேயே கேட்க வேண்டும். இவ்விரு பாடல்களையும் தர்பாரி கானடா ராகத்தில் அவர் பாடியிருக்கிறார். ‘பாத மலரழகை இப்பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென்றால் காட்டுகிலாய், கருணை ஈதோ…’ என்று கதறி முறையிட்டு அழுவதற்கு தர்பாரி கானடா மிகப் பொருத்தமான ராகமாக இருக்கிறது.

இசையமுத சுரபி: மருதமலை முருகனுக்கு மதுரை சோமு என்றால் திருத்தணிகை முருகனுக்கு சோமுவின் சீடரான மழையூர் சதாசிவம். ‘தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலில் சோமுவின் பின்னே அமர்ந்து தம்புரா மீட்டுவது சதாசிவம் என்கிற தகவலைப் பகிர்ந்துகொண்டார் இசை ஆய்வாளர் லலிதாராம். ‘தெய்வம்’ பாடலும் தர்பாரிதான். குருவை அடுத்து சீடரின் தர்பார் தொடர்கிறது. மழையூர் சதாசிவம் குரலில் வெளிவந்த ‘அருட்பா அமுதம்’ என்கிற வரிசையில் முதல் தொகுப்பில் இவ்விரு பாடல்களும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இதுவும் யூடியூப் உபயத்தால் எல்லாரும் கேட்க வாய்த்துள்ளது. முருகன் என்றதுமே அருணகிரி நாதரும் அவரது திருப்புகழும் இன்ன பிற படைப்புகளும்தாம் முந்திக்கொண்டு நினைவுக்கு வருகின்றன. திருப்புகழைப் போலவே, வள்ளலாரின் ஆரம்பக் காலத்து அருட்பாக்களும் முருக துதியில் முக்கியமானவை. அருளொளியை நோக்கிய அவரது பயணமே முதன்மை பெறுவதால், ஒருவேளை அவரது முருகன் பாடல்கள் போதுமான அளவில் பேசப்படுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. வள்ளலாரைத் தவிர்க்கும் தமிழிசை விழாக்கள் முழுமை பெறாது என்பது மட்டும் திண்ணம். அள்ளினும் கொள்ளினும் குறையாத இசையமுத சுரபி அவர்.

(ஜோதி ஒளிரும்)

selvapuviyarasan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in