

‘எண்டிசை தேவரும் புகுதும் ராஜராஜபுரி’ என்றும், ‘செம்பொன் மாட நிரை ராஜராஜபுரி’ என்றும் ஒட்டக்கூத்தர் தமது தக்கயாகப்பரணியில் சிறப்பித்துக் கூறியுள்ள ஊர் தாராசுரம். ‘ராஜகம்பீரன்’ என்கிற பெயர் பெற்ற இரண்டாம் ராஜராஜ சோழன் பொ.ஆ. (கி.பி.1146 - 1163 வரை) பதினேழு ஆண்டுகள் கட்டிய கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் தாராசுரம் ஆலயம் ஆகும்.
இத்தலத்தில் அழகிய மகா மண்டபத்தில்தான் இந்த மூன்று முகங்களை உடைய வித்தியாசமான மாதொருபாகன் எனும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் காணப்படுகிறது. மூன்று தலைகளிலும் கரண்ட ஜடா மகுடம் அணிசெய்கிறது. பொதுவாக அர்த்த நாரீஸ்வரர் உருவத்தில் வலப்பக்கத்தில் ஆண்மைக்கு உரிய ஜடாமுடியும், இடப்பக்கத்தில் பெண்மைக்குரிய மகுடமும் இருக்கும். ஆனால், இங்கு அந்த வித்தியாசம் இல்லாமல் மூன்று முகங்களிலும் ஒரே மாதிரியான அழகிய கரண்ட ஜடா மகுடம் அலங்கரிக்கிறது. தலையைச் சுற்றிலும் சூரிய மண்டல ஜோதி வடிவம் காணப்படுகிறது. காதுகளில் மகர குண்டலங்கள் அணி செய்கின்றன. எட்டுத் திருக்கரங்களைக் கொண்டுள்ளார். வலதுபுறக் கரங்களில் சூரியனுக்கும் திருமாலுக்கும் உரிய தாமரை மலரையும், மேல் கரத்தில் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் உரிய ருத்திராட்சை மாலையையும் கத்தியையும் அம்பாளுக்கே உடைய அங்குசத்தையும் வைத்திருக்கிறார். இடது புறக் கரங்களில் கபாலக் கிண்ணம் இருக்கிறது. மேல் கரத்திலிருப்பதை (சக்ராயுதம் என்று சொல்கிறார்கள்) நன்கு உற்று நோக்கும் போது அது முகம் பார்க்கும் கண்ணாடி போல் தெரிகிறது. ஏனெனில் பெண்கள் அடிக்கடி தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து கொண்டு இருப்பார்கள் அல்லவா?
மேலும், கும்பகோணம் நாகநாத சுவாமி கோயிலில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் சிற்பத்தில் பெண்மையின் பாகத்தில் கையில் வைத்திருக்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் அமைத்திருப்பார்கள். அந்த நினைவுதான் வருகிறது. அடுத்த கரம், அபயக் கரமாகவும் மற்ற கரத்தில் தண்டத்தைத் தாங்கியபடியும் காட்சி தருகிறார். முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், “இவர் அர்த்தநாரி சூரியன் என்று கல்வெட்டில் (சோழர் கால செந்தூர எழுத்துப் பொறிப்பு) காணப்படுகிறது” என்று குறிப்பிடுகிறார். இவர் முக்கண் முதல்வனே என்பதைக் காட்ட முகத்தில் மூன்றாவது கண்ணையும் சிற்பி காட்டியுள்ளார். வலப்பக்கம் ஆண்மைக்கும் இடப்பக்கம் பெண்மைக்கும் உரிய அடையாளங்கள் அவயங்களில் மட்டும் அல்ல, ஆடை அணிகலன்களிலும் தனித் தனியாகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. மார்பில் முப்புரிநூல் உள்ளது. இடையில் சோழர்களின் சிம்மம் இருக்கிறது. வலது காலில் தண்டையும் சிலம்பும் இடது காலில் சதங்கையும் சிலம்பும் அலங்கரிக்கின்றன. திருமால், பிரம்மா, சிவன் என மும்மூர்த்திகளும் இணைந்த சிவா சூரிய நாராயணர் என்றும், மகா மாயா சக்தியின் வடிவம் எனவும், இம்மாதிரியான சிற்ப வடிவம் மிகவும் அபூர்வமான ஒன்று எனவும் சிற்ப வல்லுநர்கள் ஆச்சர்யத்துடன் குறிப்பிடுகின்றனர்.