

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரம் புராணப் புகழும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட பகுதி. ஒரு காலத்தில் இப்பகுதியை ‘ஆரண்யம்’ என்று அழைத்தனர். அச்சொல்லே காலப்போக்கில் மருவி மக்கள் வழக்கில் ‘ஆரணி’ என்று மாறிவிட்டது.
இந்நகருக்குப் பல பெருமைகள் உண்டு. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பரசுராம அவதாரமும் ராமாவதாரமும் இந்நகரோடு தொடர்புடையவை. ஆரணியின் ஒரு பகுதியான புதுக்காமூரில் புத்திர காமேசுவரர் கோயில் இருக்கிறது. தசரத மகாராஜா இக்கோயிலுக்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்ததின் பலனாக அவருக்கு நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். அவர்களில் மூத்தவரான ராமர் பிறந்ததற்கு ஆரணி நகரில் உள்ள அக்கோயில் காரணமானது.
படைவீட்டில் ரேணுகா பரமேஸ்வரி: ஆரணிக்கு அருகில் உள்ள படைவீட்டில் (படவேடு) அன்னை ரேணுகா பரமேஸ்வரியின் ஆலயம் உள்ளது. ஜமதக்னி முனிவரின் பத்தினியாகிய ரேணுகாதேவி, முனிவரின் சாபத்தால் தன்னுடைய குமாரனான பரசுராமரால் தலைவெட்டுண்டு இறக்க நேரிட்டது. பிறகு பரசுராமரின் வேண்டுகோளின்படி முனிவர் அளித்த கமண்டல நீரால் உயிர் பெற்றார். ஆனால், விதியின் கொடுமையால் தலை மட்டுமே அவருடையதாகவும் உடல் வேறொரு பெண்ணுடையதாகவும் ஆகி விட்டது. எல்லாம்வல்ல அம்பிகையான பராசக்தியின் வரத் தால் ரேணுகாதேவி தெய்வாம்சம் பெற்று ரேணுகா பரமேஸ்வரி என்கிற பெயரைப் பெற்றாள். இத்தனை பெருமைகள் நிறைந்த ஆரணிக்கு மற்றுமொரு பெருமையாக விளங்குகிறது கைலாசநாதர் கோயில். இதைக் கோட்டை கைலாசநாதர் கோயில் என்றும் அழைப்பார்கள். சோழர்கள், சம்புவரையர்கள், விஜயநகர அரசர்கள், ஆரணி ஜாகீர்கள் என்று பல அரசர்களால் திருப்பணி செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்ட அற்புத ஆலயம் இது. இந்த ஆலயத்தின் முகப்பை ஐந்து நிலை, ஐந்து கலசங்களுடன் ஒரு ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. கோபுரத்திற்கு வெளியே ஒரு நந்தியின் சந்நிதி காணப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தக் கோயில் பெரிய கோயிலாகக் கட்டப்பட்டு, பல போர்களால் சிதைந்து தற்போது இருக்கும் நிலைக்கு மாறியிருக்கலாம் என்று தெரிகிறது. ஆகையால்தான் கோயிலுக்கு வெளியே இந்த நந்தி காணப்படுகிறது.
வல்லப விநாயகர்: ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் இடப்புறம் மேற்கு நோக்கி பத்துத் திருக்கரங்களோடு தன்னுடைய சக்தியான வல்லபையை மடியில் வைத்தபடி மிகப் பிரம்மாண்டமாக விநாயகர் வீற்றிருக்கிறார்.
வன்னிமர கணபதி: இந்தக் கோயிலின் தலவிருட்சமாக வன்னி மரம் கருதப்படுகிறது. இந்த மரத்துடன் மா, வேப்ப மரங்களும் இணைந்து மூன்று மரங்களாகக் காணப்படுகின்றன. இந்த மரங்களுக்கு அடியில் கணபதி அழகாக அமர்ந்திருக்கிறார். வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். இவரை வணங்கினால் நாம் நினைத்தது நிறைவேறும். இந்தச் சந்நிதி வல்லபை விநாயகருக்கு நேர் எதிரே இருக்கிறது.
கோட்ட மூர்த்திகள்: ஈசனுடைய கருவறை கோட்ட மூர்த்திகளாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகியோரும் கோ முகத்துக் கருகில் சண்டிகேச்வரரும் இருக்கின்றனர். கோயிலின் வெளிப் பிராகாரத்தில் ஜோதிலிங்கம், வள்ளி தெய்வானையுடன் முருகன், வாயுலிங்கம், ஐயப்பன், ஆஞ்சநேயர், பழனி ஆண்டவர், கஜலஷ்மி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. பெரிய புராணத்தில் சேக்கிழார் சிறப்பித்த 63 அடியார்களுக்கும் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருடன் சேக்கிழார் பெருமானுக்கும் இங்கே திருச்சந்நிதிகள் உள்ளன.
ஆடல்வல்லான் நடனம்: ஈசனின் கருவறை கிழக்கு நோக்கி இருந்தாலும் அந்தப் பக்கம் பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவற்றுக்கு நேர் எதிரே கருங்கல் ஜன்னல் மட்டுமே உள்ளது. நாம் தெற்கு வாயில் வழியாகத்தான் உட்கோயிலுக்குச் செல்ல முடியும். தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந் ததும் நடராஜ சபை உள்ளது. காலைத் தூக்கித் திருநடனம் புரியும் அந்த ஆடல் வல்லானின் அழகிலே சொக்கிப்போகிறோம். அந்தச் சந்நிதி யிலேயே அவர் நடனத்தை அன்னை சிவகாமியும் மாணிக்கவாசகரும் கண்டு ரசிக்கின்றனர்.
ஈசனின் பஞ்ச முகம்: புராதனமான கோயில்களில் மட்டுமே இருக்கக் கூடிய பெரிய லிங்கம், ஈசனின் முகங்களைக் குறிக்கும் (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) பஞ்சமுக லிங்கமும் இக்கோயிலில் உள்ளன.
அறம் வளர்த்த நாயகி: அம்மையின் சந்நிதி கோயிலின் வடமேற்கில் உள்ளது. தர்மசம்வர்த்தினி என்கிற பெயரில் அவள் அழைக்கப்படுகிறாள். அறம் வளர்த்த நாயகி என்று தமிழிலேயே அவளுக்குப் பெயர். காஞ்சியிலே ஈசனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களை அன்னை செய்ததால் அவள் `அறம் வளர்த்த நாயகி' என்று அழைக்கப்படுகிறாள். அன்னையை நாம் வணங்கிவிட்டு நகர்ந்தால் நவகிரக சந்நிதியையும் பைரவர் சந்நிதியையும் சனீஸ்வர பகவானின் தனிச் சந்நிதியையும் கண்டு வணங்கலாம். கிழக்கு நோக்கிக் காட்சிதரும் கைலாசநாதர் சற்று வித்தியாசமாகக் காணப்படுகிறார். அவரது சிவலிங்க மூர்த்தம் சற்று உயரமான ஒரு பீடத்தில் காணப்படுகிறது. உயரமான கைலாச மலையில் அவர் இருப்பதால் கைலாசநாதர் என்கிற பெயர் கொண்ட இந்தச் சிவலிங்கமும் உயர்ந்த பீடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலைத் தரிசித்தாலே கைலாசம் சென்று தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.
மஹேந்திரவாடி உமாசங்கரன்
umasankar1942@gmail.com