

பக்தி மார்க்கத்தில் தொடங்கி ஞான மார்க்கத்தை அடைந்தது வள்ளலாரின் மெய்யியல் தேடல். சாதிகளையும் சமயங்களையும் மட்டுமல்ல, உருவ வழிபாட்டையும் அவர் கடந்து நின்றார். தெய்வம் என்று சொல்லி தன்னை வணங்க முற்படுவோரைக் கண்டு பரிதாபப்பட்டார். துறவுக்குரிய துவராடை தவிர்த்து வெள்ளாடை தரித்தார். அரை நூற்றாண்டு (1823-1874) காலமே வாழ்ந்த அவர், தனது உள்ளத்து உணர்வுகளைத் தோத்திரங்களிலிருந்தே தொடங்கினார். ஆறாம் திருமுறையை நோக்கிய அவரது அருட்பா பயணத்தின் தொடக்கம் தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றித் துதிப்பதாக அமைந்தது.
நக்கீரரின் திருமுருகாற்றுப்படையிலிருந்து தொடங்கி பல்லாயிரக்கணக்கில் பாடப்பட்டிருக்கும் முருகன் துதிகளில் வள்ளலாரின் பாடல்களுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. சென்னை கந்தகோட்டத்துப் பெருமானைப் பாடிய தெய்வமணிமாலை அவற்றில் ஒன்று. அருள்வாழ்வு பெறுவதற்கு உலகியல் பொருள்வாழ்வின்பால் ஆசை துறக்க வேண்டும் என்பதுதான் தெய்வமணிமாலையின் வேண்டுதல். 31 பாடல்களைக் கொண்ட அம்மணிமாலையில் ‘ஒருமையுடன் நினது திருமலரடி’ எனத் தொடங்கும் பாடல், இசைவிழா மேடைகளில் இன்றும் பாடப்படுவது. ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. உள்ளம் உருகி உருகி பாடப்படும் பாடல் இது. இப்பாடலை, மளமளவென்று வார்த்தைகளைக் கொட்டி, பிரபல வித்வான் ஒருவர் பாடியதைக் குறித்து எழுத்தாளர் கல்கி தனது கட்டுரையொன்றில் வருத்தப்பட்டுள்ளார்.
உறவு வேண்டும், உறவு கலவாமை வேண்டும்; பேச வேண்டும், பேசாதிருக்க வேண்டும் என்று ஒன்றை விரும்பியும் அதற்கு மாறானவற்றைத் தவிர்க்க விரும்பியுமாய் வள்ளலார் இந்தப் பாடலில் தனது வேண்டுதல்களை அடுக்கிச்சென்றிருக்கும் விதம் அழகினும் அழகு. ‘பெருநெறி பிடித்தொழுக வேண்டும்’ என்று கந்தகோட்டத்து முருகனை வேண்டிய வள்ளலார் அதையடுத்து ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்றும் மனம் உருகிநிற்கிறார். ‘பெருமை நல்கும் நெறியையே கடைபிடிப்பவனாக அமைய வேண்டுமே அன்றி மதமென்னும் பேயால் பிடிபடாதவனாக இருக்க வேண்டும்’ என்று இந்தப் பாடல் அடிக்கு உரையெழுதியிருக்கிறார் உரைவேந்தர் ஔவை. துரைசாமி.
வள்ளலாரின் மொழியில், நெறி என்பதும் மதம் என்பதும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவே சுட்டப்படுகிறது. செம்மை நெறியான சைவநெறியை மதங்களிலிருந்து வேறுபடுத்தியே அவர் பார்த்திருக்கிறார். அந்தப் பார்வை இளம் பருவத்திலேயே அவரிடம் தெளிவாக உருக்கொண்டிருந்தது. காலப்போக்கில், அது மேலும் செழுமைப்பட்டிருக்கிறது.
‘காம உட்பகைவனும்’ எனத் தொடங்கும் மற்றொரு தெய்வமணிமாலைப் பாடலில், ‘மதமெனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி (மட்டுமின்றி) அவர்க்குற்ற உறவான பேர்களும் தன்னைப் பற்றிடாமல் அருள்வாய்’ என முருகனை வேண்டியுள்ளார் வள்ளலார். காமம், குரோதம் என்கிற வரிசையில் இடம்பெறும் மதமானது நான் என்னும் ஆணவத்தையே குறித்து நிற்கிறது. ஆனால், நெறிக்கு எதிராக வள்ளலார் முன்னிறுத்தும் மதம் என்பது சமயமே. வாழ்நாள் முழுவதும் சமயபேதங்களைக் கண்டித்தவர் அவர். ‘வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன், தன்னை விழாத வகை மறிக்கும் ஒருபேர் அறிவளித்த வள்ளல் கொடியே’ என்பது அவரது மற்றொரு பாடல் வரி. ‘வெறியை உண்டாக்கும் மதம் என்னும் படுகுழியில் விழுவதற்கு விரைந்து சென்றுகொண்டிருந்த என்னை அப்படித் தடுக்கத் தகுந்த ஒரு பேரறிவை அளித்த கருணாமூர்த்தியே’ என்பது பொருள்.
‘ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்’ என மகிழ்ந்திருக்கிறார். ‘மதமெனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றார் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செய்யும் மாநடம் காண்குவரோ’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘கூறுகின்ற சமயமெல்லாம் மதங்களெலாம் பிடித்துக் கூவுகின்றார், பலன் ஒன்றும் கண்டறியார்’ என்று வருந்தியிருக்கிறார். ‘பொறித்த மதம், சமயம் எலாம் பொய், பொய்யே! அவற்றில் புகுதாதீர், சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்’ என்பதே வள்ளலாரின் வழிகாட்டுதல். கடவுள் வேறு, சமயம் வேறு. கடவுளைக் கைப்பற்றுங்கள், சமயப் பற்றைக் கைவிடுங்கள் என்பதே அவர் விடுத்த கோரிக்கை. ‘ஒருமையுடன் நினது’ எனத் தொடங்கும் பாடலில், ‘தருமமிகு சென்னை’ என்றும் பாடியிருக்கிறார் வள்ளலார். அப்போது சென்னையில் தருமம் செய்பவர்கள் அதிக அளவில் இருந்ததாலேயே இப்படிச் சிறப்பித்திருக்க வேண்டும். இன்று?
(ஜோதி ஒளிரும்)