சீர்திருத்த விஞ்ஞானி வள்ளலார்

சீர்திருத்த விஞ்ஞானி வள்ளலார்
Updated on
3 min read

புனிதம் சுமத்தப்பட்டவர்களே அதை ஒதுக்கியபோதும்கூட ஒட்டிக்கொண்ட அப்புனிதம் அவர்கள் மீதிருந்து நீங்குவதில்லை. வள்ளலார் என்னும் மாமனிதருக்கு நிகழ்ந்ததும் அதுதான். வெள்ளாடை உடுத்திய துறவியாய் அவரைக் கண்டு வணங்கும் மக்கள், சமூகத்திற்கு அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்னும் மந்திரக்கருவி கொண்டு உயிர் இரக்கம் என்னும் வழியைக் கண்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை இம்மனித குலத்துக்கு வழங்கிய மாமனிதர் அவர் என்பதை இந்தச் சமூகம் உணரத் தவறிவிட்டது. ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்குத் தடையாக இருக்கக்கூடிய சாதி சமய சடங்காச்சாரங்கள், வேதாகம பௌராணங்கள், இன்ன பிற மூட நம்பிக்கைகள் என எல்லாவற்றையும் தயவு தாட்சண்யமின்றித் தூக்கியெறிந்து இந்தச் சமூகத்தைச் சீர்திருத்திய விஞ்ஞானி அவர்.

கருணை எனும் மந்திரம்: வள்ளலாரின் கோட்பாட்டு மையம் என்பது உயிரிரக்கக் கோட்பாடு ஆகும். அந்த அடிப்படையில் செயல்படும் வள்ளலாரின் ஆன்மிக முறையை உற்று நோக்குங்கால் அது சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அடிப்படையாக உள்ள வைதிக நெறிக்கு முற்றிலும் மாறுபட்டது என்பது வெளிப்படை. ஆன்ம ஈடேற்றத்திற்குச் சடங்கு சம்பிரதாயம் முக்கியமா அல்லது அன்பு, அருள் போன்றவை முக்கியமா என்பதை வள்ளலார் தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டார். தனது முன்னோடிகளான சித்தர் மரபையும் உள்வாங்கிக்கொண்டார். ஆகவே, நிறுவனமயமாக்கப்பட்ட வைதிக நெறி - அதன் தொடக்கக் காலத்தில் எவ்வாறு இருந்தபோதும் வள்ளலாரது காலகட்டத்தில் வேற்றுமையை வலியுறுத்தும் ஒன்றாக இருந்ததால் அவர் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் போலும். பசி நீக்கலை ஒரு பேரறமாக அவர் பாவிக்கக் காரணம், சமூக ஒழுங்கிலிருந்து ஒருவன் வழுவுவதற்கு அது தலையாய காரணமாக இருப்பதுதான்.

பசி தீர்க்கும் நெறி: ஒருவன் தெய்வ நிலையை அடைய யோகம், ஞானம், வழிபாடு போன்ற நெறிகளைப் பின்பற்ற வேண்டும். வள்ளலார் இவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்த ஓர் எளிய வழியை எல்லோருக்கும் காட்டினார். பசி நீக்கல் இன்பத்தைத் தருகிறது, எனவே அது போகம். அப்படிச் செய்யும்போது பசித்தோனையும் அதை நீக்குவோனையும் ஒன்றுவிக்கிறது. எனவே அது யோகம். இரக்கமாகிய மக்கட் பண்பை அறிவுள்ளாருக்கு ஏற்படுத்துகிறது. எனவே அது ஞானம். செய்யுள், உரை என்னும் இவ்விரு நடையும் நன்கு கைவரப்பெற்று, அதில் வெற்றி கண்டவர் வள்ளலார். மொழிசார்ந்த ‘சுயமரியாதை’யானது வள்ளலாருக்கு இயல்பாகவே இருந்தது. எனவேதான், தமிழ் குறித்துப் பல்வேறு கருத்துகளை அவரால் துணிந்து உரைக்க முடிந்தது. தமிழைத் தாழ்த்திப் பேசிய அன்றைய நிலையில், தமிழுக்காகக் குரல் கொடுத்த ஞானியாக அவர் திகழ்ந்தார். சாதாரண பாமரனுக்கும் புரியும்வகையில் வள்ளலார் சொற்களைப் பெய்து தமது இலக்கியத்தைப் படைத்துள்ளார். மக்களுக்குத் தெரிந்த அன்றாட நடைமுறையில் புழங்கக்கூடிய சொற்களைக் கொண்டே அவர் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் என்பதை அவரது படைப்புகள் நிரூபிக்கின்றன.

மக்களிடம் சென்ற திருக்குறள்: திரும்பத்திரும்பக் கூறும் ஓர் உத்தியை அறிஞர் அண்ணா தமது மேடைப் பேச்சில் பயன்படுத்தி மக்களைக் கவர்ந்தார். எனினும் அவருக்கு முன்னோடியாக வள்ளலார் திகழ்ந்தார் எனில் அது மிகையன்று. அண்ணா, ஒரு சொல்லை மட்டும் திரும்பத்திரும்பக் கூறி தமது பேச்சை அமைக்க, வள்ளலாரோ ஒரே நேரத்தில் இரு சொல்லை தமது படைப்பில் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வள்ளலார், நிறுவனரீதியான கல்வி என்பதோடு அல்லாமல், தனியாகத் திருக்குறள் வகுப்புகள் நடத்தவும் திட்டமிட்டவர். மக்களிடையே திருக்குறளைப் பரப்புவதற்காக உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனாரைக் கொண்டு வடலூரில் திருக்குறள் வகுப்பை அடிகள் நடத்தினார். பொதுமக்களுக்குத் தொழுவூரார் பாடம் கற்பிக்க, பெரும்புலவர்களுக்கு வள்ளலாரே பாடம் கற்பித்தார் என்பர். கற்றறிந்த பெரியோர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த திருக்குறளை முதன்முதலில் பொதுமக்களிடம் கொண்டுசென்றவர் வள்ளலார்.

வள்ளலார் விரும்பிய அருளாட்சி: சன்மார்க்கத்தின் உயிர்நாடியான ஜீவகாருணிய ஒழுக்கத்திற்குச் சாதி ஒரு தடையாக ஆகிவிடக் கூடாது என்பதில் வள்ளலார் கறாராகச் செயல்பட்டிருக்கிறார். உணவு வழங்குவதில்கூட அன்று சாதி பின்பற்றப்பட்டிருக்கிறது. இறைவனை வழிபடுவதில்கூடச் சாதியம் தலைவிரித்தாடியது, ஆடுகிறது. சாதியைச் சங்கடம், விகற்பம், சழக்கு என்று கடுமையாகவே விமர்சித்தவர் வள்ளலார். சன்மார்க்கப் பொதுவுலகம் காண, சாதி ஒழிய வேண்டும் என்பது அவர் கண்ட முடிவு. சாதியை மட்டுமன்றி வருணபேதத்தையும் வள்ளலார் கண்டித்து ஒதுக்கினார். ஆண்-பெண் என்னும் பேதம்கூட நம்மில் எவருக்கும் தோன்றக் கூடாது என்கிறார் வள்ளலார். இந்தப் பேதத்திற்குக் காரணம் புத்தியும் மனமும் என்கிறார் அவர். இந்த அடிப்படை நமக்கு விளங்கினால், வேறுபாடு நம்மில் எழாது என்பதைப் பின்வரும் அவரது கூற்று தெளிவுபடுத்துகிறது:

‘பெண் ஆண் என்னு நாமபேதம் வருவானேன்? அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால்; ஆன்ம அறிவு ஆண்; ஜீவ அறிவு பெண்; ஆன்ம அறிவு என்பதும் ஜீவ அறிவு என்பதும் புத்தி அறிவும் மன அறிவுமாம்’. பெண்களைப் பற்றிய தமிழ்ச் சிந்தனை மரபு முழுக்க முழுக்கப் பால் ஒற்றுமை (Gender conscious) கொண்டதாக இருக்க, வள்ளலாரின் கூற்றோ முற்றிலும் பால் கடந்ததாக இருந்தது. கணவனை இழந்தோர் கைம்மைக்கோலம் பூண வேண்டியதில்லை என்று வரையறுத்த வள்ளலார் மனைவியை இழந்த புருஷர்களும் மறுமணம் செய்துகொள்ளத் தேவையில்லை என்றார். அன்றைய நாளில், இதுவும் பெரிய சீர்திருத்தமே. கற்பெனப் பேச வந்தால் அதை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்பதே வள்ளலாரின் நிலைப்பாடாக இருந்துள்ளது. உலகியலில் அனைவரும் ஒன்றுகூடி அரசியல் புரிய வேண்டும் என்பதே வள்ளலாரது ஆவல். அரசியலில் அருளாட்சியை விரும்பியவர் அவர். பின்னாளில் இவ்வாட்சி அமையும் என்பதை முன்கூட்டியே அறிவிக்கும்முகமாக அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசே எனப் பாடியவர். சமய உலகில் நுழைந்து, சமய நெறியிலே நடந்து, சமய உலகைக் கடந்தவர் வள்ளலார். - ப. சரவணன், அருட்பா x மருட்பா உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: psharanvarma@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in