

‘‘நாராயணா! நாராயணா !” என்ற படி தேவேந்திரன் அவைக்கு வந்தார் நாரத மகரிஷி. அங்கு தேவர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். அதைக் கண்டு ஒன்றும் அறியாதவர்போல், “என்ன தேவலோகமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறதே! என்ன காரணம்?” என்றார்.
``நாரத மகரிஷியே உமக்கு ஒன்றும் தெரியாதா?”
``என்ன விஷயம் தேவேந்திரா?”
``அயோத்தியில் ராமருக்குப் பட்டாபி ஷேகம் செய்ய வசிஷ்டரும் தசரதரும் சேர்ந்து நாள் குறித்துவிட்டனர். அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதைத் தாங்கள் அறியவில்லையா?”
``அதற்கும் உங்கள் சோகத்திற்கும் என்ன சம்பந்தம்?”
``ராமன் முடிசூட்டிக்கொண்டு அயோத்தியின் மன்னராகிவிட்டால், ராவணனையும் மற்ற அசுரர்களையும் வதம் செய்வது எப்படி? அவதார நோக்கம் என்னாவது? இதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்..”
``இதற்கு பிரம்ம தேவர்தான் தீர்வு காணவேண்டும்! வாருங்கள் அவரிடம் செல்வோம்” என்றார் நாரதர்.
அனைவரும் பிரம்ம லோகம் சென்றனர்.
பிரம்மாவிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி, `இதற்குத் தாங்கள்தான் உதவ வேண்டும்' என்று வேண்டினர். அதற்கு பிரம்ம தேவர் “அன்னை சரஸ்வதி தேவி தான் உதவ வேண்டும். தேவி செய்ய வேண்டியதை உங்களிடம் கூறுகிறேன். சரஸ்வதி தேவியை அதற்குச் சம்மதிக்கச் சொல்லுங்கள்" என்றார்.
அவர் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த தேவர்கள் அகமகிழ்ந்தனர்.
ஆனால் தேவர்கள் முன்வைத்த கோரிக்கையைக் கேட்டு, அன்னை சரஸ்வதிதேவி கலக்கமுற்றாள்.
``நீங்கள் சொல்வதைச் செய்தால் உலகம் என்னையல்லவா தூற்றும்? என்னால் முடியாது'' என்றாள்.
``தங்களை விட்டால் எங்களுக்கு யார் உதவுவார்கள் தேவி?" என்று தேவர்கள் வேண்டினர்.
``ராமன் காட்டுக்குச் செல்ல நான் காரணமாக இருக்க மாட்டேன்..” என மறுத்தாள் சரஸ்வதி தேவி.
``அன்னையே தாங்கள் அறியாதது அல்ல. தேவர்களின் இன்னல்கள் தீரவும் ராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறவும் தாங்கள்தான் உதவ வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் சரஸ்வதியை நாரத மகரிஷி உள்ளிட்ட தேவர்கள் வற்புறுத்தினர்.
அதற்குப் பின், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டாள் சரஸ்வதி தேவி. “ராமன் காட்டுக்குச் சென்றால், ராமாயணம் என்ற காவியம் உருவாகும். கவிகள் எல்லாரும் என்னை அணி செய்வர்” என்னும் கருத்தைத் தன் மனத்தில் ஓடவிட்ட சரஸ்வதி, தேவர்களின் வேண்டுகோளுக்கு மகிழ்ந்து சம்மதித்தார். அந்த வேண்டுகோள் இதுதான்:
``சாட்சாத் அன்னை சரஸ்வதி தேவியே, மந்தரையின் (கூனி) வடிவில் சென்று கைகேயியின் மனத்தில் பொறாமை விதையை விதைத்தாள்" என்று புதிய கோணத்தைத் தருகிறது துளசி தாஸரின் ``ராமா சரிதா மானஸம்”.