சீராக்கின் ஞானம் - அதிகாரம் 10

சீராக்கின் ஞானம் - அதிகாரம் 10
Updated on
1 min read

புனித விவிலியத்தை (The Bible) பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளாகப் பகுக்கலாம். அதில், சீராக்கின் ஞானம் (Book of Sirach) என்னும் நூல், பழைய ஏற்பாட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ள ஓர் இணைத் திருமறை நூல். அன்றாட வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஞானம், அறம் குறித்து தத்துவார்த்தமான அறிவுரைகளை முன்வைக்கும் இந்த நூலின் ஆசிரியர் பொ.ஆ.(கி.மு.)180இல் ஜெருசலேம் நகரில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சீராக் என்பவரின் மகனான இயேசு என்கிற யூதமத அறிஞரால் எழுதப்பட்டது. இந்நூலின் 10வது அத்தியாயம் சுருக்கமாக இங்கே:

ஆட்சியாளர்

 நற்பயிற்சி பெறாத மன்னர், தம் மக்களை அழிப்பார்; ஆட்சியாளர்களின் அறிவுக் கூர்மையால் நகர் கட்டியெழுப்பப்படும்.

 மண்ணுலகில் அதிகாரம் கடவுளின் கையில் உள்ளது; ஏற்ற தலைவரைத் தக்க நேரத்தில் அவரே எழுப்புகிறார்.

இறுமாப்பு

 அநீதி ஒவ்வொன்றுக்காகவும் அடுத்திருப்பவர்மீது சினம் கொள்ளாதே; இறுமாப்புள்ள செயல்கள் எதையும் செய்யாதே.

 இறுமாப்பை ஆண்டவரும் மனிதரும் வெறுப்பர்; அநீதியை இருவரும் பழிப்பர்.

 அநீதி, இறுமாப்பு, செல்வம் ஆகியவற்றால் ஆட்சி கைமாறும்.

 புழுதியும் சாம்பலுமாக மனிதர் எவ்வாறு செருக்குற முடியும்? உயிரோடு இருக்கும்போதே அவர்களது உடல் அழியத் தொடங்கும்.

 நாள்பட்ட நோய், மருத்துவரைத் திணறடிக்கிறது; இன்று மன்னர், நாளையோ பிணம்!

 மனிதர் இறந்தபின் பூச்சிகள், காட்டு விலங்குகள், புழுக்களே அவர்களது உரிமைச்சொத்து ஆகின்றன.

 ஆளுநர்களின் அரியணையினின்று ஆண்டவர் அவர்களை வீழ்த்துகிறார்; அவர்களுக்குப் பதிலாகப் பணிவுள்ளோரை அமர்த்துகிறார்.

 செருக்கு மனிதருக்கென்று படைக்கப்பட வில்லை; கடுஞ் சீற்றமும் மானிடப் பிறவிக்கு உரியதல்ல.

 செல்வர், மாண்புமிக்கோர், வறியவர் ஆகிய எல்லாருக்கும் உண்மையான பெருமை என்பது கடவுளிடம் கொள்ளும் அச்சமே.

 ஏழைகளை இழிவுபடுத்தல் முறையன்று; பாவிகளைப் பெருமைப்படுத்துவதும் சரியன்று.

 பெரியார்கள், நடுவர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோர் பெருமை பெறுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரைவிட இவர்களுள் யாருமே பெரியவர் அல்லர்.

பணிவு

 நீ உன் வேலையைச் செய்யும்போது, உன் ஞானத்தைக் காட்டிக் கொள்ளாதே; வறுமையில் வாடும்போது உன்னையே பெருமைப்படுத்திக் கொள்ளாதே.

 குழந்தாய், பணிவிலே நீ பெருமைகொள்; உன் தகுதிக்கு ஏற்ப‌ உன்னையே நீ மதி.

 தங்களுக்கு எதிராகவே குற்றம் செய்வோரை நீதிமான்களென யார் கணிப்பர்? தங்கள் வாழ்வையே மதிக்கத் தெரியாதவர்களை யார் பெருமைப்படுத்துவர்?

 ஏழையருக்குத் தங்கள் அறிவாற்றலால் சிறப்பு.

 வறுமையிலேயே பெருமை பெறுவோர் செல்வச் செழிப்பில் எத்துணைப் பெருமை அடைவர்! செல்வச் செழிப்பிலேயே சிறுமையுறுவோர் வறுமையில் எத்துணைச் சிறுமையுறுவர்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in