

உலகில் அநீதியின் சொரூபமாய் ஒன்று தோன்றும்போது, அதை அடக்கும் அல்லது அழிக்கும் அவதாரம் ஒன்றும் உருவாகிறது.
இப்படித்தான் நம் மண்ணில் பண்டிகைகளுக்கும் திருவிழாக்களுக்கும் பின்னணியில் அநீதியை சம்ஹாரம் செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறியிருப்பதைப் புராணங்கள் உணர்த்துகின்றன.
அந்த வகையில் முப்பெரும் தேவியரான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி ஆகிய மூவரும் ஒருவராகி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்வதற்காக விரதமும் தவமும் இயற்றிய ஒன்பது நாட்களே நவராத்திரி வைபவமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
ஒவ்வொரு வீட்டிலும் கொலு வைப்பதன் தாத்பர்யம், கொலுவின் வழியாக சக்தியின் எல்லா அம்சங்களும் வீட்டில் நிறைவாக இருக்கும் என்பதுதான்.
நவராத்திரி பூஜையின் பயன்
நவராத்திரி நோன்பிருந்து தினம் தினம் வீட்டில் அவர்களின் சக்திக்கேற்ப எளிய பொருட்களை நைவேத்தியமாகப் படைத்தபின், வீட்டிற்குக் கொலுவைப் பார்க்க வருபவர்களை உபசரித்து, மஞ்சள், குங்குமம், பழம் கொடுக்க வேண்டும். அளிப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் அம்பிகையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
கொலுவைப் பார்க்க வரும் குழந்தைகளும் பெண்களும் சேர்ந்து இறைவனின் நாமாவளிகளைப் பாடும்போது, அங்கே நன்மையும் ஆரோக்கியமும் எல்லாருக்கும் கிடைக்க இறையை நோக்கிய ஒருமுகமான பிரார்த்தனை தன்னியல்பில் வெளிப்படும்.
இதுவொரு பரவசமான சத்சங்க வழிபாட்டு முறை. இப்படியான வழிபாட்டை நம் இல்லங்களில் நடத்துவதற்கான நல்வாய்ப்பாக நவராத்திரி விழா கொண்டாடப்படும் ஒன்பது நாட்களும் அமைவது இந்தப் பண்டிகையின் தனிச் சிறப்பு.
கோலங்களில் உறையும் தேவி
நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான கோலம் போடுவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். முதல் நாளில் அரிசியை அரைத்து மாவாக்கிச் சலித்து அரிசி மாவுக் கோலம் இடுவது சிறப்பு. இரண்டாவது நாளில் கோதுமை தானியத்தைப் பயன்படுத்திக் கோலம் இடுகின்றனர்.
மூன்றாவது நாளில் முத்து மலர் கோலம் இடுகின்றனர். நான்காம் நாளில் அட்சதைப் பூக்களைக் கொண்டு கோலம் இடுகின்றனர். ஐந்தாம் நாளில் கோலத்தில் கடலை மாவைக் கொண்டும், ஆறாம் நாளில் பருப்பு மாவைக் கொண்டும் கோலம் இடுகின்றனர்.
ஏழாம் நாளில் வெண்ணிற மலர்களைக் கொண்டு கோலம் இடுவது சிறப்பு. எட்டாம் நாளில் தாமரை வடிவக் கோலம் போடுவது நலம். ஒன்பதாம் நாளில் நறுமணப் பொடிகளைக் கொண்டு கோலம் இடுவது சிறப்பு.
ஒன்பதின் சிறப்பு
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தசரா பண்டிகை என்னும் பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பது கிரகங்கள். ஒன்பது தானியங்கள், ஒன்பது மாலைகள், ஒன்பது ரத்தினங்கள்.. என ஒன்பதின் பெருமையைக் கூறிக் கொண்டே போகலாம். பெருமிதம், அமைதி, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, உவகை ஆகிய ஒன்பதும் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள நவரசங்கள்.
`ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்/ ஐம்புலன் கதவை அடைப்பதுங் காட்டி' என்கிறது விநாயகர் அகவல். ஒன்பதின் பெருமையை உணர்த்தும் வகையிலேயே இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் கீர்த்தனைகளைப் படைத்துள்ளார்.