

அம்பிகையின் அருள் வடிவங்களில் ஒன்றாக வணங்கப்படுபவள் காத்யாயனி தேவி. ஒன்பது சக்தி வடிவங்களில் ஏழாவது வடிவமான துர்க்கை வடிவில் காத்யாயனி தேவி எழுந்தருள்கிறாள் என்று சக்தி மகிமை நூல்களில் பிரதானமாக விளங்கும் தேவி பாகவதம் கூறுகிறது.
கிருஷ்ண பரமாத்மாவுக்கும் ராதைக்கும் திருமண பந்தம் ஏற்படும் நாள் தள்ளிக்கொண்டே போனது. அப்போது காட்டுவழியே சென்றபோது காத்யாயன முனிவரை எதிரில் கண்டு வணங்கியபோது தன்னுடைய வாக்கிலிருந்து வந்த பீஜ மந்திரங்களைக் கொண்டு காத்யாயனியை வழிபடச் சொன்னதாக புராணச் செய்தி உண்டு.
‘காத்’ என்றால் திருமணம். ‘அயனம்’ என்றால் ஆறு மாத காலம். இதுவே காத்யாயனி என்பதன் உட்பொருள். அதாவது, தன்னை முறைப்படி வணங்கும் பெண்ணுக்கு ஆறு மாத காலத்துக்குள் திருமணத்தை நடத்திவிடுபவள் காத்யாயனி என்பது பொருள்.
சக்தி வாய்ந்த அம்பிகையின் திருத்தலம் சென்னை - குன்றத்தூரின் தென்பகுதியில் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் கோயில்கொண்ட இடத்துக்கு எதிரில் அமைந்துள்ளது.
குடும்ப பிரச்சினை, உறவினர் பிரச்சினை போன்றவை தீர்ந்து திருமணம் கைகூட இந்த அம்பிகையின் சந்நிதியில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய தினங்களில் ஒரு நாளை எடுத்துக்கொண்டு மூன்று முறை சென்று வழிபட வேண்டும்.
முதல் வாரம் காத்யாயனி பூஜை, இரண்டாம் வாரம் விவாஹ ரட்சா பூஜை, மூன்றாம் வாரம் ஜென்ம பத்ரிகா பூஜை என்றபடி செய்து மங்கள ரட்சை கட்டிக்கொள்ள வேண்டும். களத்திர தோஷத்தால் திருமணம் தடைபடும் பெண்களுக்கு சுபநாளில் காமேஸ்வரி துளசி யக்ஞம் என்கிற விவாஹ வேள்வி நடத்தப்படுகிறது.
ஆலயத்தில் தோரண கணபதி, மாரி சக்தி, பாலமுருகன், நாகராஜர், துர்க்கை, பத்ம விமானக் கருவறையின் கிழக்கே திருமுகம் கொண்டு ஒளிதரும் சந்திரகாந்தக் கல்லால் செதுக்கப்பட்ட வளாகத்தில் அமர்ந்து அருள் தருகிறாள் காத்யாயனி.
ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் மாலை ஆறு மணிக்கு புத்ர லாபம் அருளும் பாலகாத்யாயனி யக்ஞம் செய்து பக்தர்களுக்கு மூலிகை மருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.